Published : 13 Feb 2018 10:05 AM
Last Updated : 13 Feb 2018 10:05 AM

ஜனவரி பணவீக்கம் 5.07 சதவீதம்: புள்ளியியல் அமைச்சகம் தகவல்

இந்தியாவின் ஜனவரி மாத பணவீக்கம் குறைந்து 5.07 சதவீதமாக இருக்கிறது. தொழில் உற்பத்திக் குறியீடு டிசம்பரில் 7.1 சதவீதமாக உள்ளது. உற்பத்தி அதிகமாக இருந்த காரணத்தால் தொழில் உற்பத்தி குறியீட்டில் முன்னேற்றம் இருக்கிறது நவம்பர் மாத தொழில் உற்பத்தி குறியீடு 8.8 சதவீதமாகும். பதினேழு மாதங்களுக்குப் பிறகு கடந்த டிசம்பரில் பணவீக்கம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பரில் பணவீக்கம் 5.21 சதவீதமாக இருந்த நிலையில் ஜனவரியில் 5.14 சதவீதமாக பணவீக்கம் இருக்கும் என ராய்ட்டர்ஸ் கணித்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூத்த பொருளாதார வல்லுநர் துஷார் அரோரா, ஜனவரி-மார்ச் காலாண்டில் பணவீக்கம் 5 சதவீதம் என்னும் நிலையிலே மாறி மாறி நிலைகொள்ளும், பின்னர் கோடைக் காலத்தில் ஆறு சதவீதத்தை தொடும் என்றார்.

பணவீக்கம் குறித்து டிபிஎஸ் வங்கியின் பொருளாதார நிபுணர் ராதிகா ராவ் கூறுகையில், உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட சிறிய மாற்றங்களின் காரணமாக பணவீக்கம் சிறிதளவு குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் வீட்டு வாடகை சலுகை காரணமாக பணவீக்கம் உயரலாம். வட்டி விகிதங்களில் ஏற்கெனவே மாற்றம் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டதால் அடுத்த சில மாதங்களுக்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என்று கூறினார். மேலும் தொழில் உற்பத்திக் குறியீட்டு வளர்ச்சி, சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி என்றும் குறிப்பிட்டார்.

பணவீக்கத்தைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலையைவிட பருவமழை முக்கியப் பங்கு வகிக்கும், பருவமழை நன்றாக இருக்கும் பட்சத்தில் பணவீக்கம் மேலும் குறையும் என்று லேடர் அப் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரகுவேந்திரநாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x