Last Updated : 07 Oct, 2014 09:50 PM

 

Published : 07 Oct 2014 09:50 PM
Last Updated : 07 Oct 2014 09:50 PM

மன்னிப்பு கேட்டது பிளிப்கார்ட்

பிக் பில்லியன் டே விற்பனை மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பலருக்கு ஏமாற்றத்தையும் அளித்த மின்வணிக தளமான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

பெரிய அளவில் திட்டமிட்டிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு கசப்பான அனுபவம் ஏற்படும் நிலை உண்டானதற்காக வருந்துதாக பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய இமெயிலில் தெரிவித்துள்ளது.

இந்திய மின்வணிக சந்தையில் முன்னணியில் இருக்கும் பிளிப்கார்ட் நேற்று ( அக்டோபர் 6 ) பில் பில்லியன் டே எனும் பெயரில் மாபெரும் விற்பனையை அறிவித்தது. 50 சதவீதம் வரை பல பொருட்களை தள்ளுபடியில் வாங்கலாம் என்றும் அறிவித்தது.

இதனால் இணையவாசிகளும், வாடிக்கையாளர்களும் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புடன் பிளிப்கார்ட் இணையதளத்தை முற்றுகையிட்டனர். இப்படி ஒரே நேரத்தில் அதிகமானோர் முற்றுகையிட்டதால் பிளிப்கார்ட் இணையதளம் திணறியது. விளைவு பல வாடிக்கையாளர்களால் பொருட்களை வாங்க முடியவில்லை. இணையதளம் அணுக முடியாமல் இருப்பதாக உணர்த்தும் பிழை செய்திகளை பலர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அது மட்டும் அல்லாமல் பொருட்களை ஆர்டம் செய்த போது , இருப்பில் இல்லை, விற்றுததீர்ந்துவிட்டது, உங்கள் பகுதியில் டெலிவரி கிடையாது என பல வித ஏமாற்றங்களை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்து. இந்த ஏமாற்றத்தை வாடிக்கையாளர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். இதற்காக என்றே உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகளும் பிரபலமாயின.

பிளிப்கார்ட்டின் மாபெரும் விற்பனை அறிவிப்பு பெரும் ஏமாற்றம் என்ற கருத்தே நிலவியது. பிளிப்கார்ட் திட்டம் பிளாப்கார்ட் ஆகிவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகின. பிளிப்கார்ட் விற்பனை மூலம் பலர் பயன்பெற்றாலும் பலர் ஏமாற்றமடைந்தனர்.

இந்த அறிவிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் பற்றி இணைய உலகில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

அதன் நிறுவனர்கள் சஞ்சய் மற்றும் பின்னி பெயரிலான அந்த இமெயிலில், “நேற்று எங்களுக்கு மிகப்பெரிய தினம். இது உங்களுக்கும் அருமையான தினமாக இருக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் இறுதியில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் அத்தனை இனிமையாக இல்லை என அறிகிறோம். நாங்கள் அளித்த உறுதிக்கு ஏற்ப எங்களால் செயல்படமுடியவில்லை. இதற்காக வருந்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக பல மாதங்களாக திட்டமிடப்பட்டு , தயாரான நிலையிலும் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு வாடிக்கையாளரும் முக்கியம் என்றும். 7 ஆண்டுகளாக அரும்பாடு பட்டு உருவாக்கி வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகும் நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடம் கற்றிருப்பதாகவும் வாடிக்கையாளர் சந்தித்த பிரச்சனைகளை தீர்க்கும் பணி துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய விற்பனையின் போது வாடிக்கையாளர் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளுக்கான காரணமும் விளக்கப்பட்டுள்ளது.பிளிப்கார்ட் விமர்சனத்திற்கு இலக்கானாலும் வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் சரியான செயலை செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x