Published : 04 Feb 2017 10:32 AM
Last Updated : 04 Feb 2017 10:32 AM

2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் கொள்கைகள் இல்லை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய கொள்கைகளோ அல்லது உத்திகளோ தற்போது அறிவிக்கப் பட்டுள்ள பட்ஜெட்டில் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் லயோலா தொழில் நிர்வாகம் (லிபா) கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய தாவது: 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணியின் 4-வது பட்ஜெட் அறிவிப்பாகும். இந்த பட்ஜெட் மக்களுக்கு மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற பிரசாரத்தின் போது ஒவ்வொரு வருடமும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று கூறியிருந்தார். ஆனால் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்க்கும் போது 2015-16 நிதியாண் டில் வெறும் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளும் 2016-17 நிதியாண் டில் 77 ஆயிரம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த இரு வருடங்களாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்த பட்ஜெட்டில் புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்கு வதற்கான உத்திகளோ அல்லது கொள்கைகளோ அறிவிக்கப்பட வில்லை.

பணமதிப்பு நீக்கத்தால் சாதாரண மக்கள் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக விவசாய தொழிலாளிகள், சிறுகுறு தொழில்கள், தினக் கூலிகள் ஆகியோர் மிகுந்த பாதிப்படைந் துள்ளனர். ஆனால் இவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதுபோன்ற எந்தத்திட்டங்களும் இந்தபட்ஜெட்டில் அறிவிக்கப் படவில்லை. வருமான வரியில் சில விலக்குகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. வருடந்தோறும் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சராசரியாக 1.98 கோடி பேர் மட்டுமே. ஆனால் பணமதிப்பு நீக்கத்தால் இவர்கள் மட்டுமா பாதிக்கப்பட்டார்கள். வரி வரம்புக்குள் வராத மக்கள்தான் பணமதிப்பு நீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் கூறப்படவில்லை.

மேலும் இந்த பட்ஜெட்டில் நேரடி வரி குறைக்கப்பட்டதற்கு பதில் மறைமுக வரியை குறைத்திருக்க வேண்டும். நேரடி வரியை குறைப்பதன் மூலம் தேவையை அதிகப்படுத்த முடியாது. ஆனால் மறைமுக வரியை குறைப்பதன் மூலம் முதலீடுகளை அதிகப்படுத்த முடியும். அதன் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். விலைவாசி குறையும். மக்களின் நுகர்வும் அதிகமாகும். ஆனால் அந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. பிறகு எப்படி பொருளாதார வளர்ச்சியை எட்டமுடியும். என் கணிப்புப்படி இந்த வருடம் 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை மட்டுமே எட்ட முடியும்.

ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதலீடுகளை ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் எடுக்காதது, விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு எந்த அறிவிப் பும் இல்லாதது, சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியை குறைத்தது போன்றவை இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற் படுத்தியிருக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x