Published : 20 May 2017 11:01 AM
Last Updated : 20 May 2017 11:01 AM

தொழில் ரகசியம்: புதிய பிராண்டுகளை படைக்கும் விலகுதல் கோட்பாடு

‘சார்லஸ் டார்வின்’ என்றால் ‘மனிதன் குரங்கின் வழித்தோன்றல்’ என்று கூறியதுதான் நினைவிற்கு வரும். 1859ல் ‘இனங்களின் தோற்றம்’ (The origin of species) என்ற புத்தகத்தை படைத்தவர். இனங்கள் என்ற விதை விருட்சமாய் வளர்ந்த விதத்தை விவரமாய் விவரித்தவர்.

இவர் படைத்த பரிணாம வளர்ச்சி தத்துவம்தான் பலரால் பேசப்படுகிறது. இனங்கள் வளர்ந்த விதம் ஒரு புறம் இருக்கட்டும். இவை பிறந்த விதமல்லவா முக்கியம். புதிய இனங்கள் தோன்றிய முறையல்லவா பிரதானம். உலக இனங்கள் ஒவ்வொன்றும் விலகி அதிலிருந்துதான் புதிய அவதாரங்கள் பிறந்தன என்கிறார் டார்வின். இதை விலகுதல் கோட்பாடு (Divergence) என்கிறார். விலகுதல் இல்லையெனில் ஒற்றை செல் இனங்களான ‘ப்ரோகர்யோட்ஸ்’ மட்டுமே காலப்போக்கில் வளர்ந்து ராட்ச சைஸில் இன்று பூமியில் திரிந்து கொண்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் நானும் தலையை பிய்த்துகொண்டு இங்கு வாராவாரம் எழுதிக் கொண்டிருக்கமாட்டேன். நீங்களும் தலையெழுத்தே என்று இதை படித்துக் கொண்டிருக்கமாட்டீர்கள்!

விலகுதல் கோட்பாடுதான் பரிணாம வளர்ச்சிக்கே வித்திட்டது என்கிறார் டார்வின். இனங்கள் வளர்வதோடு விலகவும் செய்து புதிய இனங்கள் பிறந்து வளர்ந்தன. அதுதான் உலகில் நாம் பார்க்கும் கோடிக்கணக்கான இனங்கள் என்கிறார். ‘பாந்தேரா’ என்ற மிருகம்தான் காலப்போக்கில் விலகி சிங்கம், புலி, சிறுத்தை என்று புதிய இனங்களாய் பிறந்து பரிணாம வளர்ச்சியடைந்தன. குரங்கு இனத்திலிருந்து விலகி காலப்போக்கில் வளர்ந்தவைதான் ஏப், கொரில்லா, சிம்பன்சி, ஒரங்குட்டான், கிப்பன், நீங்கள், நான் மற்றும் நம் இஷ்டமித்ர பந்துக்கள். இஷ்டமித்ர ஜந்துக்கள் என்று சொல்வது இன்னமும் பொருந்தும்!

பயாலஜியை விடுங்கள், பிராண்டுகள் பிறப்பதும் இப்படியே என்கிறார்கள் ‘ஆல் ரீஸ்’ மற்றும் அவர் மகள் ‘லாரா ரீஸ்’. இவர்கள் எழுதிய சுவாரசியமான புத்தகம் ‘பிராண்டுகளின் தோற்றம்’ (The origin of Brands). இயற்கையின் விலகுதல் கோட்பாட்டு போல் பொருள்கள் விலகி அதிலிருந்து புதிய பொருள் வகைகள் தோன்றுகின்றன என்கிறார்கள் அப்பாவும் மகளும். முதலில் கார் என்ற பொருள் சிவனே என்று ஓடிக்கொண்டிருந்தது. அது காலப்போக்கில் விலகி ‘சின்ன கார்’, ‘செடான்’, ‘ஆடம்பர கார்’, ‘ஹேட்ச்பேக்’, ‘மினி வேன்’, ‘எஸ்யூவி’, ‘எலக்ட்ரிக் கார்’, ‘ஹைபிரிட்’ என்று அதிலிருந்து புதிய பிரிவுகள் பிறந்தன. அதாவது கார் என்ற பொருள் பிறந்து, வளர்ந்து அதிலிருந்து மேலும் புதிய வகைகள் பிறந்தன. பரிணாம வளர்ச்சியடைந்தன.

ஒரு பொருளிலிருந்து புதிய பிரிவுகள் பிறந்தாலும் ஒவ்வொரு பிரிவிற்கும் பிரத்யேக தன்மைகள் உண்டு. எஸ்யுவி என்பது பெரிய சைஸ் ஹேட்ச்பேக் அல்ல. செடானின் மறு வடிவமும் அல்ல. ஆனால் அவை ஒரே பொருளிலிருந்து பிறந்தவை. ஆதார தன்மை ஒன்றாய் இருந்தாலும் ஒவ்வொரு புதிய பிரிவும் தனித்தன்மை கொண்டவை.

முதலில் மெயின்ஃப்ரேம் கம்ப்யூட்டர் என்ற பொருள் பிறந்தது. அது விலகி ‘மினி’, ‘வர்க்ஸ்டேஷன்’, ‘டெஸ்க்டாப்’, ‘பர்சனல் கம்ப்யூட்டர்’, ‘லேப்டாப்’ என்று சைஸ் வாரியாய் புதிய பிரிவுகள் பிறந்து அதுவும் பத்தாதென்று இன்று ‘டேப்ளட்’ ரேஞ்சிற்கு விலகியிருக்கிறது. அடுத்து ‘டானிக்’, ‘இன்ஜெக்‌ஷன்’ என்று விலகி இன்னமும் புதிய பிரிவுகள் பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விலகுதல் கோட்பாடு எலெக்ட்ரானிக், அறிவியல் சார்ந்த பொருள்களுக்கு மட்டும் என்ற எண்ணத்தை மனதில் பரிணாம வளர்ச்சியாய் வளர்க்காதீர்கள். வாழ்க்கை முதல் வியாபாரம் வரை எதுவுமே இக்கோட்பாட்டிற்கு விதிவிலக்கல்ல.

அனைவருக்கும் பொதுவாக ஹோட்டல் என்ற பொருள் பிரிவு இருந்தது. அதுவே பின் ‘வெஜிடேரியன்’ ‘நான் வெஜிடேரியன்’ என்று விலகியது. வெஜிடேரியன் ஹோட்டல் ‘உடுப்பி’, ‘நார்த் இண்டியன்’, ‘சாட்’ என்று விலகி புதிய வகை ஹோட்டல்கள் பிறந்தன. நான் மட்டும் என்ன பாவம் செய்தேன் என்று நான் வெஜிடேரியன் ஹோட்டலும் விலகி ‘சைனீஸ்’, ’செட்டிநாடு’, ‘ஆந்திரா’ என்று புதிய பிரிவுகள் பிறந்தன. இவையும் இன்று விலகி எத்தனை ரூபத்தில் கடை திறந்திருக்கின்றன என்பதை நினைத்துப் பாருங்கள்.

இயற்கையே இப்படித்தான் என்றால் செயற்கையான பிராண்டுகள் மட்டும் வேறு மாதிரியா இருக்கும்? இனங்களை விடுங்கள், பாழாய் போன அரசியல் கட்சிகள் பிறப்பதும் இப்படியே. திக விலகி திமுக ஆனது. திமுக விலகி அஇஅதிமுக ஆனது. இன்று அஇஅதிமுக விலகி என்னவெல்லாமோ ஆகிக்கொண்டிருக்கிறது!

என்ன, தலையை சுற்றுகிறதா? டாக்டரை பார்க்கவேண்டுமா? எந்த டாக்டரை? எண்சாண் உடம்பின் எந்த பகுதியில் ப்ராப்ளம் என்றாலும் ஒரு காலத்தில் ஓடிச் சென்று பார்த்த குடும்ப டாக்டர் இன்று அநியாயத்திற்கு விலகி ‘ஆஃப்தல்மாலஜிஸ்ட்’, ‘டெண்டிஸ்ட்’ ‘இஎண்டி’, ’நியூராலஜிஸ்ட்’, ‘பீடியாட்ரீஷியன்’, ‘கைனகாலஜிஸ்ட்’ என்று ஹாலிவுட் பட பெயர்கள் போல் புதிய அவதாரங்கள் எடுத்திருக்கிறார்கள். இப்படியே விலகி இடது கண்ணுக்கும், வலது கண்ணுக்கும் கூட தனித் தனி டாக்டர் என்று வந்தாலும் வரலாம், யார் கண்டது!

ஒவ்வொரு பொருள் பிரிவும் காலப் போக்கில் விலகி அதிலிருந்து புதிய பிரிவுகள் பிறக்கும். இவ்வாரே புதிய பிராண்டுகள் அறிமுகப்படுத்த மார்க்கெட்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் ஆல் மற்றும் லாரா. ஆக, புதிய பிராண்டுகள் அறிமுகப்படுத்தி சந்தையில் வெற்றி பெற முயலும் தொழிலதிபர்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஆதார தத்துவம் விலகுதல் கோட்பாடு. இருக்கும் பொருள் பிரிவுகளை பிரித்து மேய்ந்து, வாடிக்கையாளரின் தேவைகளை அது பூர்த்தி செய்யும் விதங்களை புரிந்து அதை செழுமைப்படுத்தும் விதங்களை ஆராயும் போதுதான் புதிய பொருள் பிரிவிற்கான ஐடியா பிறக்கும். அப்படி புதிய பொருள் பிரிவை படைத்து அதில் முதல் பிராண்டாய் நுழைந்து வளர்வதே வெற்றிக்கு வழி.

இயற்கையில் சுற்று சூழலால் ஏற்படும் மாற்றங்கள்தான் இனங்கள் விலக காரணம் என்றால் தொழிலில் தொழிற்நுட்பம் மற்றும் மக்களின் சமூக கலாச்சார மாற்றங்கள்தான் பொருள்கள் விலகி புதிய பொருள் பிரிவுகள் பிறக்க காரணமாகின்றன. காபி என்ற பானம் விலகி ஃபில்டர் காபி, இன்ஸ்டண்ட் காபி, ஐஸ் காபி, காபீன் ஃப்ரீ காபி என்று விலகியிருப்பது நம்மில் ஏற்பட்ட சமூக கலாசார மாற்றங்களால். கூட்டுக் குடும்பங்கள் நியூக்கிளியர் குடும்பங்களாய் விலகியிருப்பதும் இவ்வாரே!

புதிய பிராண்ட் என்பது ஒரு புதிய இனம் போல. சிங்கம் என்பது பிராண்ட் என்றால், புதிய பிராண்டை உருவாக்க சிங்கத்தையா மேம்படுத்துவீர்கள்? சிங்கத்தை எவ்வளவு மேம்படுத்தினாலும் கடைசி வரை சிங்கம் தானே. புதிய பிராண்ட் வேண்டுமென்றால் சிங்கம் பிரிந்து புலி ஆனது போல் இருக்கும் பொருள் பிரிவை பிரித்து புதியதை அறிமுகப்படுத்தும் வழியை தேடுங்கள் என்பதே இயற்கை நமக்கு கற்றுத் தரும் வழி!

புதிய இனம் பிறக்கையில் பல சமயங்களில் பழைய இனங்கள் மறைகின்றன. அதே போல் பிறக்கும் புது பிராண்ட் இருக்கும் பழைய பிராண்டை அழித்து முன்னேறலாம். கம்ப்யூட்டர் டைப்ரைட்டரை அழித்தது போல. லேப்டாப் டெஸ்க்டாப்பை ஒழித்து வருவது போல. பென் ட்ரைவ் டிவிடி தகடுகளை போட்டுத் தள்ளுவதை போல.

விலகுதல் கோட்பாட்டை அவ்வளவு எளிதாக கண்ணால் பார்க்க முடிவதில்லை. அதனாலேயே பலருக்கு இதன் பவர் புரிவதில்லை. தோட்டத்திலுள்ள மரத்தில் புதிய கிளைகள் பிறப்பது நம் கண்ணிற்கு தெரிவதில்லை. ஆனால் பல நாள் கழித்து அதே மரத்தை பார்க்கும் போது ‘அட எப்படி இம்மரம் பெரியதானது, எங்கிருந்து இதில் புதிய கிளைகள் முளைத்தது’ என்று ஆச்சரியப்பட வைக்கிறது!

கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் வாழ்க்கை இப்படித்தான் புதிய இனங்களை படைத்து வருகிறது. வியாபாரம் இப்படியே புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கான காலம் கடந்து வந்த பாதை இப்படி இருக்கும் போது வருங்காலம் மட்டும் வேறு விதமாகவா இருந்துவிடப் போகிறது!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x