Published : 23 Oct 2015 09:26 AM
Last Updated : 23 Oct 2015 09:26 AM

வணிக நூலகம்: தேர்வுகள் சில, மாற்றங்கள் பல!

எதிலுமே ஒரு மாற்றம் வேண்டும் அல்லது நமது செயல்பாடு மற்றவற்றிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புவது நம் மனதின் இயல்பு அல்லவா!. அது மாறுபட்ட சூழ்நிலைகளினால் தானாக நமக்கு ஏற்படுவதோ அல்லது மற்றவர்களினால் உண்டாகும் மாற்றமோ அல்லது நம்மால் நமக்கு ஏற்படும் மாற்றமோ எதுவானாலும் அந்த மாற்றத்தினால் கிடைக்கும் நன்மையே முக்கியம்.

சூழ்நிலையினாலும், மற்றவர்களி னாலும் நமக்கு ஏற்படும் மாற்றத்தினை விட நாம் நமக்காக உருவாக்கிக்கொள்ளும் மாற்றத்திலேயே நமக்கு சாதகமான பயன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத் திக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்கான அடிப்படை செயல்பாடுகளைப் பற்றி அறிந்துக் கொள்வது அவசியம்.

நமது செயல்பாட்டில் நாம் மேற்கொள்ளும் ஒரு சில தேர்வுகளே நமக்கான மாற்றத்தினையும் அதன்மூலம் வழக்கமான நிலையிலிருந்து மாறுபட்ட வித்தியாசமான வேறொரு நிலையினையும் நமக்கு கொடுக்கின்றது.

இந்த தேர்வுகளை நாம் மேற்கொள் வதற்கு கற்றுக்கொள்ளும் ஆர்வமும், நமது குணாதிசியமும் மிகவும் முக்கியம். இவற்றின் மூலமே நம்மால் சரியான தேர்வுகளை மேற்கொள்ள முடியும். நமது ஆர்வமும், குணமுமே நமது மற்ற தேர்வுகளுக்கு அடித்தளமாக அமைகின்றது என்கிறார் ஆசிரியர்.

கேள்வி கேளுங்கள்!

நமது இலக்கு சரியான, அறிவுபூர்வமான நிலையை அடைய வேண்டுமானால் கேள்விகளின் ஆற்றலைப் பற்றிய முழுமையான புரிதல் நமக்கு இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் ஆர்வம் அடிப்படையிலேயே நம்மிடம் உள்ளது. ஏராளமான ஆர்வத்துடனேயே நாம் இந்த உலகிற்கு வந்துள்ளோம். நல்ல நல்ல கேள்விகளே புத்திசாலிதனமான பதில்களுக்கான துருப்புச் சீட்டு என்பதை நினைவில் வைக்க தவறக்கூடாது. பொதுவாக ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளும் மனநிலையை விட, அந்த விஷயத்தின் மீதான கேள்வி கேட்கும் மனநிலையே அதிக பயனுள்ளது.

ஒரு சிறந்த மேலாளர் எப்படி? மற்றும் எதனால்? போன்ற கேள்விகளாலும், சிறந்த கண்டுபிடிப்பாளர் ஏன்? மற்றும் ஏன் கூடாது? போன்ற கேள்விகளாலுமே தங்களுக்கான மிகச்சிறந்த நிலையினைப் பெறுகின்றார்கள். சிறந்த கேள்விகளுக்கான தேடல் நம்மிடம் எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருப்பதே சிறந்தது. இந்த தேடலே நம்மை இறுதியில் சிறந்த பதிலிடம் கொண்டுசேர்க்கும். மேலும், சிறந்த கேள்விகளே ஒரு உரையாடலின் தரத்தை செம்மையாக்குகின்றது என்கிறார் ஆசிரியர்.

கற்றுக்கொண்டே இருங்கள்!

நொடிக்கு நொடி எத்தனையோ புதிய புதிய விஷயங்களும் மாறுதல்களும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில், நமது கற்றுக்கொள்ளும் ஆர்வமும் திறனும் தொடர்ந்து நம்மிடம் இருப்பது மிகத்தேவையான ஒன்று. நமது முறையான கற்றல் என்பது பொதுவாக நம்முடைய பள்ளி மற்றும் கல்லூரியுடன் முடிந்துவிடுகின்றது. அதாவது, நமது ஆரம்பகால பள்ளி கல்வியில் எழுதுவதற்கும், படிப் பதற்கும் கற்றுக்கொள்கிறோம். பிறகு, மேல்நிலை கல்வியில் குறிப்பிட்ட பாடம் என்று தொடர்ந்து கல்லூரியில் ஒட்டுமொத்த முறையான கற்றலையும் முடித்துவிடுகின்றோம் அல்லவா! ஆனால் இந்த முறையான கற்றலுக்கு பிறகும் நமது கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு தொடரவேண்டும் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளும் விஷயம் எவ்வளவு சிறியது அல்லது எப்படிப்பட்ட நிலை யிலிருந்து கற்கிறோம் அல்லது எங்கிருந்து கிடைக்கின்றது என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி, தினமும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே நமக்கான தேவை. வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருப்பது என்பது, நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது. நீண்டகால நோக்கில் இதனை வழக்கத்திற்கு கொண்டுவரும் போது மகத்தான நன்மை தருவதாக அமையும் என்பதில் சந்தேகமும் இல்லை.

சூழ்நிலை முக்கியம்!

எந்தவொரு செயலுக்கும் சூழ்நிலை என்பது கண்டிப்பாக கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயமாகின்றது. சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் எப்படிப்பட்ட செயலையும் சரியாக செய்துவிட முடியாது. ஒரு முயலை துரத்திக்கொண்டு நரி ஒன்று ஓடிக்கொண்டிருக்கின்றது. இரண்டுக்கும் பொதுவானது அவற்றின் ஓட்டம் மட்டுமே. ஆனால் அவற்றின் சூழ்நிலை என்பது இரண்டுக்கும் வெவ்வேறானது. அவற்றின் சூழ்நிலையே இரண்டிற்கும் இடையேயான ஓட்டத்தின் வேகத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அதாவது, முயலானது நரியை விட மிக வேகமாக ஓடுகின்றது. காரணம், அந்த முயல் ஓடுவது அதனுடைய வாழ்வை காப்பாற்றிக்கொள்ள, அதேசமயம் அந்த நரியானது அதனுடைய ஒரு வேளை உணவிற்காக மட்டுமே ஓடுகின்றது.

சூழ்நிலையை சாராமல் எதுவும் தன்னிச் சையாக தோன்றிவிடாது. சூழ்நிலையினை கவனத்தில் எடுத்துக்கொள்வதோடு மட்டு மல்லாமல், அதனை சரியாக அடையாளம் கண்டுக்கொண்டு அதற்கேற்பவே நமது செயலுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம் நமது செயல்பாட்டிலும் மாற் றத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஆற்றலின் செயல்பாடு!

சக்தியோ ஆற்றலோ இல்லாமல் எதுவும் நடந்துவிடாது. அனைத்து விதமான செயல்களுக்கும் ஆற்றலின் பங்களிப்பு தேவை அல்லவா!. நம்முடைய உண்மையான ஆற்றலை அறிந்துக்கொள்வது நமது செயல்பாட்டு திட்டங்களுக்கு உறுதுணையான காரணியாக இருக்கின்றது. ஆற்றலின் பயன்பாடு நல்ல விதமாகவோ அல்லது தீங்கானதாகவோ அமையலாம். அது நாம் எவ்வாறு ஆற்றலை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. ஒரு சிறிய தீக்குச்சியின் ஆற்றலை எண்ணிப்பாருங்கள், விளக்கை ஏற்றுவதற்கும் அதேசமயம் பெரும் தீவிபத்தை உண்டாக்கவும் அதன் பயன்பாடு காரணமாகிவிடுகின்றது.

ஒரு திட்டத்தின் வழியே பயணித்துக் கொண்டிக்கும் நமக்கு ஆற்றலே சிறந்த உந்துசக்தியாக திகழ்கின்றது. ஆற்றலின் பயன்பாட்டு பாதையை தேர்வு செய்வது மாற் றத்திற்கான முக்கிய விதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. நமது ஆற்றலை அறிந்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அதன் பயனை வீணடிக்காமல் முழுவதுமாக நேர்மறையான வழிகளில் உபயோகப்படுத்தும்போது மட்டுமே சிறந்த வெற்றியை பெற முடிகின்றது. மேலும், இந்த ஆற்றலானது நமது ஒட்டுமொத்த செயல்களுக்கும் பெரும் உற்சாகத்தையும் ஆர்வத்தினையும் தருவதாக அமைகின்றது.

அனுபவ ஆசான்!

நம்மில் பெரும்பாலானோருக்கு மறக்க முடியாத சில அனுபவங்கள், சில வழிகளில் மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன. வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களும் வழிகாட்டுதல்களும் நமக்கு வெவ்வேறு நிலைகளில் கிடைத்தாலும், அனுபவமே மிகச்சிறந்த ஆசானாக இருக்கின்றது. பொதுவாக அனுபவமானது இரண்டு வழிகளில் நமக்கு கிடைக்கின்றது, நேரிடையாக நமது வாழ்வில் ஏற்படும் அனுபவங்கள் மற்றும் அடுத்தவர்களின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள். இந்த அனுபவ அறிவை தேவையான இடங்களில் பயன்படுத்தும்போது, நமது செயல்பாட்டின் தரம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.

எதன் மீதாவது உங்களுக்கு முழுமையான புரிதல் வேண்டுமானால் அதனை அனுபவித்து அறிந்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர். சூழ்நிலையினை பொருத்து அனுபவ மானது நல்லதாகவோ அல்லது வலி நிறைந்ததாகவோ இருக்கலாம். அந்த நேரத்தில் அதன் தன்மை வேறுபட்டதாக இருந்தாலும், பின்னாளில் அந்த அனுபவம் நமது செயல்களுக்கு நன்மை பயக்குவதாகவே அமையும். மேலும், இதன்மூலம் தேவையற்ற பல இடையூறுகளையும் தவிர்த்திட முடிகின்றது. அனுபவத்திற்கு ஈடான மாற்று வேறு எதுவும் இருக்க முடியாது என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

நம்மால் மேற்கொள்ளப்படும் இந்த சில நல்ல தேர்வுகள், நமது ஒட்டுமொத்த செயல்களுக்கும் அடித்தளமாக அமைந்து நமக்கு வாழ்வில் எதிர்பார்க்கும் வெற்றி யினைப் பெற்றுதரட்டும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x