Published : 18 Apr 2017 10:28 AM
Last Updated : 18 Apr 2017 10:28 AM

தொழில் முன்னோடிகள்: ஹெர்பர்ட் கெல்லஹர் (1931-)

உங்களிடம் நல்ல ஐடியா இருக்கிறது என்னும் ஒரே காரணத்துக்காக, உலகம் உங்களைத் தங்க நாணயங்களால் குளிப்பாட்டாது. வெறித்தனமாக உழைத்து, உங்கள் திட்டத்தை மக்கள் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும்.

- ஹெர்பர்ட் கெல்லஹர்

1983. அந்த இளைஞன் வயது 28. செல்வம் கொழிக்கும் குடும்பம். அப்பா நடத்திக்கொண்டிருந்த பிசினஸ் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு இடி. அப்பா அகால மரணம். கம்பெனிகளின் கடிவாளம் இளைஞன் கைகளில். அடுத்த 16 வருடங்களில் மகன் 60 கம்பெனிகளுக்குச் சொந்தக்காரர் ஆனார். குழும விற்பனையை 64 சதவீதம் உயர்த்தினார். இந்த அதீத திறமைசாலிக்கு இன்னொரு முகமும் உண்டு. ஜாலியோ ஜாலி வாழ்க்கை நடத்தினார். ஊடகங்களில் தினமும் அவரைப் பற்றிய செய்திகள், போட்டோக்கள். எல்லோரும் பொறாமைப்படும் வாழ்க்கை.

இன்று நிலைமை தலைகீழ். இன்றும் அவரைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவர் தேடப்படுகிறார். ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இங்கிலாந்துக்கு ஒடிவிட்டார் என்று ஊடகங்கள் முழக்கம். அவர் யாரென்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் விஜய் மல்லையா.

விஜய் மல்லையா சிகரத்திலிருந்து அதல பாதாளத்தில் விழ முக்கிய காரணம், அவர் தொடங்கிய விமானப் போக்குவரத்து கம்பெனி, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். விஜய் மல்லையாவுக்கு மட்டுமல்ல, எத்தனையோ பிசினஸ் மகாராஜாக்களுக்கு விமானப் போக்குவரத்து பிசினஸ் மூச்சைத் திணற அடிக்கும் புதைகுழி.

ஏன் தெரியுமா? கடந்த 40 ஆண்டுகளில் உலகில் திவால் ஆன விமானப் போக்குவரத்து கம்பெனிகள் மொத்தம் 1,963. நாடு வித்தியாசம் இல்லாமல் இந்தக் கதை.

அமெரிக்கா 83

ஐரோப்பா 1,368

ஆசியா 408

ஆப்பிரிக்கா - 104

இந்த ரணகளத்துக்கு மத்தியில், ஒரே ஒரு விமானப் போக்குவரத்து கம்பெனி, ஆரம்பித்த நாள் முதல், கடந்த 46 வருடங்களாக அத்தனை வருடங்களிலும் லாபம் பார்த்து வருகிறது. அந்த அதிசயப் பிறவி, அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ். இந்த மாயாஜாலத்தின் சூத்திரதாரி ஹெர்பர்ட் கெல்லஹர்.

ஆச்சரியம் என்ன தெரியுமா? வருடக்கணக்காகத் திட்டம் போட்டு இந்த பிசினஸில் கெல்லஹர் இறங்கவில்லை. ஏன், விமானப் போக்குவரத்து கம்பெனி தொடங்கலாம் என்று முடிவு செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்னால் வரை, தான் இதைச் செய்யப்போகிறோம் என்று அவருக்கே தெரியாது. ‘ஆண்டவன் சொல்றான், கெல்லஹர் செய்யறான்’ கதைதான்.

கெல்லஹர் அப்பா ஒரு கம்பெனியில் ஜெனரல் மேனேஜர். செல்வச் செழிப்பான குடும்பம். இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை. அவனுடைய பன்னிரெண்டாம் வயதில் அண்ணன் உலக மகா யுத்தத்தில் மரணமடைந்தார். சில மாதங்களில் அப்பாவும் இறந்தார். கெல்லஹருக்கு அம்மா என்றால் உயிர். வீட்டில் இருக்கும்போதெல்லாம் அம்மாவும் மகனும் உலகச் சமாச்சாரங்களையெல்லாம் அலசுவார்கள். அம்மாவுக்கு மனிதநேயம் அதிகம். பதவி, பண வித்தியாசம் பாராமல் எல்லோரிடமும் அன்போடு நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகனின் பதின்ம வயதில் ஆழமாகப் பதியவைத்தார்.

கெல்லஹர் புத்திசாலிப் பையன், படிப்பில் ஜொலித்தான். அதே சமயம், கூடைப்பந்து, கால்பந்து, ஓட்டப் பந்தயம் ஆகிய விளையாட்டுக்களில் மெடல்கள் குவித்தான். மாணவர் மன்றத்திலும் தலைவன். இவற்றுக்கு நடுவே, ஒரு பத்திரிகையில் பகுதிநேர வேலை, அக்கம் பக்கத்து வீட்டாரின் புல்வெளியைச் சீர்படுத்தும் பணி. சட்டக் கல்லூரியில் சேர்ந்தான். அங்கும், முதன்மை மாணவர்கள் வரிசையில் இடம்.

வழக்கறிஞராகப் பணி தொடங்கினார். திறமை, அற்புதப் பழகும் முறை. ஏராளமானோர் தங்கள் வழக்குகளோடு வந்தார்கள். அவர்களுள் ஒருவர், ரோலின் கிங் என்னும் சிறிய பிசினஸ்மேன். கம்பெனிகளுக்கு விமானங்களை வாடகைக்கு விடும் கம்பெனி நடத்திவந்தார். தன் கம்பெனிக்கு சட்ட ஆலோசகராக கெல்லஹரை நியமித்தார்.

ஒரு நாள் இரவு. நண்பர்கள் விருந்துக்குப் போனார்கள். விமான டிக்கெட்களின் விலை அப்போது பணக்காரர்களுக்கு மட்டுமே எட்டும் உயரத்தில் இருந்தது. மற்றவர்களுக்கு விமானப் பயணம் ஆகாசக் கனவுதான். ‘குறைந்த விலையில் பயண வசதிகள் தரும் விமான கம்பெனி தொடங்கலாமா?’ என்று கிங் கேட்டார். கெல்லஹர் சிந்திக்கவேயில்லை. `தொடங்குவோம். நானும் கொஞ்சம் பணம் போடுகிறேன்’ என்றார்.

1967. சவுத்வெஸ்ட் பிறந்தது. அப்போது ப்ரானிஃப், டெக்சாஸ் ஏர்லைன்ஸ், கான்டினென்டல் என்னும் மூன்று விமான கம்பெனிகள் பிரபலமாக இருந்தன. கொள்ளை லாபம் அடித்தார்கள். சவுத்வெஸ்ட் களத்தில் இறங்கினால், தங்கள் ஆட்டம் ஓவர் என்று புரிந்துகொண்டார்கள். மூவரும் கை கோர்த்தார்கள். 30 பொய் வழக்குகள் போட்டார்கள். சட்ட ஆலோசகராக, இவை அனைத்தையும் சவுத்வெஸ்ட் சார்பில் கெல்லஹர் எதிர்கொண்டார்.

1969. கிங் கையிருப்புப் பணம் நீதிமன்றங்களில் கரைந்தது. சவுத்வெஸ்ட் கம்பெனியை மூட முடிவு செய்தார். கெல்லஹர் நல்லவர். பொதுவாக அவர் மனசு தங்கம். ஆனால், போட்டியென்று வந்துவிட்டால் அவர் சிங்கம். சூழ்ச்சிக்கு விழக்கூடாது, இறுதிவரை போராடுவோம் என்று கிங் நரம்புகளில் நம்பிக்கை டானிக் ஏற்றினார். கெல்லஹர் துணிச்சல் பலித்தது. 1971. நான்கு வருட நீதிமன்றப் போராட்டம். தர்மம் ஜெயித்தது. சவுத்வெஸ்ட் முதல் விமானம் மேகங்கள் நடுவே கம்பீரமாய்.

அடுத்த பதினொரு வருடங்கள். கெல்லஹர் சட்ட ஆலோசகராகவும், சவுத்வெஸ்ட் இயக்குநராகவும் தொடர்ந்தார். 1982. கிங் கெல்லஹரை கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். கெல்லஹர் மனதில் தயக்கம், குழப்பம், பயம் `எனக்குத் தெரிந்தது சட்டம் மட்டும்தான். கம்பெனி நடத்துவது பற்றி ஒன்றுமே தெரியாது. ஆகவே, கிங் சொன்னவுடன் பயந்து நடுங்கினேன். அன்று இரவு முழுக்கக் கண் விழித்தேன். பொழுது விடிந்தபோது, விமானப் போக்குவரத்து பற்றிய அத்தனை விஷயங்களும் என் மனதில் பதிவாகிவிட்டன.’

2008 வரை சி.இ.ஓ, தலைவர் எனப் பல தலைமைப் பதவிகளில் கெல்லஹர் சவுத்வெஸ்டை வழி நடத்தினார். 1981 இல் அவர் பதவிக்கு வந்தபோது இருந்த விமானங்களின் எண்ணிக்கை 27. இதுவே, அவர் பதவியை விட்டு விலகிய 2008 இல், 527. ஒவ்வொரு வருடமும் தொடர் லாபம். கெல்லஹர் ஜெயித்தது எப்படி?

சாதாரணமாக, சி.இ.ஓ-க்கள் தலைமைப் பொறுப்பு ஏற்கும்போது அதிக லாபம் காட்டுவதுதான் தங்கள் இலக்கு என்று முழங்குவார்கள்; இன்னும் சிலர் வாடிக்கையாளர் சேவைதான் என் பாதை என்று மார் தட்டுவார்கள். கெல்லஹர் என்ன சொன்னார் தெரியுமா? `என்னைப் பொறுத்தவரையில், ஊழியர்களுக்குத்தான் முதல் இடம். அவர்களை நாம் நல்லபடியாக நடத்தினால், அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவை தருவார்கள். வாடிக்கையாளர்கள் நம்மிடம் திரும்பத் திரும்ப வருவார்கள். பிசினஸும் லாபமும் பெருகும். பங்குதாரர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.’ கெல்லஹர் தன் ஊழியர்களிடம் அடிக்கடி சொல்லுவார்,`ஓய்வு பெற்றபின், உங்கள் பேரக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருப்பீர்கள். அப்போது, என் வாழ்க்கையின் சந்தோஷமான நாட்கள், நான் சவுத்வெஸ்டில் வேலை பார்த்தபோது என்று நீங்கள் சொல்லவேண்டும்.’ சொன்னதைச் செய்யும் கெல்லஹர் ஜோலியை ஜாலியாக்கினார். டியூட்டி நேரத்தில் ஆடலாம், பாடலாம், வாடிக்கையாளர்களிடம் ஜோக் அடிக்கலாம். ஒரு முறை நான் சான் ஹோஸே நகரத்திலிருந்து ஃப்னிக்ஸ் நகரத்துக்கு சவுத் வெஸ்ட் விமானத்தில் பறந்துகொண்டிருந்தேன். ஒரு ஏர் ஹோஸ்டஸை காணவில்லை. எல்லோரும் தேடினார்கள். அவர் லக்கேஜ் வைக்க மேலே இருக்கும் பரண் போன்ற இடத்திலிருந்து குதித்தார். இப்படியெல்லாம் செய்வதால், கெல்லஹரையும், சக ஊழியர்களையும் லூசு (Nuts) என்று பலர் கேலி செய்ததுண்டு. கவலையே படாமல் தன் பாதையில் கெல்லஹர் தொடர்ந்தார். மிகக் குறைந்த விலையில் டிக்கெட் தரவேண்டுமானால், அநாவசியச் செலவுகளைக் குறைக்கவேண்டும். சவுத்வெஸ்ட் விமானத்தில் இருக்கை எண் தரமாட்டார்கள். கிடைக்கும் இடத்தில் உட்காரவேண்டும். அசெளகரியம்தான். ஆனால், இதனால் பூர்வாங்கச் செலவுகள் கணிசமாகக் குறையும். கஸ்டமர்கள் புரிந்துகொண்டார்கள். பயணம் கொண்டாட்டமாக இருந்ததால், குறையே சொல்லாமல் ஒத்துக்கொண்டார்கள்.

வேலையில் கிடைத்த சுதந்திரத்தால், தங்கள் பட்டம், பதவிகளை மறந்து, எல்லோரும் தோளோடு தோள் கொடுத்து உழைத்தார்கள். விமானப் போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு விநாடியும் பொன்னானது. மற்றவர்களோடு சேர்ந்து பைலட்டும் விமானத்தை சுத்தம் செய்வார்.

ஊர்கூடித் தேர் இழுத்தால் வெற்றி வசப்பட்டுத்தானே ஆகவேண்டும்?

இன்று, தன் 86 வயதிலும், இந்தச் சாதனையாளர் நிறுவனத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உற்சாகமே, உன் பெயர்தான் கெல்லஹரா?

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x