Published : 05 Oct 2017 10:06 AM
Last Updated : 05 Oct 2017 10:06 AM

6 நாள் கால அவகாசமே உள்ளது: 20 லட்சம் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி படிவம் தாக்கல் செய்யவில்லை

ஜூலை மாதத்துக்கான இறுதி ஜிஎஸ்டி விண்ணப்பத்தை இன்னமும் 20 லட்சம் வர்த்தகர்கள் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக வர்த்தகர்களுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்புமாறு அமைச்சர் சுஷில் குமார் மோடி ஜிஎஸ்டிஎன் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜிஎஸ்டி நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) தொடர்பாக அமைச்சர் சுஷில் குமார் மோடி தலைமையிலான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டிஆர் - 1 படிவம் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 10-ம் தேதி எனவும், ஜிஎஸ்டிஆர் -2 தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது குறித்து ஆராயப்பட்டது.

இறுதி ஜிஎஸ்டிஆர் - 3 தாக்கல் செய்யும்போது அது ஜிஎஸ்டிஆர் - 1 மற்றும் ஜிஎஸ்டிஆர் - 2 ஆகியவற்றுடன் பொருந்த வேண்டும். இதைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 10-ம் தேதி ஆகும்.

இதுவரையில் ஜிஎஸ்டிஆர் - 1 படிவத்தை 33 லட்சம் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளனர். 53 லட்சம் ஜிஎஸ்டிஆர் - 3 பி வரி திரும்பப் பெறும் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் வர்த்தகர்கள் இன்னும் 6 நாளில் இறுதி படிவத்தை தாக்கல் செய்தாக வேண்டும்.

பீகாரின் துணை முதல்வரான சுஷில் குமார் மோடி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி செயல்பாடுகளை கவனித்து வருகிறது. ஜிஎஸ்டி படிவங்களை தாக்கல் செய்யுமாறு வர்த்தகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், தாக்கல் செய்யாதவர்களுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

ஜிஎஸ்டி இணைய தளத்துக்கான சேவையை இன்ஃபோசிஸ் அளிக்கிறது. ஜிஎஸ்டிஆர் - 2 படிவம் தாக்கல் செய்வதற்கான கட்டமைப்பு வசதியை அது விரிவுபடுத்தியுள்ளது. ஜிஎஸ்டிஆர்- 2 படிவம் தாக்கல் செய்வது அக்டோபர் 11 தொடங்கி 31 வரை மேற்கொள்ளலாம். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x