Published : 12 Oct 2017 10:40 AM
Last Updated : 12 Oct 2017 10:40 AM

வளர்ச்சியை வேகப்படுத்தும் 10 காரணிகள்: பொருளாதார ஆலோசனைக் குழு அடையாளப்படுத்தியது

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும் 10 முக்கிய காரணிகளை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அடையாளப்படுத்தியுள்ளது. சமீப காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவடைந்ததால் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கினார்.

இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் 10 விஷயங்களை குழு அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பாக நிதிக் கொள்கை, நிதிக் கட்டுப்பாடு, வேலை வாய்ப்பு, பொது செலவுகள், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் அடுத்த ஆறு மாதத்தில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும் என அடையாளம் கண்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான அறிக்கை தயாரானதும் பிரதமர் நரேந்திர மோடியிடம் குழு அளிக்க உள்ளது. குறிப்பாக அடையாளம் கண்டுள்ள 10 காரணிகளை முறைப்படுத்துவது குறித்து நிதியமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளுடன் குழு ஆலோசனை மேற்கொள்ளும். ரிசர்வ் வங்கியுடனும் கலந்து ஆலோசிக்கப்படும் என்று பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி விகித சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இது தொடர்பாக குழுவின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் ஒருமித்த கருத்து உள்ளது. எங்களது முழு முயற்சியும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும்.

எங்களது குழு 10 முக்கிய விஷயங்களை அடையாளப்படுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட காரணிகளை நாளையே மாற்ற வேண்டும். முக்கிய விவகாரமாக முறைப்படுத்தப்படாத துறைகளை ஒருங்கிணைப்பது, பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்களின் பொருளாதார நிர்வாகம், நுகர்வு முறைகள், சமூக நிறுவன ங்களின் உற்பத்திகள் குறித்தும் குழு அடையாளப்படுத்தி யுள்ளது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக சரிந்தது. 2014-ம் ஆண்டில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் மிகப் பெரிய சரிவு இது. சர்வதேச பொருளாதார நிதியம் 2017-18ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 6.7 சதவீதமாக குறைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 7.2 சதவீதமாக கணித்திருந்தது.

குழுவின் ஐந்து உறுப்பினர்களும் 10 விவகாரங்களை பிரித்துக் கொண்டுள்ளனர். ஆனால் முன்னுரிமை அடிப்படையில் பிரித்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு உறுப்பினரும் 2 விவகாரங்களுக்கு பொறுப்பு வகிப்பார்கள். முடிவு செய்யப்பட்ட பணியை யார் வேண்டுமானாலும் முதலில் முடிக்கலாம். குழுவின் அடுத்த கூட்டம் மீண்டும் அடுத்த மாதத்தில் நடைபெறும். முடிவு செய்யப்பட்ட வேலைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் தனது கருத்துகளையும் எடுத்துரைத்தார். பல்வேறு கொள்கைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது குறித்தும் விளக் கினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x