Published : 05 Dec 2017 08:59 AM
Last Updated : 05 Dec 2017 08:59 AM

இந்தியா சுமத்தியுள்ள மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மல்லையா பதிலளிக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையா அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ. 9 ஆயிரம் கோடி வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி வந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக அவர் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஜாமீன் காலம் இம்மாதம் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது.

விசாரணை தொடங்கி சிறிது நேரத்திலேயே தீ எச்சரிக்கை மணி நீதிமன்ற வளாகத்தில் ஒலித்தது. இதனால் வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். நீதிமன்றம் முழுவதும் சோதிக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணை தொடர்ந்தது. இதனால் விசாரணை சிறிது நேரம் தடைப்பட்டது.

இந்திய அரசு சார்பில் கிரவுன் பிராசிகியூஷன் சர்வீசஸ் (சிபிஎஸ்) எனும் நிறுவன வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகள் கடன் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, இந்த வழக்கின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தகைய மாற்றம் நிகழ்ந்தது என்பதை விரிவுபடுத்தினர். சிபிஎஸ் சார்பில் மார்க் சம்மர்ஸ் வழக்கு விவரங்களை வரிசையாக எடுத்துரைத்தார்.

இந்திய ஏர்லைன்ஸ் துறை மிக மோசமாக இருந்த நிலையில் நஷ்டத்தில் இயங்கிய கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை லாபப் பாதைக்கு திருப்புவதற்காக தொடர்ந்து கடன் வாங்கப்பட்டிருப்பதையும் வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.

முதல் நாள் விசாரணையில் அரசு தரப்பு வாதம் மட்டுமின்றி மல்லையா தரப்பு வாதத்தையும் நீதிபதிகள் கேட்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிபிஎஸ் வழக்கறிஞரோ நிதானமாக வழக்கு விவரங்களை எடுத்து வைத்ததோடு இதில் அவசர கதியில் செல்லத் தேவையில்லை என்றார்.

இந்தியாவிலிருந்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் 4 பேரடங்கிய குழு லண்டன் சென்றுள்ளது.

சிபிஐ சார்பில் 2,000 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் இந்திய வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட கடன் தொகையை வேறு வகையில் செலவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா சார்பில் வழக்கறிஞர் கிளேர் மான்ட்கோமெரி ஆஜராகி அவர் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

விசாரணை தொடங்கும் முன்பு இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றம் வந்த விஜய் மல்லையா, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார். 1992-ம் ஆண்டிலிருந்து தாம் இங்கிலாந்தில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். தன்மீது போடப்பட்ட வழக்குகள் தவறானவை என்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் பல சந்தர்ப்பங்களில் தான் கூறிவருவதாகவும் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையில் முடிவெடுக்கும் நிலையில் தான் இல்லை என்றும் நீதிமன்ற நடைமுறை, விதிமுறைகள் படிசெயல்படப் போவதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x