Published : 04 Aug 2017 10:34 AM
Last Updated : 04 Aug 2017 10:34 AM

விற்பனையாளர்களுக்கு லாப வரம்பு அதிகரிப்பு பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பிஎஃப், குறைந்தபட்ச ஊதியம், காப்பீடு கிடைக்க ஏற்பாடு: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் டி.ராஜ்குமார் தகவல்

பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களுக்கான லாப வரம்புத் தொகை (மார்ஜி்ன்) ஆகஸ்டு 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பங்க்ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பிஎஃப், காப்பீடு, மின்னணு பணப்பரிமாற்ற மூலம் சம்பளம் ஆகிய வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.ராஜ்குமார் தெரிவித்தார்.

பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கான லாப வரம்புத் தொகையை ஆகஸ்டு 1-ம் தேதி திருத்தியமைத்துள்ளன. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான லாப வரம்பு (கமிஷன் தொகை) ரூ.2.57-லிருந்து அதிகபட்சம் ரூ.3.63 ஆகவும், அதேபோல், டீசலுக்கான கமிஷன் தொகை ரூ.1.64-லிருந்து அதிகபட்சம் ரூ.2.59 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களுக்கு லாப வரம்புத் தொகை திருத்தப்பட்டது தொடர்பாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.ராஜ்குமார் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான லாப வரம்பு ஜூலை 31-ம் தேதி திருத்தப்பட்டது. அது ஆகஸ்டு 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, பங்க் உரிமையாளர்கள் மட்டுமின்றி அங்கு பணியாற்றும் ஊழியர்கள், நுகர்வோர்கள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள்.

பெட்ரோல், டீசல் விற்பனை மீதான லாப வரம்புத் தொகை உயர்வின் பலன்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களையும் சென்றடைய வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு, பங்க் ஊழியர்களுக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் எது அதிகமோ அந்த ஊதியம், மின்னணு பணப்பரிமாற்ற முறையில் சம்பளம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பிஎஃப்), பிரதம மந்திரி சுரக்சா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (காப்பீட்டுத் திட்டங்கள்) ஆகிய வசதிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களை அறிவுறுத்தியுள்ளோம். இந்த சமூக பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது கண்காணிக்கப்படும் .

இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 45 ஆயிரம் பெட்ரோல் பங்குகளில் பணியாற்றும் 10 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். நுகர்வோர்கள் பயன்பெரும் வகையில், பங்குகளில் பெட்ரோல், டீசல் தரமும், அளவும் உறுதிசெய்யப்படும். தூய்மையான கழிப்பறை வசதி இருக்க வேண்டும். இதுதொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பெட்ரோல், டீசல் பங்குகளில் விதிமுறைகள் மீறப்பட்டால் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட பங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x