Last Updated : 22 Jan, 2014 11:03 AM

 

Published : 22 Jan 2014 11:03 AM
Last Updated : 22 Jan 2014 11:03 AM

மனிதவளம்: உலக மயமும் உள்ளூர் நலனும்

தொழில் நிமித்தமாக அந்த மனித வளத்துறை மேலாளரை சந்திக்க வேண்டியிருந்தது. மிகுந்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு ஒரு சின்ன கியூபிகளில் எங்கள் சந்திப்பு நடந்தது. அது ஒரு அயல் நாட்டு வாகன உற்பத்தி நிறுவனம். மொத்தம் 5 பேர் கொண்ட Green Field Operation தற்போது இயங்கி வருகிறது. அந்த அயல் நாட்டு முதலாளி மட்டும் மாதம் ஒரு முறை வந்து வந்து போய் கொண்டிருக்கிறார். துறைத் தலைவர்கள் தற்போதுதான் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். சென்னைக்கு வெளியே 60 கி.மீ. தொலைவில் இரு ஆண்டுகளில் ராட்சஷத்தனமாக வளரத் திட்டமிடும் அந்த நிறுவனத்தின் விதை வடிவம் இந்த அலுவலகம் எனச் சொல்லலாம்.

மனித வளத்துறைத் திட்டங்கள் குறித்து பேச்சு வந்தது. எடுத்த எடுப்பிலேயே குண்டைப் போட்டார்: “தமிழ் நாட்டிலிருந்து ஒரு தொழிலாளியைக் கூட எடுக்கப் போவதில்லை. அனைத்தும் வட மற்றும் வட கிழக்கு மாநில ஆட்களைத்தான் தேர்வு செய்யப் போகிறோம். எல்லோரும் டிப்ளமோ படித்தவர்கள். பயிற்சி மாணவர்களாய் சேர்ந்து லைனில் வேலை செய்வார்கள். பயிற்சி முடிந்து அவர்களில் பாதிப் பேரை பொறியாளர்களாய் பணி நிரந்தரம் செய்வோம். தொடந்து புது ஆட்கள் எடுப்போம். இதுதான் எங்கள் துறைத் தலைவரின் திட்டம்.”

“வெளி மாநிலத்தினர் என்றால் என்றால் எங்கு தங்குவது...?” என்று நான் முடிப்பதற்குள், “எல்லோருக்கும் விடுதி கட்டி உள்ளேயே தங்க வைப்போம். செலவு கூடுதல்தான். யூனியன் வராமல் இருக்க இதெற்கெல்லாம் செலவு செய்தல் தப்பில்லையே?” என்று கேட்டு சிரித்தார்.

என் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட நண்பர் (என்னை அங்கு அழைத்துச் சென்றவர்) கலவரமாய்ப் பார்த்தார். “யார் உங்கள் துறைத் தலைவர்?” என்று கேட்டேன். பெயர் சொன்னார். ஒரு வட நாட்டவர். சென்னையில் இதுவரை பணியாற்றியதில்லை. டெல்லியில் உள்ள ஒரு வெளிநாட்டு கன்சல்டிங் கம்பனி மூலம் வேலைக்குச் சேர்ந்தவர்.

தொழிற்சாலை அமைக்கப்படும் இடம் சார்ந்த சமூக, அரசியல் யதார்த்தங்கள் அறியாமல் டெல்லியில் உட்கார்ந்து கொண்டே வியூகங்கள் அமைக்கும் தலைமையை என்ன சொல்ல?

தொழிற்சங்கம் என்றாலே வேலை பாதிப்பு என்று தவறாய் புரிந்து கொள்வது ஏன்? சென்னையைக் கலவர பூமியாகச் சித்தரிக்கும் விஷமத்தனத்தை யார் செய்வது? ஒரு கம்பெனியில் உள்ளூர் தொழிலாளர்கள் போராடினார்கள் என்பதற்காக வெளி மாநில தொழிலாளிகளைக் கொண்டு எவ்வளவு ஆபத்தான போக்கு? வெளி மாநிலத் தொழிலாளிகள் போராட மாட்டார்கள் என யார் சொன்னார்கள்? டிப்ளமோ மாணவர்கள் என்று சொல்லி தொழிலாளிகளின் பணியைச் செய்ய வைக்கும் தந்திரத்தை எத்தனை நாளுக்குச் செய்ய முடியும்?

இவை அனைத்தையும் விட மிகப் பெரிய பாதிப்பு அந்த தொழிற்சாலை வரவிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்குத்தான். வாழ்வார பாதிப்பு, வேலையின்மை, சொந்த இடத்திலிருந்து வெளியேற்றம் என தொடர் இன்னல்கள்.

பொதுவாக இது நாள் வரை ஒரு தொழிற்சாலை வரும் பொழுது அதன் பாதிப்பால் அவதிப்படும் மக்களுக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள் கிட்டும். சில தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த ஊரில் இருப்பு பாதிக்கப்படாது. சில ஊரக நலன் திட்டத்திற்கு ( ஏரி தூர் வார, பள்ளிக்கூட சீரமைப்பு, கோயில் திரு விழா உபயம், சாலை- குடி நீர் வசதி) கம்பெனிகள் உதவி செய்யும்.

கம்பெனிக்கு தங்கள் குடும்பத்தினர் வேலைக்கு செல்வதால் அதன் பால் மிகுந்த ஈடுபாடும் விசுவாசமும் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் கம்பெனி நன்றாக நடக்க வேண்டும் என்கிற எண்ணம் கிராமப் புறங்களில் இருக்கும்.

ஒரு பெரிய சுவர் எழுப்பி, அதனுள் அயல் நாட்டவரும் வெளி மாநிலத்தினரும் செயல் பட்டால், வெளியில் உள்ள சமூகம் மெல்ல அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும்.

அதுபோல உள்ளே பணிபுரியும் வெளி மாநிலத்து மாணவர்களும் கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போல வீடு திரும்ப வழி இல்லாமல் 3 ஆண்டுகள் பல்லைக் கடித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டி வரும்.

ஆக, தமிழ் நாட்டில் யாருக்குமே பலன் அளிக்காத ஒரு தொழிற்சாலை தமிழ் நாட்டில் எதற்கு? மலிவான நிலம் தந்து, மின்சாரமும் தந்து, சகல விதங்களில் அவர்கள் பிழைக்க வழி செய்து அதன் மூலம் நம் மக்கள் யாருக்கும் கிஞ்சித்தும் பலன் இல்லை என்றால்?

இவை எல்லாம் தெரியாத வட நாட்டு ஹெச். ஆர் தலைவர் தன் குழுவிலேயே தமிழ் தெரியாத இரண்டு பேரை வைத்துள்ளார். சில ஆண்டுகள் கழித்து பிரச்சினைகள் வரும் போது இந்த குழுவில் எத்தனை பேர் தொடர்ந்து இந்த கம்பெனியில் இருப்பார்கள் எனத் தெரியாது.

பொறுமையாக எல்லாம் கேட்டு விட்டு, உள்ளூர் பணியாளர்கள் அமர்த்தப் படுவதால் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபங்களையும் மறைமுக பலன்களையும் நிதானமாகப் பட்டியல் போட்டேன். உள்ளூர் மக்களின் நன் மதிப்பும் விசுவாசமும் அரசியல்ரீதியாகவும் முக்கியமானது என்றும் விளக்கினேன்.

கடிக்கவும் முடியாமல் துப்பவும் தைரியம் இல்லாமல் மென்று விழுங்கினார் அந்த மேலாளர். இது பற்றி அவர் தலைவரிடம் பேசவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தேன்.

ஒரு மனிதனின் ஆளுமைக்கு முதல் ஐந்து ஆண்டுகள் எப்படி முக்கியமோ அது போல ஒரு நிறுவனத்தின் ஆளுமைக்கும் முதல் ஐந்து ஆண்டுகள் முக்கியம். இதை சில உதாரணங்களுடன் புரிய வைத்தேன்.

இடையே வெளியே ஒரு அவசர விஷயம் பேச கைப்பேசியுடன் சென்றிருந்த நண்பர் திரும்பினார். நாங்கள் போன காரியம் பற்றியும் எங்கள் பணிகள் பற்றி சொல்லியும் விற்பனை வேலையை ஆரம்பித்தார். பத்து நிமிடத்தில் மிகவும் சாதகமாக பதில் சொல்லி விவாதத்தை நிறைவு செய்தார் மேலாளர். கண்டிப்பாக துறைத் தலைவர் சென்னை வரும் போது ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புவதாகவும் சொன்னார்.

விற்பனை செய்ய வேண்டிய இடத்தில் விவாதம் செய்து விட்டேனோ என்று அஞ்சியவாறு திரும்ப நடந்து கொண்டிருந்தேன். அழைத்து சென்ற நண்பரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

செக்யூரிட்டு ஸ்லிப்பில் கையெழுத்துப் போட்டவாறு அந்த மேலாளர் மிகுந்த சினேகமாக சிரித்துவிட்டு சொன்னார்: “சார் பேசியது அவ்வளவு புதுசா இருந்தது. ஒரு யூனியனிஸ்ட் மாதிரி பவர்ஃபுல்லா இருந்தது. நான் நிறையக் கத்துக்கிட்டேன். இங்க எவ்வளவு முடியும்னு தெரியல. ஆனா என் கேரியர்ல நீங்க சொன்னதைக் கண்டிப்பா செய்வேன். அப்புறம் நிச்சயம் உங்க உதவியை எடுத்துக்கறேன்!”

“போன் பேசிட்டு வர்றதுக்குள்ள என்னப்பா சொன்னே? அப்படியே மாறிட்டார் அவரு?” என்று காரில் ஏறும் போது கேட்டார் நண்பர்.

“உண்மையச் சொன்னேன் என்றேன்!”

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x