Published : 11 Oct 2017 06:35 AM
Last Updated : 11 Oct 2017 06:35 AM

ஜிஎஸ்டி-யை தடுக்கும் முயற்சிகள் முறியடிப்பு: வாஷிங்டனில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே சீரான வரி அமலுக்கு வந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்தியாவில் இனி மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும் என்பதற்கு ஜிஎஸ்டி அமலாக்கம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது உத்வேகம் அளிப்பதாக ஜேட்லி சுட்டிக் காட்டினார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா வந்துள்ள ஜேட்லி, சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) ஆண்டுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

முன்னதாக நியூயார்க்கில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் அமெரிக்க இந்திய வர்த்தகக் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்றார். வாஷிங்டனில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜேட்லி பேசுகையில், ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள் எத்தகையவை என்ற கேள்விக்கு விரிவாக பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

நாடு முழுவதும் ஒற்றை வரி விதிப்பு முறையைக் கொண்டு வருவதற்காக ஜிஎஸ்டி-யை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை முறியடிக்கப்பட்டதோடு தற்போது மாநிலங்கள் அனைத்தும் இதை விரைவாக செயல்படுத்தி வருகின்றன.

இந்திய பொருளாதாரமானது சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் மாற்றமடைந்து வருகிறது. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளோ பாதுகாப்பு நடவடிக்கை என்ற பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்று சுட்டிக் காட்டினார்.

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. நேரடி முதலீடுகளில் 95 சதவீதம் வரை தானியங்கி முறையில் அனுமதிக்கப்படுகின்றன.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் கலைக்கப்பட்டு விட்டது. தற்போது வரி தொடர்பான 99 சதவீத விவரங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே தீர்க்கப்படுகின்றன. மாநிலங்கள் அனைத்தும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி வருகின்றன.

மிகப் பெரிய அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இந்தியா தயாராகி வருகிறது என்று ஜேட்லி கூறினார்.

தற்போது 250-க்கும் மேலான நெடுஞ்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தற்போது உபரியாக மின்சாரமும், அதிக சரக்குகளைக் கையாளும் வகையில் துறைமுகங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இளைய தலைமுறையினர் டிஜிட்டல் பரிவர்த்தனையை மிக அதிக அளவில் மேற்கொள்கின்றனர். மேலும் அரசின் சலுகைகள் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன என்றார் ஜேட்லி.

நியூயார்க்கில் அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் பேசுகையில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் முன் முயற்சிகளையும் ஜேட்லி பட்டியலிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x