Published : 17 Dec 2017 11:07 AM
Last Updated : 17 Dec 2017 11:07 AM

இணைய சமவாய்ப்பு விவகாரம் ஃபேஸ்புக் இலவச சேவைக்கு அனுமதி தர மறுப்பு: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இலவச இணைய சேவைக்கான அனுமதி வழங்க மறுத்ததாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இண்டர்நெட்டை அனைவரும் பயன்படுத்தும் உரிமைக்கு தடைவிதிக்க முடியாது. அதனால் ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் இலவச இணைய சேவையை தொடங்குவதற்கு கோரிய அனுமதியை மறுத்தேன். முழுவதும் இலசவசமாக மட்டும் இருந்தால் இந்தியாவுக்கு வரலாம். ஆனால் இதில் அப்படி வழங்கும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் இலவச இணையச் சேவைக்கான அனுமதியை மறுத்தேன்.

இணையச் சமவாய்ப்பை பொறுத்தவரை அமெரிக்கா நேர்மறையாக எடுத்துள்ளது. ஆனால் நம்நாட்டை பொறுத்தவரை ஒரு விஷயம் தெளிவாக இருக்கவேண்டும். இணையத்தை பயன்படுத்துவதற்கான உரிமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது.

இணையம் என்பது உலகத்தில் மிக உன்னத கண்டுபிடிப்பு என்று நான் நம்புகிறேன். அது அனைவரையும் சென்று சேர வேண்டும். சர்வதேச தளமாக இணையம் இருந்தால் அதை உள்நாட்டோடு இணைக்க வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பை 1 லட்சம் கோடி டாலராக உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்நாட்டு மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் சமீபத்தில் அந்தப் பொருட்களின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

நான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பேற்கும் போது இரண்டு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 108 மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இண்டர்நெட் பயன்படுத்துவதற்கான கட்டணத்தில் வேறுபாடுகளை களைவதற்கு தொலைத்தொடர்பு துறை கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் விதிமுறைகளை வெளியிட்டது. இதன்மூலம் இலவச இணைய சேவை மற்றும் ஏர்டெல் ஜீரோ போன்ற திட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

மேலும் கட்டண வேறுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக, ஆபரேட்டர்கள் இண்டர்நெட் நிறுவனங்களுடன் எந்தவித ஒப்பந்தமும் போடக்கூடாது என்று டிராய் உத்தரவிட்டது. மேலும் இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று டிராய் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் இலவச இணைய சேவை என்பது சில இணையதளங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயன்படுத்தமுடியும் என்பதாகும்

. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x