Published : 19 Sep 2015 08:07 AM
Last Updated : 19 Sep 2015 08:07 AM

தொழில் ரகசியம்: நிலைத்தன்மை மீதான நாட்டம் சரியா?

கிண்டி குதிரை ரேசிற்கு சென்று குதிரை வாலில் பணம் கட்டி ஆடியிருக்கிறீர்களா? கட்டியிருந்தால் கனடா நாட்டு சைக்காலஜிஸ்ட்ஸ் ‘நாக்ஸ்’ மற்றும் ‘இன்க்ஸ்டர்’ செய்த ஆய்வின் முடிவு ஈசியாக புரியும்.

ரேசிற்கு செல்பவர்கள் எந்த குதிரையில் பணம் கட்டுவது என்று பைத்தியம் பிடித்து, வருவோர் போவோரிடமெல்லாம் கேட்டு, அருகிலிருப்பவர் எதில் கட்டுகிறார் என்று பார்த்து, இஷ்ட தெய்வத்தை வேண்டி, இறுதியில் ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து பணம் கட்டுவார்கள். கட்டியவுடன் அந்த குதிரையே ஜெயிக்கும் என்று ஆணித்தரமாய் நம்பத் துவங்குவார்கள்.

உறுதியான நிலைப்பாடு

அதே இடம், அதே ரேஸ் ட்ராக், அதே குதிரைகள். முதலில் குழப்பத்தில் குளித்து, கவலையில் காய்ந்து எந்த குதிரையில் கட்டுவது என்று புரியாமல் விழித்தவர்கள் இவர்கள். ஒரு குதிரை மீது நம்பிக்கை வைத்து பணம் கட்டியவுடன் போதி மரத்தடி புத்தராய் தெளிவடைந்து அந்த குதிரை மீது நம்பிக்கை வைத்து ஏதோ அதுதான் ஜெயிக்கும் என்று முதலிலிருந்தே தீர்க்கமாய் நம்பியது போல் நடக்கிறார்கள். எதனால் இந்த மாற்றம்? எப்படி இந்த ஞானோ தயம்?

ஆழ்மன மேட்டர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். முடிவெடுத்து ஒரு செயலைச் செய்த பின், அதற்கேற்ப நடக்கவேண்டும், செய்த செய்கைக்கு முரணான நிலைப்பாட்டை எடுப்பது அசிங்கம் என்று செய்த செயலை கட்டிக் கொண்டு அழும் நிலைத்தன்மை (Consistency) மீதான நம் நாட்டமே காரணம் என்கிறார்கள்.

உறுதியான நிலைப்பாடு முக்கியம் என்று நினைக்கிறோம். ஒன்றைச் சொன்னால், செய்தால் அதை மாற்றிக் கொள்வது அவமானம், அசிங்கம், அயோக்கியத்தனம் என்று நம்புகிறோம். ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து பேசி, அதற்கு ஓட்டு போட்டு, அதை ஊரெல்லாம் சொல்லி தொலைத்துவிட்டால் அக்கட்சி என்ன தப்பு செய்தாலும் எந்த நிலையிலும் அதை ஆதரித்தே தீரவேண்டும் என்று நினைக்கிறோம்.

அரசியல்வாதிகளுக்கு இது பொருந் தாதுதான். அவர்களுக்கு இது சப்பை மேட்டர். அரசியல் விமர்சகர்

‘சோ’ கூறுவது போல் ‘அரசியல்வாதிகள் தான் கட்சி மாறுவார்கள். மக்கள் லேசில் மாறுவதில்லை!’

நிலையான நிலைப்பாடே நல்ல மனிதனுக்கு அழகு என்று நினைக் கிறோம். அடிக்கடி நிலையை மாற்று பவனை ‘பச்சோந்தி’ என்கிறோம். மாறும் தன்மை கொண்டவனை ‘இன்னிக்கு ஒன்னு சொல்வான் நாளைக்கு ஒன்னு செய்வான்’ என்று ஏசுகிறோம். ‘எனக்கு ஒரு நாக்கு ஒரு சொல்’ என்று பெருமையாய் கூறுகிறோம். ஏதோ, மற்றவர்களுக்கு ஒவ்வொரு பல்லுக்கு பின்னாலும் ஒரு நாக்கு இருப்பது போல!

விசுவாசமாய் இருக்க விரும்புகிறோம்

ஒரு விஷயத்தை ஒப்புக் கொண்டு விட்டால் ஆதாயம் இல்லா விட்டாலும் கொடுத்த வாக்கிற்கு விசுவாசமாய் இருக்க விரும்புகிறோம். ‘தாமஸ் மொரியார்டி’ என்ற சைக்காலஜிஸ்ட் நியூயார்க் பீச்சில் நடத்திய ஆய்வு இதை உணர்த்தும்.

அமெரிக்கர்கள் வெயில் காலத்தில் பீச்சில் ஜமக்காளத்தை விரித்து மல்லாக்க படுத்து அதுவரை வானத்தை பார்க்காதவர்கள் போல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு கோடை காலத்தில் பீச்சில் படுத்திருந்தவர்கள் பக்கத்தில் ஜமக் காளத்தை விரித்து தானும் படுத்துக் கொண்டார் தாமஸ். தலை மாட்டில் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்துவிட்டு சிறிது நேரம் கழித்து கடல் அலை அருகே போய் நின்றார்.

அப்பொழுது திருடனைப் போல் வந்த அவர் உதவியாளர் நைசாக ரேடியோவை எடுத்துச் சென்றார். அருகில் படுத்திருந்தவர்கள் இதை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர வேறெதுவும் செய்யவில்லை.

இது போல் இருபது முறை செய்ததில் படுத்திருந்த ஒருவர் மட்டுமே உதவியாளரை தட்டிக் கேட்டு அவரிடமிருந்து ரேடியோவை பிடுங் கினார். மற்றவர்கள் நமக்கெதற்கு வம்பு என்று திரும்பி விட்ட இடத்திலிருந்து வானத்தை பார்க்கத் துவங்கினர்.

ஒரு சிறிய மாற்றத்தோடு இதை மீண்டும் இருபது முறை செய்தார் தாமஸ். படுத்திருந்து எழுந்தவர் அலையருகே செல்லுமுன் அருகிலிருந்தவரிடம் ‘ரேடியோவ பார்த்துக்கிறீங்களா’ என்று கூற அருகிலிருந்தவர் ‘தாராளமா’ என்று பதிலளித்தார்.

தாமஸ் சென்ற பின் அவர் உதவியாளர் ரேடியோவை எடுத்துச் செல்ல முயற்சித்தார். இருபது முறை செய்ததில் பத்தொன்பது முறை பக்கத்தில் இருந்தவர் உதவியாளரை தடுத்து ரேடியோவை பிடுங்கினார்.

பக்கத்து ஜமக்காளக்காரன் மீது திடீரென்று எதற்கு இந்த கரிசனம்? வேறென்ன, சொன்னபடி செய்ய வேண்டும் என்ற மனிதர்களின் நிலைத் தன்மை நாட்டம் தான்!

இதுவரை செய்தது தவறா?

முடிவெடுத்த விஷயத்தை மாற்றிக் கொள்ள மீண்டும் சிந்திக்க வேண்டும். மூளையை செலவழிக்கவேண்டும். முயற்சி வேண்டும். முதலிலிருந்து விளையாட வேண்டும். எதற்கிந்த தலையெழுத்து? பேசாமல் செய்ததையே, சொன்ன தையே மெயின்டெயின் செய்து விட்டால் வேலை மிச்சம், சிந்தனை சிக்கனம் என்று நினைக்கிறோம்.

வாங்கிய பிராண்டையே மீண்டும் மீண்டும் வாங்கும் பிராண்ட் லாயல்டிக்கு ஒரு காரணம் இதுவே. ‘கோல்கேட்’ வாங்குபவரிடம் ‘ஏன் இந்த பிராண்டை வாங்குகிறீர்கள்’ என்று கேட்டால் ‘ரொம்ப வருஷமா வாங்கறேன்’ என்பார். அவர் ஆழ்மனதைக் கேட்டால் ’நல்ல டூத்பேஸ்ட் என்று வாங்கினேன், இன்னமும் வாங்குகிறேன். இப்பொழுது மாற்றினால், இது வரை செய்தது தவறு என்றாகிவிடும்’ என்று கூறும்!

மார்க்கெட்டர் இதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் காலத்தில் பொம்மை விற்பனை களைகட்டும். தங்கள் வருவாயின் பெரும் பகுதியை தயாரிப்பாளர்கள் இக்காலத்தில்தான் அள்ளுவார்கள். குழந்தைகள் கேட்கும் விலையுர்ந்த பொம்மைகளை கிறிஸ்துமஸ் சமயத்தில் வாங்கித் தருகிறேன் என்று கூறும் அப்பாக்கள் சொன்னது போல் வாங்கி தருவார்கள். அடுத்த பொம்மைக்கு குழந்தை அடுத்த கிறிஸ்துமஸ் வரை காத்திருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் விற்பனை என்றால் பொம்மை தயாரிப்பாளர்கள் என்ன ஆவது? சமயோஜிதமாய் சிந்தித்தார்கள். செயல்பட்டார்கள்.

பேசும், ஓடும் ரோபோ போன்ற புதுமையான பொம்மைகளை கிறிஸ்து மஸுக்கு முன்மு விமரிசையாக விளம்பரப்படுத்துவார்கள். குழந்தை அப்பாவை நச்சரிக்க கண்டிப்பாக கிறிஸ்துமஸுக்கு வாங்கித் தரேன் என்பார். சொன்னபடி கிறிஸ்துமஸ் முன் குழந்தையோடு கடைக்கு சென்றால் அப்பொம்மை இருக்காது. விற்றுத் தீர்ந்திருக்கும்.

ரோபோ கிடைக்காத குழந்தை ஏக்கத்தில் அழும். பெற்ற குழந்தையின் அழுகையை சகிக்காத அப்பன் `கிடைச்சவுடன் கண்டிப்பா வாங்கித் தரேன், அது வரைக்கும் வேற பொம்மை வாங்கிக்கோ’ என்பான். நடந்த சதியை அறியாதவனாய்.

கிறிஸ்துமஸ்ஸுக்கு அடுத்த மாதம் அதே ரோபோ விளம்பரங்கள் டீவியில் மீண்டும் அமர்க்களப்படும். அதை பார்த்த குழந்தை அப்பாவிடம் ‘அன்னைக்கு வாங்கித் தரேன்னு சொன்னியே, வாங்கிக் கொடு’ என்று இம்முறை கேட்காது. அதட்டும்!

அப்பனும் வேறு வழியில்லாமல் குழந்தையோடு கடைக்கு செல்ல அங்கே சிரித்துக் கொண்டு நிற்கும் ரோபோ பொம்மைகள். விளம்பரம் கூறியதைப் போல் அவை பேசும், பாடும், ஓடும். விளம்பரம் சொல்லாத இன்னொன்றையும் செய்யும். அப்பன் பர்ஸிலிருந்து கொத்தாக பணத்தை பறித்துக்கொள்ளும்!

மக்களுக்கு நிலைத்தன்மை மீதான நாட்டத்தை உணர்ந்த பொம்மை தயாரிப்பாளர்கள் செய்யும் சதி இது. கிறிஸ்துமஸுக்கு முன் ரோபோவை விளம்பரப்படுத்தி அதை அதிக அளவு கடைகளுக்கு கொடுக்காமல் செயற்கை டிமாண்டை ஏற்படுத்துவார்கள்.

அதை வாங்க வரும் குழந்தை ஏமாற்றம் அடையக் கூடாதென்று பெற்றோர் விலையுயர்ந்த வேறு பொம்மையை வாங்கித் தருவார்கள். அடுத்த மாதமே மீண்டும் ரோபோ பொம்மைகள் விளம்பரப்படுத்தும் போது குழந்தை அப்பாவை நச்சரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அப்பாவி அப்பனும் ரோபோ பொம்மையை வாங்கித் தருவார்.

நான் சொன்னைதத்தான் செய்வேன், செய்வைதத்தான் சொல்வேன் என்பது பன்ச் டயலாக் மட்டுமல்ல. சீரியசான சைக்காலஜி மேட்டரும் கூட!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x