Last Updated : 12 Nov, 2014 10:47 AM

 

Published : 12 Nov 2014 10:47 AM
Last Updated : 12 Nov 2014 10:47 AM

மகசூலை இருமடங்காக்கும் நாற்று முறை கரும்பு சாகுபடி

நாற்று மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இடுபொருட்கள், பராமரிப்புக்கான செலவைக் குறைத்து குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு விளைச்சலை இருமடங்காக அதிகரிக்கலாமென தனது அனுபவத்தை தெரிவிக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முன்னோடி கரும்பு விவசாயி தேவதாஸ்.

கரும்பு சாகுபடிக்கு தற்போது கரணை முறையே பிரதானமாக பயன்டுத்தப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக்கரும்பு தேவைப்படுகிறது. மேலும் இதற்கான வெட்டுக்கூலி, சுமை வாடகை, நடவு கூலி இவற்றால் ஏக்கருக்கு சுமார் ரூ. 18 ஆயிரம் செலவாகிறது. ஆனால், இந்த செலவைப் பாதியாகக் குறைக்கவும், ஆரோக்கி யமான பயிர்களை உருவாக்கி விளைச்சலை அதிகரிக்கவும் நாற்று முறை சாகுபடி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த சாகுபடி முறை பற்றி விவசாயி தேவதாஸ் கூறியதாவது:

``நோயில்லாத 5 முதல் 6 மாதத்திலான கரும்பைத் தேர்ந்தெடுத்து தோகைப்பகுதியை நீக்கிவிட்டு அதில் கணுப்பகுதியில் உள்ள பருவை அதற்கான கட்டிங்மெஷின் மீலம் வெட்டி தனியாக எடுக்க வேண்டும். (இதற்கான கட்டிங் மெஷின் ரூ. 2500-ல் கிடைக்கிறது.) ஒரு ஏக்கருக்கு 5000 பருக்கள் தேவைப்படும். இப்பருக்களை 200 கிராம் பாவிஸ்டின் பவுடர், 50 கிராம் யூரியா, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் சேகரிக்கப்பட்ட கரும்பு பருக்களை 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர், ஒரு அடி உயரம், 10 அடி அகலத்துக்கு தென்னை நார்க்கழிவுகளை பரப்பி அதன்மீது பருக்களை மட்டும் இட்டு அதன்மீது ஈரப்பதமான தென்னை நார்க்கழிவுகளை தூவ வேண்டும்.

பின்னர், மூன்று நாட்களுக்குப் பிறகு பருக்கள் முளைகட்டிய நிலையில் இருக்கும். ஒவ்வொரு பருக்களையும் எடுத்து 50 குழித்தட்டுகளில் (இதற்காக தனியாக பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கிறது) கால் அளவு கம்போஸ்ட்டாக மாற்றப்பட்ட தென்னை நார்க்கழிவு இட்டு அதில் முளைக் குருத்து மேல்நோக்கி இருக்குமாறு பருக்களைப் பதிக்க வேண்டும். தொடர்ந்து நிழல் வலைப் பகுதியில் 22 நாட்கள் கவனமாகப் பராமரிக்க வேண்டும். தயாரான 5000 கன்றுகளை ஒரு ஏக்கரில் ஐந்தரை அடி இடைவெளியில் பார் அமைத்து அதில் நடலாம்.

இவ்வாறு நாற்று முறை கரும்பு சாகுபடிக்கு சொட்டு நீர்ப்பாசனம் நல்ல முறையில் கைகொடுக்கிறது. இதற்கு அரசு மானியம் வழங்குகிறது. அதிலேயே தேவையான உரங் களையும் இடுவதால் பயிரும் திரட்சியாக வளர்கிறது. களை கட்டுப்படுத்தப்படுகிறது. பராமரிப்பு மிகவும் எளிதாகிறது. மேலும், இயந்திரம் மூலம் அறுவடை செய்ய வசதியாக உள்ளது. இத்தகைய நாற்று முறை சாகுபடியின் மூலம் நடவு செலவில் 50 சதவீதத்தைக் குறைக்கலாம். அதோடு, விளைச்சலை இருமடங்காக அதிகரிக்கலாம். ஒரு ஹெக்டேரில் 200 டன் கரும்பு அறுவடை செய்துள்ளேன். . மேலும், விவசாயிகளுக்கு நாற்று களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதோடு, கன்று தயாரிக்கும் முறைகளை இலவசமாக கற்றுக் கொடுக்கிறேன் என்கிறார். விவரங்களுக்கு: 97865 06343.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x