Last Updated : 24 Apr, 2016 05:25 PM

 

Published : 24 Apr 2016 05:25 PM
Last Updated : 24 Apr 2016 05:25 PM

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் சம்பளம் எவ்வளவு?: ஆர்பிஐ தகவல்

ஒற்றைக் கண் மன்னன் கருத்தினால் சர்ச்சையின் மையத்தில் இருந்த ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் உயர் பதவி வகிப்பவர்தான், ஆனால் இவரை விடவும் ஆர்பிஐ-யில் அதிக சம்பளம் பெறும் 3 அதிகாரிகள் உள்ளனர் என்கிறது ஆர்பிஐ வெளியிட்டுள்ள விவரம்.

தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய ரிசர்வ் வங்கி ஜூன் - ஜூலை 2015 சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்த விவரங்களின் படி, ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் மாதாந்திர மொத்த வருவாய் ரூ.1,98,700. இதில் அடிப்படை சம்பளம் ரூ.90,000, அகவிலைப்படி ரூ.1,01,700, ‘பிற’ என்ற வகையறாவில் ரூ.7,000 ஆகியவை உள்ளடங்கும்.

ரகுராம் ராஜனை விடவும் அதிக சம்பளம் பெறும் மூவர்:

கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே (ரூ.4 லட்சம்), அண்ணாமலை அரப்புலி கவுண்டர் (ரூ.2,20,355) மற்றும் வி.கந்தசாமி (ரூ.2.1 லட்சம்) ஆகியோர் கவர்னர் ரகுராம் ராஜனை விடவும் அதிக மாதாந்திர வருவாய் ஈட்டியுள்ளனர். இந்த விவரமும் ஆர்பிஐ வெளியீட்டில் உள்ளது.

ஆர்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த விவரங்கள் ஜூன் - ஜூலை 2015க்கானது. ஆனால் ரகுராம் ராஜனை விடவும் அதிக சம்பளம் பெற்ற இந்த மூவரும் இன்னமும் ஆர்பிஐ-யில் பணியாற்றுகின்றனரா என்ற விவரம் தெரியவில்லை.

இந்த மூவரின் பதவி நிலவரத்தை ஆர்பிஐ வெளியிடவில்லை. இதில் கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே கடந்த காலத்தில் ‘முதன்மை சட்ட ஆலோசகர்’ பதவியில் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

சீதாராம் ஹெக்டே மற்றும் கந்தசாமி ஆகியோரது மொத்த வருவாயில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சேர்க்கப்படவில்லை.

சமீபத்திய சம்பள விவரம் கேட்ட போது பதில் இல்லை:

ரகுராம் ராஜன் உட்பட, இவர்களின் தற்போதைய சம்பள விவரங்களைக் கேட்டு ஆர்பிஐ செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லவாலாவிடம் நிறைய முறை கேட்ட போதும் இதற்கான பதில் கிடைக்கவில்லை.

ஆனால், அல்பனா கில்லவாலா, ஆர்பிஐ தகவல் தொடர்புத்துறை முதன்மை ஆலோசகர் பொறுப்பு வகித்த வகையில் அவரது மாதாந்திர வருவாய், 4 உதவி கவர்னர்கள் மற்றும் 11 செயல் இயக்குநர்கள் ஆகியோரை விடவும் அதிகமாக இருந்தது ஆர்பிஐ வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிகிறது.

ஆர்பிஐ பணிப்பொறுப்பு படிமுறை அமைப்பின் படி, முதல் நிலையில் கவர்னர், அதன் பிறகு உதவி கவர்னர்கள், பிறகு செயல் இயக்குநர்கள், இவர்களுக்குப் பிறகு பல்வேறு துறைகளின் தலைவர்கள் உள்ளனர்.

அடிப்படை சம்பளத்தில் கவர்னர் முதலிடம் வகிப்பார். ஒவ்வொரு உதவி கவர்னர்களின் மாதாந்திர வருவாய் முறையே ரூ.1,73,900 என்பதும், செயல் இயக்குநர்களின் மாதாந்திர வருவாய் ரூ.1,70,864 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவெனில் செயல் இயக்குநர்களைக் காட்டிலும் குறைந்தது 44 ஊழியர்கள் அதிக வருவாய் ஈட்டுகின்றனர்.

ஆனால் இந்த வருவாய் விவரங்கள் ஜூலை 1, 2015 காலக்கட்டத்துக்கு உரியதே.

ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னால் பொறுப்பேற்றார். அவரது தற்போதைய பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவுறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x