Published : 25 Mar 2017 10:43 AM
Last Updated : 25 Mar 2017 10:43 AM

தொழில் ரகசியம்: விட்டதை பிடிக்க இருப்பதை விடாதீர்கள்

மனைவி நச்சரித்தாள் என்று அவ ளோடு படம் பார்க்கச் செல்கிறீர் கள். அவள் நச்சரிப்பே தேவலை என்பது போல் கண்றாவியாய் இருக் கிறது படம். பொறுக்க முடியாமல் இடை வேளையில் ‘வீட்டுக்கு போயிடலாம்ங்க’ என்கிறாள். ‘இந்த பாடாவதி படத்துக்கு பணம் தண்டம் அழுதிருக்கேன். அத வேஸ்ட் பண்ண சொல்றியா? முழுசா பார்த்து தொலைப்போம்’, என்று கூறுவீர்கள் இல்லையா?

கல்யாணத்தின் போது வாங்கிய கார். ரிப்பேர் ஆகிறது. கல்யாணம்தான் மக்கராகி நிற்கிறது, காரையாவது சரி செய்வோம் என்று ஏகத்துக்கு செலவழிக்கிறீர்கள். சில நாள் கழித்து மீண்டும் ரிப்பேர். காரை வந்த விலைக்கு விற்க மனமில்லாமல் இவ்வளவு செலவழிச்சோமே என்று மீண்டும் ரிப்பேர் செய்வீர்கள் தானே?

இரண்டு கேள்விகளுக்கும் உங்கள் பதில் ‘ஆமாம்’ என்றால் ‘சங்க் காஸ்ட் ஃபேலசியில் தொபுகடீர் என்று விழந் திருக்கும் வித்தகரே. கை ஊன்றி எழுந்து வருக’ என்று போர்டு வைத்து உங்களை இக்கட்டுரைக்கு வரவேற்கிறேன்!

பொருளாதார சித்தாந்தப்படி ஏற்கனவே செலவழிக்கப்பட்ட, ரெகவர் செய்யமுடியாத செலவை சங்க் காஸ்ட் என்பார்கள். சங்க் காஸ்ட் என்பதற்கு மூழ்கிய செலவு என்று பொருள். சினிமா தியேட்டரில் பாதி படத்தில் எழுந்து போனால்தான் பணம் வேஸ்ட் என்று நினைக்கிறீர்கள். ஆனால் எப்பொழுது நீங்கள் கவுண்டரில் கை நீட்டி பணம் தந்தீர்களோ அப்பொழுதே உங்கள் பணம் போய்விட்டது. மனம்தான் அப்படி பார்க்க மறுக்கிறது. கார் ரிப்பேர் மேட்டரும் அவ்வாறே. ரிப்பேர் செய்தோம் என்பதற்காக மீண்டும் ரிப்பேர் செய்கிறீர்கள். விட்டதை பிடிக்க இருப்பதை விடுகிறீர்கள். இதைத் தான் ‘மூழ்கிய செலவு போலிவாதம்’ (Sunk Cost Fallacy) என்கிறார்கள்.

இக்குறைபாட்டில் எத்தனை தரம் விழுகிறோம்?

அனுதினமும். என்ன, நாம் உணர்வ தில்லை. அவ்வளவே. சற்றே யோசித் தால் எத்தனை முறை சங்க் காஸ்ட் ஃபேலசியில் விழுந்து அறிவற்ற முடிவுகள் எடுக்கிறோம் என்று புரியும். ஆங்கிலம் சரளமாக பேச ஆசைப்பட்டு ஆங்கில பயிற்சி வகுப்பில் சேர்கிறீர் கள். சொல்லித் தருபவரின் ஆங்கிலம் மகா மோசம். அவரே ஆங்கிலத்தை தமிழில் தான் எழுதி பாஸ் செய்திருப் பார் போலிருக்கிறது. சேர்ந்த பாவத் திற்கு மீதி வகுப்புகளுக்கு போவீர் களா மாட்டீர்களா? ‘இதுவரை வந்தாகி விட்டதே’, ‘இத்தனை செய்துவிட் டோமே’, ‘இவ்வளவு கொடுத்துவிட் டோமே’ என்று எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ அப்பொழுதெல் லாம் சங்க் காஸ்ட் போலிவாதம் மன தில் சடுகுடு ஆடுகிறது என்று அர்த்தம்!

சங்க் காஸ்ட் என்பது வருங்காலத்தின் பயனை பார்க்காமல் கடந்த காலத்தின் செலவைப் பார்ப்பது. நேற்று என்ன விலை தந்தோம் என்று பார்க்கும் நாம் அதனால் நாளை கிடைக்கும் பயனைப் பார்ப்பதில்லை. அதனால் தான் சங்க் காஸ்ட்டை பின்னோக்கி பார்க்கும் முடிவுகள் (Backward-looking decisions) என்கிறார்கள். இப்படிச் சொல்வதால் சங்க் காஸ்ட் கோட்பாடு பணம் சம்பந்தப்பட்ட மேட்டர் மட்டும் என்று நினைக்காதீர்கள். பிடிக்கவில்லை என்றாலும் இத்தனை நாள் வாழ்ந்தாகி விட்டது இனி எதற்கு மாற்றிக்கொண்டு என்று பொருந்தாத மனைவியுடன் கணவன்கள் வாழ்வது கூட சங்க் காஸ்ட் போலிவாதத்தால் தான்!

இப்படியெல்லாம் கூறுவதால் இக்கோட்பாடு ஏதோ நீங்கள், நான் போன்ற மானிட பதர்கள் விழும் குழி என்று எண்ணாதீர்கள். அரசாங்கங்கள் கூட இப்படுகுழியில் விழுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தும் பிரான்ஸும் சேர்ந்து ‘கான்கார்ட்’ என்னும் விமானத்தை கூட்டாக தயாரிக்க முடிவு செய்தன. ஒலியை விட வேகமாக பறக் கும் சக்திகொண்ட அதிவேக விமானம். ஏகத்துக்கும் பணத்தை முழுங்கிய புராஜக்ட். ஆரம்பித்த நாள் முதல் நஷ்டம்தான். ‘வணிக பேரழிவு’ என்றே இந்த புராஜக்ட் வர்ணிக்கப்பட்டது. சரி போனது போகட்டும் என்று விட்டார்களா?

ம்ஹும். கைவிட மனமில்லாமல் நஷ்டத்திலேயே நடத்தினார்கள். ‘இத்தனை செலவழித்தோமே, ஊரெல்லாம் பீற்றிக் கொண்டோமே, இப்பொழுது எந்த முகத்தை வைத்துக் கொண்டு மூடுவது’ என்ற பயமே காரணம். இதனால் இக்கோட்பாட்டிற்கு ‘கான்கார்ட் போலிவாதம்’ என்று இன்னொரு பெயரும் உண்டு!

`கடன் கொடுத்த கம்பெனிகள் சரியாய் போகாதபோது கொடுத்த கடனை திரும்பப் பெற வங்கிகள் மேலும் மேலும் கடன் கொடுத்து சிக்குவது கூட இக்கோட்பாட்டின் கோரப்பிடியில் கட்டுண்டு கிடப்பதால்தான்.

மூழ்கிய செலவு போலிவாதத்தில் நாம் மூழ்க மூன்று காரணங்கள் முன்வைக்கலாம். கண்ணுக்கு தெரிந்து எதையும் வேஸ்ட் செய்ய பலருக்கு பிடிப்பதில்லை. உங்கள் எதிரே நூறு ரூபாய் தாளை எடுத்து நான் அதை யாருக்காவது தருவதற்கு பதில் எரிக்கப் போகிறேன் என்றால் ‘எதற்கு வேஸ்ட் செய்கிறீர்கள், அதை யாருக்காவது கொடுக்கலாமே’ என்று உங்களுக்கு தோன்றும். என் நூறு ரூபாயை யாருக்கோ தந்தாலோ எரித்தாலோ உங்களுக்கு அதனால் எங்கு எரியப் போகிறது? கண் எதிரே ஒருவர் பணத்தை கிழித்து வேஸ்ட் செய்கிறேன் என்கிறானே என்ற வயித்தெறிச்சலால் தான்!

இரண்டாவது, நாம் சரியான முடிவெடுப்பவர் என்று மற்றவர்கள் நினைக்க விரும்புகிறோம். ஏதோ ஒன்றை செய்யத் துணிந்து அது சரியாய் செல்லாத போது ‘ஒழிந்து போகிறது, மூழ்கிய செலவு என்று நாம் விட்டால் முன்னே எடுத்த முடிவு தவறானது என்று ஆகிவிடுமே’ என்று அஞ்சுகிறோம். எடுத்த முடிவை சரியானது என்று எப்பேற்பட்டாவது அனைவருக்கும் காட்ட செய்யும் வேலையை தொடர்கிறோம். அது மொத்தமாய் குட்டிசுவர் ஆகும் வரை.

மூழ்கிய செலவு போலிவாதத்தில் பலர் விழ மூன்றாவது முக்கிய காரணம் லாஸ் அவர்ஷன் என்கிறார்கள் உளவியலாளர்கள் ‘டேனியல் கான்மென்’ மற்றும் ‘அமாஸ் ட்வெர்ஸ்கி’. லாபம் அடைவதை விட நஷ்டம் அடையாமல் இருப்பதை விரும்புகிறோம். அதனால் நஷ்டம் அடையும்போது அதை நிவர்த்தி செய்ய முயல்கிறோம். ‘அய்யோ பணத்தை அழுது தொலைத்திருக்கிறோமே, இதை எப்படி பாதியில் விடுவது’ என்ற எண்ணமே நம் கண்களை மறைக்கிறது. ‘செலவு செய்வதன் சிரமம்’ (Pain of paying) என்று இதை அழகாக வர்ணிக்கிறார் சமூக உளவியலாளர் ‘டேன் ஏரியலி’.

அழுத பணமும், செய்த முயற்சியும் வேஸ்ட் இல்லை என்று உங்களையும் மற்றவர்களையும் நம்ப வைக்க மீண்டும் அதையே செய்கிறீர்கள். மாறுவதை விட மாறாமல் இருப்பதன் மூலம் வருத்தம் இருக்காது என்ற தவறான நம்பிக்கையே இதற்கு காரணம்.

வாழ்க்கையை விடுங்கள், வியாபாரத்தில் மூழ்கிய செலவில் முத்தெடுப்பவர் உண்டு. யாரோ ஒரு ஊழியரை பல காலம் தேடிப் பிடித்து தேர்வு செய்தோம் என்பதற்காக அவர் சரியில்லாதபோதும் அவரை கட்டிக்கொண்டு அழுவார்கள். செலவு செய்து எடுத்த டீவி விளம்பரம் உருப்படியாய் எதையும் செய்யாமல் இருந்தாலும் எடுத்தோமே என்று அதை மாற்றாமல் பயன்படுத்துவார்கள்.

நடந்ததைப் பற்றி நினைத்து அதை நியாயப்படுத்தாமல், நடக்கப் போவதையும் அதனால் விளையும் நன்மைகளை நினைத்துப் பாருங்கள். சில சமயங்களில் செய்த முயற்சி முதலில் பயனளிக்காவிட்டாலும் தொலை நோக்கு கொண்டு அணுகும் போது பயனளிக்கலாம். அறிவு கொண்டு அணுகுகிறோமா இல்லை இத்தனை முயன்றோம், இவ்வளவு செலவு செய் தோம் என்பதற்காக மீண்டும் முயல் கிறீர்களா என்று சிந்தியுங்கள். சங்க் காஸ்ட் போலிவாதம் பலரை, பல வேளை களில், பலவித ரூபங்களில் படுத்தும் பலே கோட்பாடு என்பதை நினைவில் வையுங்கள். இதற்கு யாரும் விதி விலக்கல்ல என்பதையும் உணருங்கள்.

இவ்வளவு ஏன். இக்கட்டுரை போரடித் திருந்தாலும் கடைசி வரை படித்து விட்டீர்களே. ஏன்? பாதி படிச்சாச்சு. மிச்சத்தையும் படித்து தொலைப்போம் என்று நினைத்ததால் தானே!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x