Published : 04 Mar 2015 09:28 AM
Last Updated : 04 Mar 2015 09:28 AM

ரெபோ விகிதத்தை 0.25% ரிசர்வ் வங்கி குறைத்தது: கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு

பொது பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட பிறகு யாரும் எதிர்பாராத நேரத்தில் ரெபோ விகிதத்தை 0.25 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. பண வீக்கம் குறைந்ததை அடுத்து நடப்பு ஆண்டில் இரண்டாம் முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. கடந்த ஜனவரி 15-ம் தேதி 0.25 சதவீத அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.

தற்போது ரெபோ விகிதம் 7.75 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம்தான் ரெபோ விகிதமாகும். இனி 7.5 சதவீத அளவுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் கடன் வாங்கும். அதேபோல ரிவர்ஸ் ரெபோ விகிதமும் 0.25 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கியில் வங்கிகள் டெபாசிட் செய்யும் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெபோ விகிதமாகும். இந்த விகிதம் தற்போது 6.75 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் 4 சதவீதம் என்ற நிலையிலேயே தொடர்கிறது.

பொதுவாக ரிசர்வ் வங்கி கடன் மற்றும் நிதிக்கொள்கை வெளியிடும் போதுதான் வட்டிக் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடும். ஆனால் கடந்த இரண்டு வட்டி குறைப்பு நடவடிக்கைகளுமே தனிப்பட்ட நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி நடவடிக்கைகளில் குறைவாக இருப்பது மற்றும் கடன் வளர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லாதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். பணவீக்கம் இலக்கு குறித்து ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகமும் ஒருமித்த முடிவு எடுத்த ஒரு சில நாட்களுக்குள் இந்த வட்டி குறைப்பு நடந்திருக்கிறது.

இதனால் வீட்டுக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன் களுக்கான இ.எம்.ஐ. குறை வதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அடுத்த கடன் மற்றும் நிதிகொள்கை அறிவிப்பு வரும் ஏப்ரல் 7-ம் வெளியாக உள்ளது.

‘வங்கிகள் ஏப்ரல் மாதத்தில் வட்டியை குறைக்கும்’

ரெபோ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது குறித்து கருத்து கூறிய ரகுராம்ராஜன் வரும் ஏப்ரலில் வங்கிகள் வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

இன்னும் சில வாரங்களில் நாம் புதிய நிதி ஆண்டுக்குள் செல்ல இருக்கிறோம். அந்த சமயத்தில் வங்கிகள் வட்டி குறைப்பு செய்யும் என எதிர்பார்ப்பதாக ரகுராம்ராஜன் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தைக் குறைத்தாலும், அதன் பயனை வங்கிகள் மக்களுக்கு கொடுப்பதில்லை என்று கடந்த நிதிக்கொள்கையில் ரகுராம்ராஜன் குற்றம் சாட்டி இருந்தார். கடந்த ஜனவரி 15-ம் தேதி ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்தது. அதன் பிறகு யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரு வங்கிகள் மட்டுமே வட்டியை குறைத்தன.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போதும், உடனடியாக கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் வங்கிகள், வட்டி விகிதத்தை குறைக்கும் போது அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் செய்கின்றன என்றார்.

இரு முறை ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததால் கூடிய விரைவில் வங்கிகள் கடனுக்கான வட்டி குறைக்கும் என நம்புவதாக தெரிவித்தார். அதே சமயத்தில் வட்டி குறைப்பு செய்ய ஏதாவது தடைகள் இருக்கிறதா என்பதையும் ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருவதாக ராஜன் கூறினார்.

நிபுணர்கள் கருத்து

ஜெயந்த் சின்ஹா, நிதித்துறை இணை அமைச்சர்

நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை வைத்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. இதனால் கடன்களுக்கான இ.எம்.ஐ குறையும்.

அர்விந்த் சுப்ரமணியன், தலைமை பொருளாதார ஆலோசகர்

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பது இந்திய பொருளாதாரத்துக்கு நல்ல விஷயம். வரவேற்கத்தகுந்தது. வட்டி குறைப்பினால் பணவீக்கம் உயரும் ஆபத்து இல்லை.

சக்தி காந்ததாஸ், வருவாய்த் துறைச் செயலாளர்

இந்த வட்டி குறைப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான தேவை அதிகரிக்கும். இதை தொழில்முனைவோர்கள், மக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

சந்திரஜித் பானர்ஜி, இயக்குநர் ஜெனரல் - இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ)

வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தகுந்தது. இதன் மூலம் அரசும், ரிசர்வ் வங்கியும் வளர்ச்சியை உயர்த்தும் நடவடிக்கைகளில் இருக்கிறார்கள்.

அலோக் பி ஸ்ரீராம், தலைவர் - பஞ்சாப், ஹரியாணா மற்றும் டெல்லி தொழில் வர்த்தக சபை

இந்த வட்டிக் குறைப்பு சாதாரண மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியது. இதன் மூலம் கடனுக்கான வட்டி குறையும், சந்தையின் சூழல் மாறும். தேவை அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் உருவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x