Published : 13 Dec 2014 02:42 PM
Last Updated : 13 Dec 2014 02:42 PM

விவசாயத் தொழிற்சாலை செய்வோம்! - அடிகளாரின் இயற்கை வேளாண் ஆர்வம்

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடமிருந்து “விவசாயத் தொழிற் சாலைகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அவற்றை உருவாக்க இந்தக் காலத்து இளைஞர்கள் முன்வர வேண்டும்’’ என்று அருவி போல் வந்து விழுகின்றன வார்த்தைகள்.

அடிகளார் ஆன்மிகக் குரு மாத்திரமல்ல. சிறந்த விவசாயியும்கூட. லேசாய் ரெண்டு மழை தூறல் விழுந்துவிட்டாலே, ’’ஐயா... மழை பெஞ்சிருக்கே... என்ன பண்ணலாம்?’’ என்று வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகளிடம் போனில் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார் அடிகளார். அவர்கள், சூழலுக்கு ஏற்ற இயற்கை விவசாயத்தை அடிகளாருக்குப் பரிந்துரைப்பார்கள். மறுநாளே வயலில் நிற்பார் அடிகளார். குன்றக்குடியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையம்தான் அவரை விவசாயத்துக்கு இழுத்து வந்தது.

சொந்தப் பயன்பாடு

குன்றக்குடி திருமட வளாகத்துக்குள்ளேயே சுமார் 5 சென்ட் நிலத்தில் காய் - கனித் தோட்டம். நச்சு கலக்காத இயற்கை விவசாயத்தில் பீட்ரூட், நூல்கோல் எனப் பல காய்கறிகளை இங்கே பயிரிடுகிறார்கள். இவை அனைத்தும் மடத்தின் அன்றாட அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குன்றக்குடிக்குப் பக்கத்தில் உள்ள விரியன்வயலில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல்லும் விளைகிறது.

குத்தகை நிலங்களில் இருந்து நெல் வந்துவிடுவதால், சொந்த வயலில் நெல்லை இரண்டாம்பட்சமாகத்தான் வைத்திருக்கிறார் அடிகளார்.

மடத்துக்குச் சொந்தமான வயல்களில் கரும்பு, மஞ்சள் சாகுபடியும் நடக்கிறது. இவை எதுவும் விற்பனைக்கு அல்ல; எல்லாமே மடத்தின் சொந்தப் பயன்பாட்டுக்குத்தான்.

தென்னை பாசம்

மடத்துக்குச் சொந்தமான தென்னந் தோப்புகளில் சுமார் பத்தாயிரம் தென்னை மரங்கள் இருக்கின்றன. இந்தத் தென்னை மரங்களை அடிகளார் பெரிதும் நேசிக்கிறார். பொள்ளாச்சி பக்கம் போனால் அங்குள்ள தென்னை மரங்களைப் பார்த்துவிட்டு, “இங்க இருக்கிற மரங்கள் மட்டும் எப்படி இவ்வளவு மகசூல் கொடுக்குது பார்" என்று தன் உதவியாளர் சிங்காரவடிவேலனிடம் ஆச்சரியத்தைப் பகிர்ந்துகொள்வார்.

இப்போது, கொட்டாம்பட்டி அருகில் உள்ள மேலப்பட்டி தென்னந்தோப்பில் 200 தென்னங்கன்றுகளைச் சிறப்புக் கவனம் எடுத்து வளர்க்கிறார்கள். வறட்சிப் பகுதிகளிலும் நல்ல மகசூல் கொடுக்கும் தென்னை ரகங்களைக் கேரளாவில் உள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செயற்கைக் கருவூட்டல் மூலம் உருவாக்கி இருக்கிறது. இதற்கான களமாக இந்தத் தோப்பைத்தான் அந்த நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது. அவர்கள் உருவாக்கிய சிறப்பு விதையில் முளைத்ததுதான் அந்த 200 தென்னங்கன்றுகள். இங்குள்ள தென்னைகளைச் செயற்கைக் கருவூட்டலுக்காக இன்னமும் பயன்படுத்தி வருகிறது கேரள ஆராய்ச்சி நிறுவனம்.

இளைஞர்களுக்கு அழைப்பு

’’தேசத்துக்கு முதுகெலும்பு போன்றது விவசாயம். மனநிறைவு தரும் ஆத்மார்த்தப் பணி அது. மருத்துவ வசதிகள் பெருகப் பெருக நோய்களின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பூச்சி மருந்து, உரம் இவற்றில் உள்ள மாசுதான் இதற்கு முக்கியக் காரணம்.

எனவே, நச்சுப் படாத விவசாயம்தான் இந்தக் காலத்துக்குத் தேவை. எவ்வளவு ஏக்கரில் பயிர் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எத்தகைய பயிர்களை, எப்படிப் பயிர் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். எனவே, குறைவான நிலப்பரப்பில் நிறைவான மகசூல் தரும் ஒருங்கிணைந்த விவசாயத் தொழிற்சாலைகளை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்’’ என்கிறார் பொன்னம்பல அடிகளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x