Last Updated : 05 Feb, 2016 05:06 PM

 

Published : 05 Feb 2016 05:06 PM
Last Updated : 05 Feb 2016 05:06 PM

வணிக நூலகம்: உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்

தன்னை தானே அறிந்துக் கொள்வது என்பது நாம் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் கடினமான விஷயம். நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு பல்வேறு வகையான புறக்காரணிகளும், நம்முள்ளே இருக்கும் பல்வேறு வகையான காரணிகளும் காரணமாக அமைக்கின்றன. என்னை யாரும் புரிந்துக் கொள்ளவில்லை என்று குறைச் சொல்வதை விட அதை எதிர்க்கொள்வது மேலானதாகும்.

அதேபோல நாம் மற்றவரை சரியாக புரிந்துக் கொள்ளுவதில்லை என்ற குறைபாடும் புரிதலுக்கு எதிராகிறது. நாம் ஏன் மற்றவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு பலவாறான பதில்கள் இருக்கலாம்.

ஆனால், அவற்றுள் மற்றவர்களின் மனப்பாங்கு, எண்ணம், குணாதிசயங் களை அறிந்துக் கொள்ளுதல் ஆகியவை மிகவும் பயனுள்ளது. அவ்வாறு அறிந்துக் கொள்ளும் பொழுது அடுத்தவர் பற்றிய நம் புரிதல் மிகச் சரியானதாக இருக்கும். தவறான கண்ணோட்டம், குறைபாடுள்ள அணுகுமுறைகள், சிறிய தவறுகளை பெரிதுபடுத்துதல், அதிக எண்ணிக்கையில் குறைபாடுகளை மட்டுமே பூதாகரமாக்குதல் ஆகியவை அடுத்தவர்களை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு தடைக் கல்லாக உள்ளது. இந்த தடைகளை தாண்டி வருவதற்கு முதலில் நம்மே நாமே சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிதல் அவசியம்

அந்த புரிதல் இருந்தால் மற்றவர்கள் பற்றிய புரிதல் எளிதாகும். மற்றவர்களைப் போல மனமும் அவர்களை போன்ற அளவான நேரம், குறைவான சக்தி ஆகியவைகளைதான் நாமும் பெற்றிருப்பதாக நினைக்கிறோம். அந்த நினைவில் அவர்களை போலவே குறுக்கு வழியில் வெற்றிக்கான வேகநடை பயில்கிறோம். விளைவு, நாம் மற்றவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் நம்முடைய நேரம், சக்தி மற்றும் மன வலிமை ஆகியவை நம்மை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்திக்காட்ட முடியாமல் போகிறது. அது போன்ற நேரங்களில் இருட்டில் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழுகின்றோம். உலகமே நமக்கு எதிராக இருப்பதாகவும், உலகில் உள்ள அனைவரும் நம்மை எதிர்ப்பதாகவும் மனதில் ஆழமான கருத்துகளை ஏற்படுத்திக் கொள்கின்றோம். மாறாக, நாம் செய்வதை திருந்தச் செய்யும் பொழுது நம்மை பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுகிறது. இந்த உணர்வு நம்மை புரிந்து கொள்வதற்கு எதிரான போரில் பாதி வெற்றியை கொடுத்து விடுகின்றது.

குறைகளைத் தெரிந்து கொள்ளும் பொழுது முன்பே எடுத்த முடிவுகளையும், கண்ணோட்டங்களையும் அடிப்படை யாக வைத்து முடிவுகளை மேற்கொள் கின்றோம். மாறாக, அதுபோன்ற செயல்களை தவிர்த்து அடியோடு அழித்து புதிய எண்ணங்களை பயிர் செய்தல் அவசியம்.

நம்மை பற்றிய மற்றவர்களின் புரிதல்

நாம் குழப்பமான படைப்பு, பல உருவங்களாக இருக்கின்றோம். ஒவ் வொருவரிடமும் ஒவ்வொரு வகையாக நடந்து கொள்கின்றோம். நண்பர்களிடத் தில் நடந்து கொள்வதை போல பணியிடத் தில் நடந்து கொள்வதில்லை. பணியிடங் களில் நடந்து கொள்வதை போல குடும்பத்தில் நடந்து கொள்வதில்லை. இந்த பல்வேறு பல ஒருவன்கள் நம்மை மற்றவர்கள் புரிந்துகொள்வதில் குழப் பங்களை ஏற்படுத்துகின்றது. மற்றவர் களிடம் பேசிக்கொண்டிருக்கின்றோமா அல்லது நம்மை நாமே பார்த்துக் கொண்டிருக்கின்றோமா என்பதில் தெளிவு இருப்பதில்லை. உண்மையில், மற்றவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்வதில்லை, தவறான மதிப்பீடு செய்கிறார்கள் என்றெல்லாம் எதை வைத்துக் கூறுகின்றோம். உண்மையாக இருப்பது எளிதான காரியம் அல்ல.

தன்னை பற்றிய புரிதல்

மற்றவர்களை பார்க்கும் பொழுது அனைவரையும் பற்றிய ஒருமித்த கருத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதேபோல நண்பர்கள், குடும்பத்தினர், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒருவரை புரிந்துகொள்ளவில்லை என்றால் தவறு மற்றவர்களிடம் அல்ல தனிமனிதனிடமே. அவ்வாறு அனைவரும் தவறாக கூறும் பொழுது அந்த கருத்துகளை சரி பார்த்து நம்மிடம் இருக்கக்கூடிய குறைபாடுகளைக் களைய வேண்டும். தன்னை தானே அறிந்துக் கொள்வதும், மற்றவர்களை அறிந்து கொள்ளுவதும் மனிதர்களுக்கு மிகுந்த கடினமான செயல். ஏனென்றால், மற்றவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் சிக்கலானதாக இருக்கும். பல அர்த்தங்களையும், விளக்கங்களையும் அளிப்பதாக இருக்கும். அவற்றை சீர் தூக்கி பார்த்து புரிந்து கொள்வது மிகவும் கடினமான செயல். இதை உணர்ந்து கொள்ளாமல், காணும் காட்சிகளிலும் பேசும் பேச்சுகளிலும் எந்த விதமான முயற்சிகளும் இல்லாமல் தொடர்பே இல்லாமல் பங்கு கொள்கின்றோம். மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வதற்காக அவர்களை பழித்து பேசக் கூடாது. மாறாக நம்மை சரியாகப் புரிந்து கொள்ள வசதியாக சுலபமான முறையில் நம்மை வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு மற்றவர்கள் நம்மை எளிதாக புரிந்துக் கொள்ள கீழ்கண்ட செயல்கள் உதவும்.

 நிதானமான செயல்பாடு

 நேர்மைக்கு தலை வணங்குதல்

 நிகழ்வுகளை தொடர்புபடுத்தாமல் தனித்தனியாக பார்த்தல்

நிதானமான செயல்பாடு

பார்த்தவுடன் தீர்ப்பு எழுதாதீர்கள். முதல் பார்வையில் சரியான நபரை மிகவும் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். போகப் போக அந்த நடத்தைக்கு விளக்கங்களும், சப்பைக் கட்டுக்களும் நிதானமாக வந்து சேரும். எந்த சூழ்நிலையில் ஒருவர் அவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள் என முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கங்களை புரிந்து கொண்டால் மனிதர்களைப் புரிந்து கொள்வது எளிதாகும். உதாரணமாக, ஒருவர் மிகவும் படபடப்போடும், பயத்தோடும் கேள்விகளுக்கு பதில் கூறும்பொழுது முரட்டுத்தனமானவன் என்றோ, முட்டாள் என்றோ முடிவுக் கட்டக் கூடாது. மாறாக வேறொரு சூழ்நிலையில் அந்த தவிப்பும், தாக்கமும் இல்லாமல் சாதாரணமாக நடந்து கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில் முதலில் நாம் தவறாகப் புரிந்துகொண்டதை தொடர்ச்சியாக வேறு சூழ்நிலைகளுக்கு பொருத்திப் பார்க்க கூடாது.

நேர்மைக்கு தலை வணங்குதல்

நேர்மையான முறையில் மற்றவர் களை புரிந்துகொள்வது அவசியம். நேர்மையான முறையில் மற்றவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது, நாம் எந்த வகையில் அவரிடம் தொடர்பு வைத்திருக்கிறோமோ அதைப் பற்றிய சிந்தனை மேலோட்டமாக வரும். ஆழ்மனதில் இருக்கக்கூடிய அவரைப்பற்றிய குறைகள், தற்போதைய நிகழ்வை பின்னுக்குத் தள்ளி அவரை தவறான நபராக பார்ப்பதற்கு தூண்டும். இதை தவிர்த்தலே நியாயமாகவும், நேர்மையானதாகவும் நடந்துகொள்ளு தல் ஆகும். நியாயமாகவும், நேர்மையாக வும் நடந்துகொள்ள வேண்டும் என்று என்று நினைக்கிற பொழுது மற்றவர் களைப் பற்றிய நம்முடைய கணிப்பில் தவறுகள் குறைவாக இருக்கும்.

நிகழ்வுகளை தொடர்பு படுத்தாமல் தனித்தனியாக பார்த்தல்

ஒருவரை பற்றி ஒரு கருத்தை முன்னரே முடிவு செய்துவிட்டு, அவரையோ அவரைப் போன்றவரையோ பார்க்கும் பொழுது நம்முடைய கருத்து சரியானது என்று எண்ணுவது தவறு. இது எல்லா சூழ்நிலைகளிலும், முடிவு எடுப்பதிலும், புரிந்து கொள்வதிலும் தவறுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, ராஜேஸ் மற்றும் நிர்மலா இரண்டு பேரில் யாரை தலைமை மேலாளராக தேர்வு செய்வது என்ற சூழலில் நிர்மலாவிற்கு அந்த அளவிற்கு நிகழ்வுகளை கையாளும் திறனும் கருத்து பரிமாறும் திறமைகளும், தெளிந்த அறிவும் இல்லாததால் ராஜேஸ் தேர்வு செய்யப்படுகிறார். இதில் பிரச்சனை என்னவென்றால் நாம் நிகழ்வுகளை தொடர்புபடுத்தி நிர்மலா போன்ற பெண்ணால் கடினமான முடிவுகள் எடுக்கமுடியாது, கருத்துகளை ஓங்கி கூற முடியாது, குழப்பம் கூடுதலாக இருக்கும் என்று வேறு ஏதோ ஒரு நிகழ்வில் உள்ள காரணிகளை இங்கு தொடர்பு படுத்துவதால் முடிவுகள் தவறாக அமைக்கின்றன. புரிதலில் தவறுகள் கூடுகின்றன.

நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளை படிக்கிறபோது, இதெல்லாம் தெரிந்த செய்திதானே என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இவற்றை ஆழ்மனதில் எழுதி வையுங்கள். அடுத்த முறை உங்களை பற்றியோ, மற்றவர்களை பற்றியோ புரிந்துக் கொள்ள வேண்டிய சூழலில் நிதானமான செயல்பாடு, நேர்மைக்கு தலை வணங்குதல், நிகழ்வுகளை தொடர்புபடுத்தாமல் தனித்தனியாக பார்த்தல் ஆகியவை உங்களுக்கு உதவும். என்னை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை மற்றவர்களை பற்றிய என்னுடைய புரிதல் தவறானதாக இருக்கின்றது என்ற கருத்தை இத்தோடு ஆழ்மனதில் இருந்தும் அழித்துவிடுங்கள்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x