Published : 03 Dec 2016 10:40 AM
Last Updated : 03 Dec 2016 10:40 AM

தொழில் ரகசியம்: வாடிக்கையாளர் ஏகாதிபத்தியம் ஒழிக!

ஆயிரம் சொல்லுங்கள். அந்த காலம் மாதிரி வராது. குறிப்பாக தொழிலதிபர்களுக்கு. ஏதோ ஒரு பொருளை எப்படியோ செய்து எவ்வாறோ விற்கலாம். கேட்க நாதி இல்லை. கேட்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நாதி இல்லை. பிசினஸ்மேன் வைத்ததே சட்டம். கேள்வி கேட்க முடியாத, தட்டி கேட்க வக்கில்லாத வாடிக்கையாளர்களை இம்சித்து, இன்புற்றிருந்த தொழிலதிபர்களின் பொற்காலம் அது.

மக்கள் ஹோட்டலில் போட்டதை தின்று, தியேட்டரில் காட்டியதை பார்த்து, கடையில் கிடைத்ததை வாங்கிச் சென்றார்கள். பொருள் சரியில்லையென்றால் அது அவர்கள் விதி. சர்வீஸ் சுமார் என்றால் அது அவர்கள் செய்த பாவம். விலை அதிகம் என்றால் அது அவர்கள் தலையெழுத்து. ஆஹா, எப்பேற்பட்ட காலம். எப்படிப்பட்ட மலரும் நினைவுகள்!

தொழிலதிபர்களுக்கு இஷ்டமாய் இருந்த கஸ்டமர் இன்று கஷ்டமராய் மாறிவிட்டார். இது தான் வேண்டும், இப்படித் தான் வேண்டும், இந்த விலையில் தான் வேண்டும் என்று அநியாயத்திற்கு அடம் பிடிக்கிறார். கேட்டதை கேட்டபடி கொடு; இல்லை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு இழுத்து கழுத்தறுப்பேன் என்று கர்ஜிக்கிறார். தன்னை பூஜிக்காத பிசினஸ்காரர்களை பூச்சாண்டியாய் மாறி பயமுறுத்துகிறார்.

இதெல்லாம் பாழாய் போன மார்க்கெட்டர்கள் கொடுத்த இடம். வாடிக்கையாளரே ராஜா என்று அவர்கள் காட்டிய செல்லம். தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டிய வாடிக்கையாளர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியதால் வந்த வினை. கேட்டு வாங்கி தூக்கு மாட்டிக்கொண்ட மார்க்கெட்டர்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

வாடிக்கையாளர் பைத்தியம் அநியாயத்திற்கு முற்றிவிட்டது., கஸ்டமர் சேவை பிசாசு அக்கிரமத்திற்கு அதிகரித்துவிட்டது. பட்டது போதும் என்று மார்க்கெட்டர்கள் பொங்கி எழவேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார் இங்கிலாந்து ‘உல்ஸ்டர் பல்கலைக்கழக’ மார்க்கெட்டிங் பேராசிரியர் ‘ஸ்டீஃபன் பிரவுன்’. `ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘Torment Your Customers’ என்ற கட்டுரையில் வாடிக்கையாளர்களை மீண்டும் இம்சித்து நையப்புடைக்க வேண்டிய அவசியத்தை அவசரத்தை, அதற்கான அணுகுமுறைகளை ஆத்திரத்தோடு அழகாக அலசுகிறார். வாடிக்கையாளர்களை மீண்டும் வசைபாடி வக்கனையாய் வழிக்கு கொண்டு வர ஐந்து வழிகளை விவரிக்கிறார்.

பிரத்யேக தன்மையை வளருங்கள்

பிராண்டுகளுக்கு பிரத்யேகத் தன்மைகள் தந்து அதை வாங்குவதை அல்லது வாங்கிய பின் வாங்கியவர் கையில் கிடைக்க தாமதப்படுத்துங்கள். உங்கள் பிராண்டை வாங்க மக்களை சிரமப்பட வையுங்கள். திமிர் பிடித்தவர்கள் கொட்டம் அடக்க பிராண்டை அவர்கள் கேட்டவுடன் தராதீர்கள். லோலோ என்று அலையவிடுங்கள்.

‘ஜிமெயில்’ இதைத்தான் செய்தது. மற்ற மெயில் சேவை பிராண்டுகள் போலில்லாமல் ஜிமெயில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அனைவருக்கும் கிடைக்கச் செய்யாமல் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தந்து அவர்கள் தாங்கள் விரும்பிய நூறு பேருக்கு ஜிமெயில் அக்கவுண்ட் திறக்கும் வாய்ப்பை அளிக்கலாம் என்று கூறியது. இதனால் ஜிமெயிலுக்கு ஒருவித பிரத்யேக தன்மை கிடைத்து அதன் மவுசு ஏகத்துக்கும் கூடி மக்களை ஜிமெயில் சேவையை முதலில் பெற்றவர்களைத் தேடிச் சென்று ‘ஐயா தர்ம பிரபு, ஜிமெயில் பிச்சை போடுங்கய்யா’என்று பவதிபிட்சாந்தேகியாய் நிற்க வைத்து திமிர் பிடித்த வாடிக்கையாளர்களுக்கு தக்க பாடம் புகட்டியது.

ரகசியமாய் வைத்திருங்கள்

விற்கிறோம் என்பதற்காக பிராண்ட் பற்றிய தகவல்களை நீங்கள் விளக்கவேண்டிய அவசியமில்லை. உங்கள் பிராண்ட். எது முடியுமோ அதை மட்டும் கூறுங்கள். பிராண்ட் பற்றிய செய்தியை அல்லது பிராண்டையே கூட ரகசியமாக வைத்து வாங்குபவர்களை அலைக்கழிக்க முடியுமா என்று பாருங்கள். அப்பொழுது தான் அகந்தை பிடித்த வாடிக்கையாளர்களுக்கு அறிவு வரும்.

‘கேஎஃப்சி’ தன் சிக்கன் சுவையின் காரணத்தை கூறுவதில்லை. ரொம்ப கேட்டால் ‘ரகசிய சமையல் குறிப்புகளாலும் விசேஷ மூலிகைகளாலும்’ என்கிறது. சுவையாக இருக்கிறதல்லவா, மரியாதையாக போட்டதை தின்றுவிட்டு போங்கள், உங்களிடம் அதை விளக்கிக்கொண்டிருக்க முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக கூறுகிறது.

‘கோகோ கோலா’வும் தன் சுவைக்கு காரணம் ‘7X’ என்ற ஸ்பெஷல் ஃபார்முலா, இது உலகில் ஏழு பேருக்கு மட்டுமே தெரியும் என்கிறது. அது என்ன என்று கேட்பவர்களிடம் `கூறமுடியாது, கூறவேண்டிய அவசியமில்லை, கொடுத்ததை குடித்துவிட்டு கும்பிட்டு ஊர் போய்சேருங்கள்’ என்று வாடிக்கையாளர்கள் ஆணவத்தை அடக்குகிறது.

அநியாயத்திற்கு அதிகரியுங்கள்

வாடிக்கையாளர்களை பயமுறுத்தி உங்கள் தொண்டர் அடிபொடி அடிமையாக்க, அவர்களை அடித்து கொல்லும் அளவிற்கு போகவேண்டிய அவசியமில்லை. பிராண்ட் பற்றி பேச வைத்து அந்த பேச்சை பூதாகரமாய் ஊதி வளர்த்து வாடிக்கையாளரை செவிடாக்கும் செயல்களை செவ்வனே செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள்.

ஐம்பதாயிரம் கலரில் புடவை நெய்து அதைப் பற்றி பத்திரிகை முதல் பிரபலங்கள் வரை, சாமானியர் முதல் சம்சாரிகள் வரை பேச வைத்து, `அய்யோ அது எப்படி இருக்கும், கட்டினால் எப்படி ஜொலிக்கும்’ என்று நினைக்க வைத்து, ஏங்க வைத்து, பாடாய் படுத்தி கடைக்கு ஓடிப் போய் பார்த்து பரவசப்படவைத்து காது ஜவ்வு கிழியும் வரை அதைப் பற்றிய விவாதங்களை வளர்த்து வாடிக்கையாளர்களை வஞ்சித்த ‘ஆர்எம்கேவி’யின் கொடூரத்தை கொஞ்சமேனும் வளர்த்துக்கொள்ளுங்கள்.

வெறுப்பேற்றி மகிழுங்கள்

மார்க்கெட்டிங் ஒரு சுவாரசியம் நிறைந்த சுகமான வேலை. இதை மறந்து பாழாய் போன வாடிக்கையாளர்களை கட்டிக்கொண்டு என்ன சுகத்தை அனுபவித்தீர்கள்? போதும். வாடி வதங்க வைத்த வாடிக்கையாளர்களை வஞ்சகமில்லாமல் வெறுப்பேற்றி வறுத்தெடுக்கும் வழிகளைத் தேடுங்கள்.

திரைப்பட ரிலீஸின் போது `உண்மை கதையை தழுவியது’ என்று கூறும்போது ரசிகர்கள் ‘யாராய் இருக்கும், எதை பற்றியது’ என்று மண்டையை பிய்த்துக்கொள்வது கண்கொள்ளா காட்சியல்லவா. அதே போல் `அர்ஜூன் அம்மா யாரு’ என்று ஊரெல்லாம் உரக்க கூறி `அர்ஜுன் யார், அந்த பாழாய் போனவன் அம்மா யார், அவள் என்ன பண்ணி தொலைத்தாள்’ என்று ஊர் மக்களை உறங்க விடாமல் முடியை பிய்க்க வைத்த ‘ஆரோக்கியா’பாலின் ஆக்ரோஷத்தை அரவணைக்க முயலுங்கள்.

ஏமாற்ற முடிந்தால் எதேஷ்டம்

ஆளை அடித்து உலையில் போடும் அல்டிமேட் ஆயுதம் இது. அதற்காக மக்கள் பணத்தை பிடுங்கிக்கொண்டு பிராண்டை தரமாட்டோம் என்று கூறும் அளவுக்கு போகவேண்டாம். ஸ்மால் சைஸில் தந்திரங்கள் செய்து வாங்குபவர்களை சிக்கலில் மாட்டி வைக்கமுடியுமா என்று சிந்தியுங்கள். சின்ன ரேஞ்சில் சில்மிஷங்கள் செய்து சீண்டிப் பார்க்க முடியுமா என்று தேடுங்கள்.

நண்பர் திருமணத்திற்கு கிஃப்ட் வாங்க கடைக்கு சென்றிருந்தேன். அங்கு அழகான நகைப்பெட்டி போன்ற ஐட்டம் கண்களைக் கவர்ந்தது. அதன் சைடில் ‘ஆபத்தென்றால் மட்டும் இழுக்கவும்’ என்று ஒரு சிறிய பட்டன் இருந்தது. இழுத்தேன். பட்டென்று மூடி திறந்தது. அதனுள் சிறிய எழுத்தில் ‘இப்பொழுதல்ல. ஆபத்து நேரத்தில் மட்டும்’ என்று எழுதியிருந்தது. செலவு செய்ய நினைத்திருந்த பட்ஜெட்டிற்கு மூன்று மடங்கு அதிக விலை இருந்தும் வாங்கினேன். முப்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. இன்று நினைத்தாலும் ‘சே எவ்வளவு ஈசியாய் ஏமாற்றினார்கள்’ என்று தோன்றுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு மார்க்கெட்டர் களை, தொழிலதிபர்களை பிடிப்பதில்லை. உங்களை கண்டாலே காட்டுக் கத்தல் கத்தி கண்டமேனிக்கு கழுவி ஊற்றுகிறார்கள். ரோஷம் வரவில்லையா? பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள். ‘உங்களுக்கு எங்களை பிடிக்கவில்லையா, எங்களுக்கும் உங்களை பிடிக்கவில்லை’ என்பதை செயலில் செய்து காட்டி பாடாய் படுத்தும் வாடிக்கையாளர் பாவிகளை பந்தாடி பழைய பொற்காலம் மீண்டும் பிறக்கப் புறப்படுங்கள்.

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x