Published : 19 Sep 2017 10:08 AM
Last Updated : 19 Sep 2017 10:08 AM

தொழில் முன்னோடிகள்: பில் கேட்ஸ்

(சென்றவாரத் தொடர்ச்சி)

சாஃப்ட்வேர் என்னும் மூளை உழைப்புக்கு உரித்தான மரியாதையை வாங்கித் தந்தவர்கள் மைக்ரோசாஃப்ட்தான். அதுவரை, சாஃப்ட்வேர் எழுதியவர்கள் அதை வணிகக் கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை. அதை விற்றுப் பணம் சம்பாதிப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வாடிக்கையாளர்கள் ஓசியில் பயன்படுத்தினார்கள். பில் இதை மாற்றினார். வழக்கறிஞரான அப்பா உதவியுடன், MITS நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டார். இதன்படி, MITS பத்து ஆண்டுகளுக்கு மைக்ரோசாஃப்ட் தந்த சாஃப்ட்வேரை அவர்களே பயன்படுத்தலாம். வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தால் மைக்ரோசாஃப்டுக்கு ராயல்டி தரவேண்டும். பில் வளர்ச்சிக்கும், மென்பொருள் துறை வளர்ச்சிக்கும் இந்த ஷரத்து முக்கிய காரணியாக இருந்தது.

கடுமையாக உழைத்தும், மைக்ரோசாஃப்ட் கல்லாவில் பணம் கொட்டவில்லை. பில் காரணத்தை ஆராய்ந்தார். ஏராளமானோர் திருட்டுத்தனமாக காப்பி செய்து பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். தன் மூளை உழைப்பைத் திருடுகிறார்கள் என்று பில் மனதில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. An open letter to Hobbyists என்னும் தலைப்பில் பகிரங்கக் கடிதம் எழுதினார். “நீங்கள் கம்ப்யூட்டர் என்னும் ஹார்ட்வேரை பணம் கொடுத்து வாங்குகிறீர்கள். சாஃப்ட்வேரை ஏன் திருடுகிறீர்கள்?” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, பில்லுக்கு MITS நிறுவனத்துடன் பல உரசல்கள். தன் மென்பொருளைப் பிற கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்கும் விற்பனை செய்ய பில் விரும்பினார். MITS வழி மறித்தார்கள். வழக்கு நீதிமன்றம் போனது. ஜெயித்தது மைக்ரோசாஃப்ட்.

ரேடியோஷாக், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆகிய பெரிய நிறுவனங்களுக்குத் தன் மென்பொருளை விற்பனை செய்யத் தொடங்கினார். அடுத்து அவரைத் தேடி வந்தது ஒரு தங்கச் சுரங்கம். கம்ப்யூட்டர் உலகின் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஐ.பி.எம். மைக்ரோசாஃப்டை தேடி வந்தார்கள். அதுவரை பிரம்மாண்ட கம்ப்யூட்டர்கள் மட்டுமே தயாரித்துவந்த ஐ.பி.எம். பர்சனல் கம்ப்யூட்டர்களில் இறங்க முடிவு செய்திருந்தார்கள். அதற்கு சாஃப்ட்வேர் எழுதத்தான் இந்த அழைப்பு.

ஐ.பி.எம். அதிகாரிகளை சந்தித்தார் பில். பர்சனல் கம்ப்யூட்டர்களையும், அவற்றில் பயன்படும் மென்பொருள்களும் இணைந்து செயல்பட, இயக்குதளம் (Operating System) என்னும் விசேஷமான சாப்ட்வேர் தேவை. ``இதையும் செய்யமுடியுமா?” என்று பில்லிடம் கேட்டார்கள். நம்ம ஹீரோ, எந்த வாய்ப்பு கதவைத் தட்டினாலும், மாட்டேன் என்று சொல்லவே மாட்டார். ``மைக்ரோசாஃப்டால் (என்னால்) சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை” என்னும் அபாரத் தன்னம்பிக்கை, நேர்வழியோ, குறுக்கு வழியோ, நினைத்ததை முடிக்கும் உறுதி.

இப்போது பில் பயன்படுத்தியது குறுக்கு வழி. இயக்குதளம் தயாரிக்கும் திறமை அப்போது மைக்ரோசாஃப்ட்டில் இருக்கவில்லை. SCP என்னும் நிறுவனம் அந்த மென்பொருளை தயாரித்திருந்தார்கள். பில் அவர்களிடம் போனார். ஆபரேட்டிங் சிஸ்டத்தை பிற கம்ப்யூட்டர்களுக்கு மாற்றித் தரும் உரிமையை 20,000 டாலர்களுக்கு வாங்கினார். இது பெரிய தொகை. SCP ஆனந்த அதிர்ச்சியோடு உரிமையைத் தந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது, கொஞ்சம் மாற்றம் செய்து, ஐ.பி.எம் – க்கு விற்று பில் பல லட்சம் டாலர்கள் பார்க்கப்போகிறாரென்று.

வாக்குக் கொடுத்தபடி, ஒரே வருடத்தில், ஐ.பி.எம் – க்கு, மென்பொருள், இயக்குதளம் ஆகிய இரண்டையும் பில் தந்துவிட்டார். மைக்ரோசாஃப்டோடு போட்ட ஒப்பந்தத்தில் ஐ.பி.எம் ஒரு தவறு செய்துவிட்டார்கள். தங்களுக்காக உருவாக்கப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டத்தின் முழு உரிமையும் தங்களுக்குத்தான், வேறு யாருக்கும் மைக்ரோசாஃப்ட் அதை விற்கக்கூடாது என்று நிபந்தனை போட்டிருக்கவேண்டும். போடத் தவறி விட்டார்கள். அவர்களின் கவனக் குறைவு, மைக்ரோசாஃப்டின் லாட்டரிப் பரிசானது.

ஐ.பி.எம். பர்சனல் கம்ப்யூட்டர்கள் சூப்பர் ஹிட். 1980 காலகட்டத்தில் வீட்டுக்கு வீடு பர்சனல் கம்ப்யூட்டர் பயன்படத் தொடங்கியது. MS – DOS என்னும் பெயரில் பில் ஆபரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்தார். அவர் இயக்குதளத்தைப் பயன்படுத்தாத கம்ப்யூட்டரே இல்லை என்னும் அளவுக்கு ஆரவார வரவேற்பு, விற்பனை.

1985 – ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 1 என்னும் ஆபரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்தது. இது கம்ப்யூட்டர்களில் ஆமை வேகத்தில் வேலை செய்தது. அடுத்த ஐந்து ஆண்டுகள். ஆமை புயலானது. விண்டோஸ் 3 அறிமுகமானது. இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தில் வேகம் மட்டுமல்ல, விவேகமும் அதிகம். கடிதங்கள் அடிக்கும் வேர்ட், கணக்குப் போட உதவும் எக்ஸெல், தகவல்களை அழகாக சமர்ப்பிக்க உதவும் பவர் பாயிண்ட் ஆகிய மென்பொருள்கள் இருந்தன.

கம்ப்யூட்டர் பயன்படுத்தலில் புது யுகம் பிறந்தது. எக்ஸெலில் இருந்து புள்ளிவிவரத்தை எடுத்து வேர்டில் ஆவணமாகத் தயாரித்து பவர்பாயிண்டில் இணைப்பது சர்வ சாதாரணமானது. இந்த மூன்று மென்பொருள்களும் சேர்ந்த பேக்கேஜிக்கு ஆபீஸ் என்று மைக்ரோசாஃப்ட் பெயர் சூட்டியது.

’கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இத்தனை ஈசியா?’ வாடிக்கையாளர்கள் க்யூவில் நிற்கத் தொடங்கினார்கள். விண்டோஸ் பொருத்திய கம்ப்யூட்டர்களுக்கு அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் நிரந்தர இடம் ஒதுக்கினார்கள். கடிதங்கள் டைப் செய்யவேண்டுமா? கம்ப்யூட்டர் கொண்டு வா!. கணக்குகள் போட வேண்டுமா? எடு கம்ப்யூட்டரை! தகவல்களை அழகாக சமர்ப்பிக்க வேண்டுமா? கூப்பிடு கம்ப்யூட்டரை. சகலம் கம்ப்யூட்டர் மயம்!

1991. தொலைத்தொடர்புத் துறையின் மாபெரும் மைல்கல். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க ராணுவத்தினரின் ஏகபோக உரிமையாக இருந்த வையக விரிவு வலையை (இண்டெர்நெட்) பொதுமக்களின் உபயோகத்துக்கு அனுமதித்தார். இணையம் என்கிற வலைப் பின்னலில் யார் வேண்டுமானாலும் தங்கள் கணினியை இணைக்கலாம். உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் தொடர்பு கொள்ளலாம். தகவல் பரிமாற்றம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாத மின்னல் வேகத்தில், சல்லிசான விலையில்!

வீட்டில் தொலைபேசி இணைப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்தத் தொலைபேசிக் கருவி வேண்டுமல்லவா? அதைப்போல் இணைய தளத்தில் பவனி வர இணைய உலாவிகள் (Web Browsers) தேவை. நெட்ஸ்கேப் நிறுவனம் இணைய உலாவிகள் தயாரிக்கத் தொடங்கியது. தனிக்காட்டு ராஜாவானது.

போட்டியாளர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு பில்லுக்குக் கிடையாது. அவர்களைத் துவம்சம் செய்யத் துடிப்பார். மைக்ரோசாஃப்டின் வேர்ட், எக்ஸெல், பவர் பாயிண்ட் ஆகியவற்றோடு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்னும் இணைய உலாவியையும் சேர்த்து விண்டோஸ் 98 என்னும் பொட்டலமாக்கிக் கொடுத்தார். வெகு சீக்கிரமே, தாக்குப் பிடிக்கமுடியாமல், நெட்ஸ்கேப், அமெரிக்கா ஆன்லைன் என்னும் கம்பெனிக்கு விலை போனது. கம்ப்யூட்டர் மென்பொருள், இயக்குதள உலகம் மைக்ரோசாஃப்ட் கையில். ராக்கெட் வேக வளர்ச்சி.

மைக்ரோசாஃப்டின் பயணம் ராஜபாட்டையல்ல. பில் சந்தித்த சவால்கள் பல. போட்டியாளர்களின் மென்பொருட்களைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களை மைக்ரோசாஃப்ட் மிரட்டுவதாக வழக்குகள் வந்தன. இவை ஆதாரமுள்ள குற்றச்சாட்டுக்கள் என்று அமெரிக்க, ஐரோப்பிய நீதிமன்றங்கள் முடிவு செய்தன. பெரும் அபராதம் சுமத்தின. தொட்டதெல்லாம் வெற்றியாகவும் மைக்ரோசாஃப்டுக்கு இருக்கவில்லை. இணைய உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், MSN என்னும் ஈ மெயில் சேவை ஆகியவற்றில் மைக்ரோசாஃப்டால் யாஹு, கூகுள் நிறுவனங்களுடன் மோத முடியவில்லை. தோல்வி.

2000. பில் மைக்ரோசாஃப்டின் சிஇஓ. பதவியிலிருந்து விலகிக்கொண்டார். பணம் திகட்டிவிட்டதோ? சேர்த்த செல்வத்தால் இல்லாதோருக்கு உதவ வேண்டும் என்னும் ஆசை பிறந்தது. மனைவி பெயரையும் சேர்த்து, பில் மெலிண்டா அறக்கட்டளை தொடங்கினார். 2008-ம் ஆண்டு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலிருந்தும் முழுமையாக விலகினார்.

ஓய்வு பெற்றதும் பில் சொன்னார், “நான் கடற்கரையில் சும்மா உட்காருபவனல்ல.” சொன்னபடியே, அறக்கட்டளையின் செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ”தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதுபோல், அடுத்த தலைமுறையில் இல்லாதவர்களை இல்லாமல் செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் குறிக்கோள். இதற்காகக் கல்வி மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம், தொற்று நோய்கள் தடுப்பு எனப் பல்வேறு துறைகளில் உலகின் பல நாடுகளில் முயற்சிகள் எடுத்து வருகிறார்.

இரண்டு கைகள் ஆறானால், உலகுக்கேதான் எதிர்காலம் என்பது பில் கொள்கை. இதன்படி, வாரென் பஃபெட், மார்க் ஸக்கர்பெர்க் ஆகிய இரு சக கோடீஸ்வரர்களுடன் சேர்ந்து ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறார். இதன்படி, தங்கள் சொத்தில் பாதியைச் சமூக சேவைக்கு வழங்கும் உறுதிமொழியை மூவரும் எடுத்திருக்கிறார்கள். இந்தச் செயல் பிறரையும் வாரி வழங்கத் தூண்டும் கிரியா ஊக்கியாக இருக்கிறது.

சம்பாதிப்பது ஒரு கலை. அதைச் சமூகச் சிந்தனையோடு செலவிடுவதும், பள்ளத்தில் வீழ்ந்தோரைக் கை தூக்கி விடுவதும் அதைவிடப் பெரிய கலை. பில் கேட்ஸ் இரண்டிலும் கில்லாடி.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x