Published : 14 Sep 2017 07:39 AM
Last Updated : 14 Sep 2017 07:39 AM

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த திட்டம்? - எண்ணெய் நிறுவன பங்குகள் கடும் சரிவு

பெட்ரோல் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே மீண்டும் எடுத்துக் கொள்ள உள்ளதாக நேற்று செய்தி வெளியானதையடுத்து மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தை எண்ணெய் நிறுவனங்களே சமாளித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களில் இருந்து பறிக்கவும் மத்திய அரசு திட்டமிடுவதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.

இதன் காரணமாக மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவன பங்குகளும் கடுமையாக சரிந்து முடிந்தன. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கு 6.30 சதவீதம் சரிந்து 500.20 ரூபாயில் முடிவடைந்தது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கு 5.12 சதவீதம் சரிந்து 457.50 ரூபாயில் முடிவடைந்தது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்கு 4.36 சதவீதம் சரிந்து 415.95 ரூபாயாக நேற்றைய வர்த்தகம் முடிவில் இருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றம் நடக்கிறது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இனியும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும் பட்சத்தில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்னும் அச்சம் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்னும் ஊகங்கள் எழுந்துள்ளன.

சில நகரங்களில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்திருக்கிறது. உதாரணத்துக்கு மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.48 ஆக இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு இவ்வளவு அதிகமாக இருப்பது தற்போதுதான்.

மாற்றம் செய்யப்பட மாட்டாது!

இருந்தாலும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையிடாது என்று தெரிவித்தார். சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்கள் விலை மாறுவதுதான் வாடிக்கையாளர்களுக்கு நல்லது. மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிடாது என்று குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக புயலின் தாக்கம் இருப்பதால் பெட்ரோலிய உற்பத்தி 13 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் கச்சா எண்ணெய் விலை குறையும்.

பெட்ரோலிய பொருட்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் வராது. அதனால் மாநில அரசுகளின் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை இருக்கும். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியில் கொண்டுவருவதுதன் மூலம்தான் விலை ஏற்ற இறக்கங்களை சீர் செய்ய முடியும். தொழில்துறையினரும் இதனை வலியுறுத்துகின்றனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் இந்த கோரிக்கையை பரிசீலித்து வருகிறார். பெட்ரோல் பொருட்கள் மீதான கூடுதல் செஸ்-யை குறைப்பது என்பது நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கூடுதல் வருமானத்துக்காக இந்த வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதியை பயன்படுத்த முடியும் என தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

ஜூன் 15-ம் தேதி முதல் சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x