Published : 14 Nov 2017 10:05 AM
Last Updated : 14 Nov 2017 10:05 AM

ஆன்லைன் ராஜா 01: உலக நாயகன்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் 136. இவற்றுள் சிறந்த பத்துப் படங்களை யார் பட்டியலிட்டாலும் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் தவறாமல் இடம் பெறும். 1956 – ஆம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய படம். இன்னொரு தனிப்பெருமை, தென்னிந்திய மொழிகளிலேயே தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம்.

தெலுங்கில் என்.டி. ராமராவ் ஜெயலலிதா ஜோடி சேர்ந்த அலிபாபா 40 டொங்காலு, இந்தியில் தர்மேந்திரா, ஹேமமாலினி நடித்த அலிபாபா 40 சோர், வங்க மொழியில் அலிபாபா என்பவை மட்டுமல்ல, அரபு, ஆங்கிலம், பிரெஞ்ச் போன்ற பல மொழிகளிலும் செம ஹிட். சினிமாவோடு, கார்ட்டூன்கள், டி.வி. தொடர்கள், நாடகங்கள், வீடியோ கேம்ஸ் எனப் புகுந்த இடமெல்லாம் கலக்கல்.

அலிபாபா யார் என்று கேட்டுப் பாருங்கள். சின்னக் குழந்தையும் சொல்லும், நம் பள்ளிக்கூடங்களில் நேர்மைக்கு உதாரணமாக அலிபாபா கதையைச் சொல்லித்தருகிறார்கள். 8 – லிருந்து 13 – ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் அரேபிய நாட்டுப் பழங்காலக் கதைகளின் தொகுப்பு, 1001 இரவுகள். இதில் வரும் ஒரே ஒரு கதையின் ஹீரோவுக்கு உலகம் முழுக்க இத்தனை ரசிகர் பட்டாளமா?

சுவாரஸ்யமான அந்தக் கதையைச் சுருக்கமாக நினைவுபடுத்திக்கொள்வோம்.

ஒன்ஸ் அப்பான் எ டைம், லாங் லாங் எகோ, நோபடி நோஸ் ஹெள லாங் எகோ, பாரசீக நாட்டில் காசிம், அலிபாபா என்னும் அண்ணன் – தம்பி வசித்தார்கள். காசிம் பணக்கார வியாபாரி. அலிபாபா ஏழை விறகுவெட்டி.

ஒரு நாள். வழக்கம்போல் அலிபாபா காட்டுக்கு மரம் வெட்டப்போனார். ஏராளமான குதிரைகள் ஓடிவரும் சப்தம். பயந்து மரத்தில் ஏறிக்கொண்டார். ஒரு தலைவன், அவனோடு நாற்பது பேர் வந்தார்கள். குதிரைகளை மரங்களில் கட்டினார்கள். தலைவன் அடர்ந்திருந்த புதருக்கு முன்னால் போனான். திறந்திடு சீஸேம் என்று மந்திரம்போல் உச்சரித்தான், ஆச்சரியம். புதருக்குள்ளிருந்து ஒரு குகை மாயாஜாலமாகத் திறந்தது. 40 பேரும் முதுகில் பெரிய பைகளைச் சுமந்தபடி குகைக்குள் போனார்கள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள். அவர்கள் பைகள் காலி. இப்போது தலைவன் இன்னொரு மந்திரம் உச்சரித்தான், மூடிடு சீஸேம். மூடியது குகை.

திருடர்கள் போனபின் அலிபாபா மரத்திலிருந்து கீழே இறங்கினார். புதர் அருகே போனார். திறந்திடு சீஸேம் சொன்னார். குகை திறந்தது. உள்ளே போனார். பிரமித்தார். தங்க, வெள்ளி நகைகள், நாணயங்கள மலைபோல் குவிந்திருந்தன. பையை நிரப்பினார். மூடிடு சீஸேம் சொன்னார். குகை மூடியது. வீடு திரும்பினார்.

நகைகளை எடைபோட அலிபாபா அண்ணியிடம் தராசு இரவல் வாங்கினார். அவருக்கு ஏன் தராசு என்று சந்தேகப்பட்ட அவள் தராசின் அடிப்பாகத்தில் மெழுகை வைத்தாள். அலிபாபா திருப்பிக்கொடுத்தபோது மெழுகில் ஒரு தங்க நாணயம் ஒட்டியிருந்தது . காசிம் தம்பியிடம் வந்து விசாரித்தார். அலிபாபா பொய் சொல்லமாட்டார். நடந்தது முழுக்க விவரித்தார். குகையைத் திறக்கும், மூடும் இரண்டு மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

காசிம் பேராசைக்காரர். ஏராளமான பைகளோடும், அவற்றை ஏற்றிவரப் பல கோவேறு கழுதைகளோடும் போனார். திருடர்கள் போனபின் திறந்திடு சீஸேம் சொன்னார். உள்ளே போனார். பைகளை நிரப்பினார். புறப்பட்டார். இப்போது அவருக்கு மூடிடு சீஸேம் மந்திரம் மறந்துவிட்டது. கதறி அழுதார்.

பல மணி நேரங்கள் ஓடின. 40 திருடர்கள் திரும்பிவந்தார்கள். கோபத்தில் காசிமைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிக் குகை முன் வைத்தார்கள். அண்ணன் திரும்பிவராததால் கவலைப்பட்ட அலிபாபா குகைக்குப் போனார். அதிர்ச்சியடைந்தார். அண்ணனுக்கு இறுதிச் சடங்குகள் செய்யவேண்டுமே? உடல் துண்டுகளை வீட்டுக்குக்கொண்டுவந்தார். அவர்கள் வீட்டில் மார்ஜியானா என்னும் வேலைக்காரி. ஒரு தையல்காரரைக் கண்களைக் கட்டி அழைத்துவந்தாள். காசிம் உடலைத் தைத்தார். இறுதிச் சடங்குகள் முடிந்தன.

திருடர்கள் குகைக்குத் திரும்பினார்கள். காசிம் உடலைக் காணவில்லை. உடலை எடுத்துப்போனவனுக்கும் குகை ரகசியம் தெரியுமே? அவன் கதையையும் முடிக்கவேண்டும். ஒரு திருடன் வந்தான். தையல்காரன் மூலமாக அலிபாபா வீட்டைக் கண்டுபிடித்தான். பிறகு வந்து அவரைக் கொல்ல வேண்டும், வீடு அடையாளம் கண்டுபிடிப்பதற்காகக் கதவில் X குறி போட்டான். இரவில் வந்தான். அதிர்ச்சி. எல்லாக் கதவுகளிலும் X குறி. அவர்களின் சதித் திட்டத்தை யூகித்த மார்ஜியானா செய்த தந்திரம் இது. இன்னொரு முயற்சியையும் மார்ஜியானா முறியடித்தாள். இந்த இரண்டு முயற்சிகளையும் முன்னின்று நடத்திய இரு திருடர்களையும் அவர்கள் தலைவன் கொலை செய்தான்.

ஏமாற்றமடைந்த திருடர்கள் தலைவன் தானே களத்தில் இறங்கினான். எண்ணெய் வியாபாரியாக வேடம்போட்டு வந்தான். அவனோடு 38 பீப்பாய்கள். ஒரு பீப்பாயில் எண்ணெய். மற்ற ஒவ்வொரு 37 பீப்பாயிலும் ஒரு திருடன், கையில் கத்தியோடு. தலைவன் தான் எண்ணெய் வியாபாரி என்றும் இரவில் தங்க இடம் வேண்டுமென்றும் அலிபாபாவிடம் கேட்டான். இரக்க குணம் கொண்ட அலிபாபா சம்மதித்தார். மார்ஜியானா சதியைக் கண்டுபிடித்தாள். 37 பீப்பாய்களிலும் கொதிக்கும் எண்ணையை ஊற்றினாள். அனைவரும் இறந்தார்கள். தலைவன் தப்பிவிட்டான்,

தலைவன் வியாபாரி வேடத்தில் இன்னொரு நாள் இரவு வந்தான். நடனமாடியபடியே மார்ஜியானா அவன் வயிற்றில் கத்தியால் சதக், மரணமடைந்தான். மார்ஜியானாவின் புத்திசாலித்தனம் கண்டு மகிழ்ந்த அலிபாபா அவளைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்தார். குகையில் இருந்த செல்வங்களைத் தானும் தன் குடும்பமும் அனுபவித்ததோடு, கிராமத்து மக்களோடும் பகிர்ந்துகொண்டு நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

*****

சமீப காலமாக இன்னொரு அலிபாபாவும் உலக மக்கள் உள்ளங்களைக் கொள்ளையடித்து வருகிறார். இவருக்கும் பழங்கால ஹீரோவுக்கும் பல வித்தியாசங்கள். அவர் ஊர் பாரசீகம், இவர் தேசம் சீனா. அவர் கற்பனை. இவர் நிஜம். அவர் தனி மனிதர். இவர் பிசினஸ் குழுமம்.

யார் இந்த அலிபாபா?

1999- இல் ஜாக் மா என்பவர் சீனாவில் தொடங்கிய இணையதள விற்பனை நிறுவனம். இ-காமர்ஸில் சீனாவின் நம்பர் 1. உலகில் அமேசானுக்கு அடுத்தபடியாக நம்பர் 2.

அலிபாபாவுக்கும் பிசினஸுக்கும் என்ன சம்பந்தம்? தன் கம்பெனிக்கு இந்தப் பெயரை ஜாக் மா ஏன் வைத்தார் ?

அவருக்குப் பிடித்த சின்ன வயது ஹீரோ என்பது மட்டும் காரணமல்ல. அவரே, பெயர்க் காரணம் சொல்கிறார் - அலிபாபா உலகம் முழுக்க எல்லோருக்கும் தெரிந்த பெயர். எல்லா மொழியினரும் ஈசியாக உச்சரிக்கக்கூடிய பெயர். நேர்மையானவர், தன் கிராமத்து மக்கள் அனைவருக்கும் உதவிய நல்லவர். அவரைப்போல் இந்த நிறுவனமும் நேர்மையான வழியில் சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு மாபெரும் பிசினஸ், வாய்ப்புக் கதவுகளைத் திறக்கும், மக்களுக்குப் பலகோடிப் பொருட்களை நியாயவிலையில் தரும்.

சாதாரணமாக எல்லோரும் என்ன செய்வார்கள்? ``அலிபாபா எனக்குப் பிடித்த பெயர். என் பிசினஸுக்கு எனக்குப் பிடித்த பெயரைத்தான் வைப்பேன்” என்று பிடிவாதமாக இருப்பார்கள். தான் வித்தியாசமானவர் என்பதைப் பெயர் சூட்டலிலேயே ஜாக் மா காட்டினார். பிசினஸ் ஜெயிக்கவேண்டுமானால், கம்பெனியின் பெயர் தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சாமானியக் கஸ்டமருக்குப் பிடிக்கவேண்டும். நடத்தினார் ஒரு சுலபக் கருத்துக் கணிப்பு.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம். ஒரு உணவு விடுதியில் காபி குடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பணிப்பெண்ணிடம் கேட்டார்,

“உங்களுக்கு அலிபாபாவைத் தெரியுமா?”

“தெரியுமே? அலிபாபா என்றால் திறந்திடு சீஸேம்.”

ஆஹா! ஜாக் மா புல்லரித்தார். காபிக் கோப்பையை கிழே வைத்தார். வீதிக்கு ஓடினார். முதல் ஆளிடம் கேட்டார்,

“உங்களுக்கு அலிபாபாவை தெரியுமா?”

அவர் பதில் சொன்னவுடன், அடுத்தவரிடம் ஓடினார். ஆண், பெண், இளைஞர், வயதானவர், குட்டிப் பசங்கள் எனப் பல தரப்பட்ட மக்கள். எல்லோரிடமும் ஒரே கேள்வி சீனம் கலந்த ஆங்கில உச்சரிப்பு, கேள்வி கேட்கும்போது பதில் சொல்பவரின் முகத்தைத் தூண்டித் துருவும் கண் கூர்மை, அவர்களின் பதிலில் தன் வாழ்க்கையே இருப்பதுபோல் காட்டிய ஒருமுகக் கவனம், ஒருவர் பதில் சொன்னதும் அடுத்தவருக்கு ஓடிய ஸ்பீட், இவர் மூளை ஸ்க்ரூ கொஞ்சம் லூஸோ என்று பலருக்கு சந்தேகம். ஆனால், 30 பேர் பதில் தந்தார்கள். ஒரே பதில்.

“அலிபாபா என்றால் திறந்திடு சீஸேம்.”

கஸ்டமர் தீர்ப்பே கடவுள் தீர்ப்பு. ஜாக் மா கம்பெனியின் பெயர் அலிபாபா!

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x