Last Updated : 27 Nov, 2014 10:42 AM

 

Published : 27 Nov 2014 10:42 AM
Last Updated : 27 Nov 2014 10:42 AM

முக்காலமும் அறியலாம்…

பிக்டேட்டா அனலிடிக்ஸ் குறித்து ஒரு விரிவான அலசல்தனை கடந்த சில வாரங்களாக நாம் செய்துகொண்டிருக்கின்றோம். இந்த வாரம் இறுதியாக சில விஷயங்களைப் பார்ப்போம். ஸ்டாட்டிஸ்டிக்கல் அனாலிசிஸ் என்பது தொன்றுதொட்டு தொழிலில் உபயோகிக்கப்பட்டு வருகின்ற தொரு விஷயமேயாகும். தொழில்கள் பல இதுபோன்ற அனாலிசிஸ் களினால் பெரிய அளவில் பலனடைந்த போதிலும் அந்த அனாலிசிஸ் குறித்த அறிவும் ஆற்றலும் அந்தத் தொழில் நிறுவனத்தை சார்ந்ததாகவும் கிட்டத்தட்ட பெரும் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அறிவுசார் சொத்தாகவே பார்க்கப்பட்டது.

வரலாற்றில் ரகசியம்

உதாரணத்திற்கு, 1900ம் வருடத்தில் டபிள்யூ.எஸ். காசெட் என்பவர் கின்னஸ் என்ற நிறுவனத்தில் அக்ரோ கெமிக்கல் பிசினஸ் பிரிவில் ஒரு புள்ளியியல் நிபுணராக வேலைபார்த்தார். சிறந்த பார்லி வகைதனைக் கண்டறிய குறைந்த அளவிலான சாம்பிளை எடுத்து ஆராய்ச்சி செய்வதற்கான புள்ளியியல் ரீதியான சூத்திரத்தை அவர் கண்டுபித்தார். இதே போன்று ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு புள்ளியியல் நிபுணர் ஒரு ஆய்வுக்கட்டுரையை ஒரு இதழில் வெளியிட எதேச்சையாக அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் தொழில் ரகசியமாகிப்போனதால் அந்த நிறுவனம் வேலைபார்ப்பவர்களை ஆய்வுக்கட்டுரை வெளியிடக்கூடாது என தடை செய்திருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

காசெட் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையால் எந்த விதமான தொழில் ரகசியங்களும் வெளியே போய்விடாது என்று வாதாடி நிரூபித்த பிறகும் கூட அந்த நிறுவனம் சமாதானமடையாமல் இந்த ஆய்வுக்கட்டுரையை உங்கள் பெயரில் வெளியிட்டால் போட்டி நிறுவனங்கள் இதை மிகவும் கவனமாக ஆராய்ந்து நம்முடைய தொழில் ரகசியம் எதையாவது கற்றுக்கொண்டுவிடும். அதனால், உங்கள் பெயரில் வெளியிடாமல் வேறு பெயரில் வெளியிடுங்கள் எனச் சொன்னது.

அதனால், காசெட் அவருடைய ஆய்வுக்கட்டுரையை ஸ்டூடண்ட் என்ற பெயரில் வெளியிட்டார். அப்படி அவர் வெளியிட்ட ஒரு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் டெக்னிக்தான் மிகவும் பாப்புலரான ஸ்டூடண்ட்ஸ் டீ-டெஸ்ட். ஸ்டூடண்ட் என்ற புனைப்பெயரில் வெளியிட்டதால் மட்டுமே டீ-டெஸ்ட்டிற்கு ‘ஸ்டூடண்ட்ஸ் டீ-டெஸ்ட்’ என்ற பெயர் வந்தது. இது எதனை உணர்த்துகின்றது என்றால் எந்த அளவிற்கு ஸ்டாட்டிஸ்டிக்கல் டெக்னிக்குகளுக்கு அந்தக்காலத்தி லேயே தொழிலில் முக்கியத்துவம் தரப்பட்டது என்பதைத்தான்.

அந்தக் கால கட்டத்தில் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் நிபுணர்கள் ஸ்டாட்டிஸ்டிக்கல் டெக்னிக்குகளை கண்டறிந்ததோடு மட்டுமல்லாமல் தொழிலில் இருக்கும் சூட்சுமங்களையும் ஆராய்ந்து சொல்பவர்களாக இரட்டைப் பங்களிப்பு (ரோல்) தனை கொண்டிருந்தனர். இன்று கணினிமயமான உலகில் இதுபோன்ற டேட்டா அனாலிசிஸில் கணக்குகளைப் போட கம்ப்யூட்டர் புரோகிராம்கள் ரெடிமேடாக கிடைக்கின்றன. புதிய ஸ்ட்டாஸ்டிக்கல் டெக்னிக்குகள் பெரியதாய் வராவிட்டாலும் டேட்டாக்களின் குவியல்தான் எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருகின்றது.

இன்றைய தேவை என்ன?

நிறுவனங்களுக்கு இன்றைக்குத்தேவையானது யாரென்றால் தொழிலின் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு கேள்விக்கணைகளைத் தொடுத்து முன்னேற்றத்திற்கான பதில்களைப் பெறும் திறன்தனைக் கொண்ட மனிதர்கள்தான். தகவல்களும் அதில் செய்யப்படும் ஆய்வுகளும் அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை ஒரே மாதிரியானவற்றைப் போல் தோன்றினாலும் சேகரிக்கப்படும் டேட்டாக்களில் பல்வேறுவிதமான நூதனங்கள் வந்துவிட்டதால் அந்த நூதன டேட்டாக்களினால் கிடைக்கும் பலாபலன்களும் அளவு கடந்ததாகிவிட்டது.

அந்தக்காலத்தில் கிடைத்த டேட்டாக்களைக் கொண்டு தொழில் நடை முறையின் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில்களைக் கண்டறிய முடிந்தது. இன்றோ வகைவகையாய், தினுசுதினுசாய் டேட்டாக்கள் தொழில் நடைமுறையில் இருந்து அள்ளவும் ஆராயவும் படுகின்றன. என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளும் டிஸ்கிரிப்டிவ் அனாலிசிஸில் ஆரம்பித்தது இந்த நிகழ்வுகள்.

இன்று ஐம்பது வயது நடைபெறுபவர்களுக்கு அவர்களுடைய வேலையில் எம்ஐஎஸ் (மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்) என்பது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டபோது இருந்த த்ரில் நன்றாக நினைவில் இருக்கும். என்ன நடந்தது என்று தொகுத்துத் தந்த எம்ஐஎஸ்-தனை டிசைன் செய்பவரின் முகத்தில் இருந்த சாதனைப் பெருமைதனை மறந்திருக்க மாட்டீர்கள். அட! என்னத்தையோ புதுசா சொல்றாம்ப்பா! என்று அனைவருமே ஆச்சரியப்பட்ட காலம் அது. அந்த த்ரில்லில் எக்கச்சக்கமாக ரீம்ரீமாக பேப்பர்களில் எம்ஐஎஸ்களை எடுத்துவைத்துக்கொண்டு ரூம்போட்டு பேசி மனுசனை என்னமாக பாடாய்ப்படுத்தினார்கள் என்று கூட நீங்கள் சொல்லக்கூடும்.

நடந்ததை தெரிந்துகொண்டால் மட்டும் போதுமா? அதற்கு அடுத்தபடியாக தொழில்கள் ஏன் இது நடந்தது என்ற கேள்விக்கு விடை தேட ஆரம்பித்தன. நிறுவனங்கள். இதை டயக்னாஸ்டிக் அனாலிசிஸ் என்றார்கள். இது டிஸ்க்ரிப்டிவ் அனலிடிக்ஸிற்கு அடுத்தபடியாக கொண்டாடப்பட்டதொரு விஷயம். இதையும் தாண்டி தற்போது சூப்பர் ஸ்டாராக இருப்பது என்ன நடக்கும் என்பதைச் சொல்லும் ப்ரிடிக்டிவ் அனலிடிக்ஸிம், அது நடக்க நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது அது நடக்கும் வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் பிரிஸ்கிரிப்ட்டிவ் அனலிடிக்ஸிம்.

தொழிலில் முக்காலம் அறிதல்!

சிம்பிளாய்ச் சொன்னால் தொழில் நடப்பிலும் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என முக்காலங்கள் உண்டு. தொழில் பாட்டுக்கு நடந்தது. ஆரம்பத்தில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்றெல்லாம் இருந்த தொழில் முனைவோர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். அதன் விளைவுதான் இந்த அனாலிசிஸ்கள் வந்த பின்னர் என்ன வந்தது என்று எம்ஐஎஸ் பார்த்து தெரிந்துகொண்டது ஒருகாலம். வந்ததைப் பற்றி நுண்ணறிவு பெற்று வந்ததில் நல்லதை மட்டுமே மீண்டும் மீண்டும் நடக்க வைக்கத் தேவையானவற்றை கண்டுபிடித்து வாழ்ந்தது ஒருகாலம்.

இந்த இரண்டுகாலத்திலும் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை நம்மால் முடிவு செய்ய இயலாமல் இருந்தது. நம் தொழில் திறமைக்கேற்ப வருவதை செம்மைப் படுத்தி தொழில் செய்தோம். இன்றைக்கோ நாம் நினைப்பதை நம் வசம் கொண்டுவருவதற்கான உத்திகளை கண்டறிய ஆரம்பித்துள்ளோம். பிக்டேட்டா அனலிடிக்ஸ் இந்த வகையில் உதவப்போகும் முதல் டெக்னிக் என்றே சொல்லலாம்.

இது வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் பிக்டேட்டா அனலிடிக்ஸ் செம்மைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகமாகவே இருக்கின்றது எனலாம். இதனாலேயே எதிர்காலத்தில் தொழில் முனைவோர்கள் முக்காலமும் உணர்ந்த ஞானிகளாகத் திகழும் வாய்ப்பு இருக்கின்றது எனலாம். டேட்டா குவியல்கள் போய் ` அகல உழுவதைவிட ஆழ உழு’ என்பதற்கு இணங்க மிகவும் அதிக உபயோகபடுகின்ற ப்ரீமியம் டேட்டா அனலிடிக்ஸிற்காக டேட்டாக்கள் சேகரிக்கப்படும் வாய்ப்புகளும் கூட எதிர்காலத்தில் வரலாம்.

முதல்வனாய் இருக்க முதலில் போ!

எந்த ஒரு தொழிலானாலும் சரி, மேனெஜ்மெண்ட் டெக்னிக் ஆனாலும் சரி பர்ஸ்ட் மூவர் அட்வான்ட்டேஜ் என்ற ஒன்று முதலில் செய்ய/உபயோகப்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு இருக்கவே செய்கின்றது. ஏற்கனவே சொன்னதைப்போல் ஸ்டாட்டிஸ்டிக்ஸின் உபயோகத்தை பல நிறுவனங்கள் உபயோகப்படுத்தி லாபமும் அடைந்தன.

அதே போல் சிக்ஸ்-சிக்மா என்ற தர நிர்ணய டெக்னிக்தனின் உபயோகத்தைக் கண்டறிந்து (1996-1998களில்) அதை தொழிலின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தியதன் மூலம் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியால் கணிசமான அளவு லாபத்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது என்று சொல்கின்றது வரலாறு. பிக்டேட்டா அனலிடிக்ஸிலும் இந்த நிலை தொடரலாம். அதனாலேயே பல நிறுவனங்களும் அனலிடிக்ஸின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. தொழிலுக்கு டேட்டா எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு ஸ்டாட்டிஸ்டிக்கல் டெக்னிக்குகளும் பிக்-டேட்டாவில் முக்கியம். இதுவே இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய சேலஞ்ச் எனலாம்.

ஏனென்றால், தவறான ஸ்டாட்டிஸ்டிக்கல் டெக்னிக்குகள் தரமில்லாத டேட்டாக்களைக்கூட சூப்பர் டேட்டாவாக காட்டிவிடும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. பிக்-டேட்டாவின் வேலை நடக்கப்போவதை கணிப்பது. அதனாலேயே மிகமிக துல்லியமாக அதன் கணிப்புகள் இருக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. மதியம் 2.42ல் இருந்து 3.17 மணி வரை மழைபெய்யும் என்பது மழை குறித்த சூப்பரான துல்லியமான கணிப்பு. மாறாக, என்றைக்கு பெய்யும் என்று கேட்டால் “அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள்” என்று சொன்னால் அந்த கணிப்பை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்?

நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் இதை முழுமையாகப் புரிந்துகொண்டால் பயனளிக்கக்கூடியதொரு அனலிடிக்ஸ் டிப்பார்ட்மெண்ட்தனை தங்கள் நிறுவனத்தில் உருவாக்க முடியும்.

நிறைவு பெற்றது!

cravi@seyyone.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x