Last Updated : 15 Oct, 2014 10:25 AM

 

Published : 15 Oct 2014 10:25 AM
Last Updated : 15 Oct 2014 10:25 AM

விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வேளாண் தொடுதிரை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொடுதிரையை செயல்படுத்த தொடங்கியவுடன் கீரைகள், தானியங்கள், பணப்பயிர்கள், பயறு வகைகள், காய்கள், மலர்கள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் வருகின்றன. பின்னர் அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன் அவற்றில் உள்ள வகைகள் குறித்த விவரங்கள் வெளியாகின்றன.

எடுத்துக்காட்டாக, கீரையை தேர்வு செய்தால் அதில் சிறுகீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, லெச்சகெட்டான் கீரை, கொத்தமல்லி கீரை, பாலக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, பருப்புக்கீரை, புதினா, கருவேப்பிலை போன்ற கீரைகளின் வகைகள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு கீரையை தேர்வு செய்தால் அந்த கீரையை பயிர் செய்ய எவ்வளவு நிலம் தேவைப்படும், அந்த இடத்தில் எவ்வாறு பயிர் செய்வது, நோய்கள் தாக்காமல் பாதுகாக்க என்ன என்னென்ன செய்ய வேண்டும், எவ்வாறு பராமரிப்பது, எத்தனை நாட்களில் அறுவடை செய்வது போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல, தானியங்கள், பயறு வகைகள், காய்கள் உள்ளிட்டவை குறித்தும், அவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்பே கொள்கை ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்ராஜ் கூறியது: எங்கள் மையத்தில் 17 அமைப்புகளை சேர்ந்த 650 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு விவசாயத்தில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. ஒரு பயிரை பற்றிய தகவல்களை வெளியிடும் முன், அந்த பயிர் பற்றிய விவரங்களை ஆசிரியர்களிடமிருந்து சேகரிப்போம். பின்னர் சரிபார்ப்புக்காக அதை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம். அதன் பின்னர் அவர்கள் சரிபார்த்து அனுப்பிய விவரங்களை இதில் பதிவு செய்வோம். இதன் மூலம் இந்த தொடுதிரையை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வார்கள் என்றார்.

கல்லூரி முதல்வர் சேவியர் வேதம் கூறியது: விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயம் குறித்த பொது தகவல்கள், வங்கியில் கடன் பெறும் முறைகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து விவசாயத்தை லாபகரமாக செய்வதற்கே இந்த மையம் செயல்பட்டு வருகின்றது என்றார்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x