Published : 20 Jun 2017 10:22 AM
Last Updated : 20 Jun 2017 10:22 AM

தொழில் முன்னோடிகள்: வர்கீஸ் குரியன் (1921- 2012)

தோல்வி என்பது ஜெயிக்காமல் இருப்பதல்ல; நம் முழுத் திறமை களையும் பயன்படுத்தாமல் இருப்பது, சமூகத்துக்காக எதுவுமே செய்யாமல் இருப்பது. - வர்கீஸ் குரியன்

1970 வரை இந்தியா முழுவதும், பாலுக்கு பயங்கரத் தட்டுப்பாடு. ரேஷனில் வழங்கப்பட்டது. தாய்மார்கள் குழந்தைகளின் பசி தீர்க்கத் தடுமாறினார்கள்.

இன்று, பால், தயிர், வெண்ணெய், சீஸ், குழந்தை உணவுகள் தாராளமாகக் கிடைக்கின்றன. வெண்மைப் புரட்சி என்னும் இந்தச் சாதனையின் பிதாமகன் வர்கீஸ் குரியன்.

1940 காலகட்டம். குஜராத் மாநிலத்தின் கெய்ரா மாவட்டத்தில் விவசாயமும், மாடு வளர்ப்பும் முக்கியத் தொழில்கள். அதிகமாக பால் உற்பத்தியானது. அதே சமயத்தில், நானூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மும்பை நகரத்தில் தட்டுப்பாடு. இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு பால் வாங்கி, பொதுமக்களுக்கு கொள்ளை லாபத்தில் விற்பனை செய்தார்கள். ஆட்சியில் இருந்த ஆங்கில அரசாங்கமும் இடைத் தரகர்களுக்கு உதவியது.

இந்த அநீதிக்கு முடிவுகட்ட விரும்பினார் சர்தார் வல்லபாய். அவர் கண்ட தீர்வு - விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் அமைத்து, மும்பைக்கு நேரடியாக பால் சப்ளை செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பை திரிபூவன்தாஸ் என்னும் சமூகச் சேவகரிடம் ஒப்படைத்தார். 1946 இல், கெய்ரா மாவட்டத்தில் முதல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் பிறந்தது.

திரிபூவன்தாஸுக்கும், கெய்ராவின் குடிசைவாசிகளுக்கும் அப்போது தெரியாது, தங்கள் தலைவிதியை மாற்றி எழுதப்போகும் ஒரு இளைஞன் தமிழ்நாட்டில் செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று.

குரியன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். வசதியான குடும்பம். அப்பா அரசு டாக்டர். அவருக்கு அடிக்கடி இட மாற்றம் வரும். அதனால், பல பள்ளிகளில் படிப்பு. கோபிசெட்டிப்பாளையத்தில் இருக்கும் டயமண்ட் ஜூப்லி உயர்நிலைப் பள்ளியும் அவற்றுள் ஒன்று. கல்லூரிப் படிப்பு முழுக்க சென்னையில்தான். லயோலா கல்லூரியில் பிஎஸ்சி பிசிக்ஸ், கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். படிப்பில் நல்ல மதிப்பெண்கள். அதே சமயம், டென்னிஸ், பேட்மிண்டன், பாக்சிங் ஆகிய விளையாட்டுகளில் பரிசுகள். தேசிய மாணவர் படையில் ``மிகச் சிறந்த மாணவர்’’ பதக்கம்.

குரியனின் லட்சியம் ராணுவத்தில் சேருவது. கிண்டியில் படிப்பை முடித்தவுடன் ராணுவ வேலையும் கிடைத்தது. அம்மா அவரை அனுப்ப மறுத்தார். குரியன் சோகத்தோடு மிலிட்டரி கனவுக்கு குட்பை சொன்னார்.

குரியனின் தாய்மாமன் ஜான் மத்தாய் டாடா ஸ்டீல் கம்பெனியில் உயர் பதவியில் இருந்தார். (பின்னாளில் இவர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் நிதி அமைச்சரானார்.) அவர் உதவியால், குரியனுக்கு ஜாம்ஷெட்பூரில் வேலை கிடைத்தது. குரியன் தன் காலில் நிற்க விரும்புபவர். அம்மா வற்புறுத்தியதால் சிபாரிசால் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டார். என்னதான் திறமையால் முன்னேறினாலும், மாமா சிபாரிசு மட்டுமே காரணம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். இங்கிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

அப்போது பிரிட்டீஷ் அரசாங்கம். இந்தியா விலிருந்து 500 இன்ஜினீயர்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படிப்பதற்கான முழு ஸ்காலர்ஷிப் தரும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. மெட்டலர்ஜி எனப்படும் ``உலோகவியல்’’ பிரிவின் கீழ் குரியன் விண்ணப்பித்தார்.

நேர்முகத் தேர்வுக்காக டெல்லி சென்றார். இப்போது விதி போட்டது ஒரு பகடை. உலோக வியல் துறையில் இடங்கள் நிரம்பிவிட்டன, பால்பண்ணை பொறியியல் படிப்புக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என்று சொன்னார்கள். மாமா நிழலிலிருந்து தப்ப வேறு வழி தெரியவில்லை. குரியன் சம்மதித்தார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்தது.

குரியனுக்கு பால்பண்ணை இன்ஜினீயரிங்கை வாழ்க்கையாக்கிக்கொள்ளப் பிடிக்கவேயில்லை. ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தார். மிச்சிகனில் உலோகவியல் படிப்பில் சேர்ந்தால், இந்திய அதிகாரிகளுக்கு எப்படித் தெரியும்? அதையே செய்தார். உலோகவியல் துறையில் முதுகலைப் பட்டம் வாங்கினார். இந்தியா திரும்பினார். தன்னை மாட்டும் பொறி காத்துக்கொண்டிருக்கிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது.

அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் படிக்கப்போகும் மாணவர்கள் அரசு ஒதுக்கும் வேலையில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும். குரியனை கெய்ரா மாவட்டத்தில் ஆனந்த் என்னும் ஊரில் இருந்த பால் பண்ணைக்கு இன்ஜினீயராக நியமித்தார்கள். போகாவிட்டால், பெரும் தொகையை அபராதமாகக் கட்டவேண்டும். குரியனிடம் அத்தனை பணமில்லை. அதுவரை கேள்விப்பட்டேயிராத பட்டிக்காடு, மனம் வெறுக்கும் பால்பண்ணை வேலை. வேண்டா வெறுப்பாகப் புறப்பட்டார். வேலையில் சேர்ந்தார். ஒரே சிந்தனைதான், இது சிறைவாசம். எப்படியாவது சீக்கிரம் தப்பவேண்டும். குரியன் பலமுறை வேலையை ராஜிநாமா செய்தார். அரசாங்கம் ஏற்க மறுத்துவிட்டது.

ஆனந்த் ஊரில் பிரிட்டீஷ் அரசாங்கம் நிறுவிய ஒரு பழைய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை இருந்தது. அதை மூடிவிட்டார்கள். இந்த பழைய தொழிற்சாலையை தங்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு இலவசமாக திரிபூவன்தாஸ் பெற்றார். பல இயந்திரங்கள் பழுதுபட்டிருந்தன. அந்த ஏரியாவிலேயே ஒரே இன்ஜினீயர் குரியன் மட்டுமே. அவரிடம் உதவி கேட்டார். குரியன் உடனேயே போய் ரிப்பேர் செய்துகொடுத்தார். திரிபூவன்தாஸ் அடிக்கடி உதவிக்கு அழைப்பதும், குரியன் தயங்காமல் கை கொடுப்பதும் வாடிக்கையாயின. திரிபூவன்தாஸூக்கு குரியன் திறமைமீது பிரமிப்பு; குரியனுக்கு பெரியவரின் லட்சிய வேகத்தின்மேல் மரியாதை.

சில மாதங்கள். பழைய இயந்திரங்கள் இனி மேல் காயலான் கடைக்குப் போகத்தான் லாயக்கு என்னும் நிலை. குரியனின் ஆலோசனைப்படி திரிபூவன்தாஸ் 60,000 ரூபாய் கடனாகப் புரட்டினார். இயந்திரம் வந்தது. குரியன் அதை நிறுவினார். இப்போது ஒரு திருப்பம். அரசாங்கம் குரியனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டது.

திரிபூவன்தாஸ் பதறினார். இந்த இளைஞரை நம்பிப் பெரும்பணம் கடன் வாங்கியிருக்கிறோம். இவர் போய்விட்டால் நூற்றுக்கணக்கான கிராம வாசிகளின் எதிர்காலம் சிதறிவிடும். ஆகவே, “இரண்டு மாதங்கள் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியுங்கள். அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவெடுங்கள்” என்று வேண்டினார். குரியன் சம்மதித்தார். இரண்டு மாதம், 56 வருட பந்தமானது.

கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகியாகக் குரியன் பதவியேற்றார். தான் பார்ப்பது வெறும் வேலையல்ல, இந்தியாவின் முதுகெலும்பான கிராமவாசிகளை முன்னேற்றும் லட்சியப் பயணம் என்று அவருக்குத் தெரிந்தது. இனிமேல், அவர் நிகழ்காலமும், எதிர்காலமும் கிராம மக்கள்தாம்.

அப்போது பால் லிட்டர் இரண்டு ரூபாய்க்கு விற்றது. இதில் மாடு வளர்ப்போருக்குக் கிடைத்தது வெறும் இரண்டு அணா. குரியன் பால் வாங்குவோரிடம் போராடி விவசாயிகள் பெறும் வருமானத்தை அதிகமாக்கினார். மாடுகளின் கறவையை அதிகமாக்க, தீவனம், நோய்த் தடுப்பு ஆகியவை பற்றி ஆலோசனைகள், உதவிகள். விவசாயிகள் கூட்டம் கூட்டமாகக் கூட்டுறவுச் சங்கத்தில் இணைந்தார்கள். ஏராளமான பால் கொள்முதல்.

இந்த நாட்களில் நியூசிலாந்து, இந்தியாவுக்கு பால் பவுடரை இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தது. மும்பையில் பாலோடு இந்த பவுடரைக் கலந்து விற்பனை செய்தார்கள். இது அரசாலும், ஆரோக்கியத் துறை ஆலோசகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான். ஆனால், குரியனின் பாலுக்கான தேவை குறைந்தது. பால் வீணானது.

பால் பவுடர் தயாரிக்கக் குரியன் விரும்பினார். ஆனந்தில் இருந்தவை எருமை மாடுகள். பசுமாட்டு பாலிலிருந்து மட்டுமே பவுடர் தயாரிக்க முடியும், கொழுப்புச் சத்து அதிகமான எருமை மாட்டு பாலிலிருந்து முடியாது என்று தொழில்நுட்ப மேதைகள் நினைத்தார்கள். ஆனால், குரியனின் சகாக்கள் இந்த ``முடியாததை” முடித்துக் காட்டினார்கள். பால் பவுடர், வெண்ணெய் ஆகியவை தயாராயின. அப்போது குழந்தைகள் உணவை, கிளாக்ஸோ, நெஸ்லே ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்தன. அமுல் குழந்தைகள் உணவை அறிமுகம் செய்தது. பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் மறைந்தது.

மார்க்கெட்டிங்கிலும் தான் ஜீனியஸ் என்று குரியன் நிரூபித்தார். ``அமுல்” என்னும் பிராண்ட் பிறந்தது. கவர்ச்சியான விளம்பர வாசகங்கள், மக்கள் மனதை கொள்ளைக் கொண்டன. விற்பனை நாடளவில் அமோக வளர்ச்சி கண்டது.

1964. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆனந்த் வந்தார். கிராமங்களின் முன்னேற்றம் கண்டு பிரமித்தார். இதே புரட்சியை நாடு முழுக்க நடத்திக் காட்டுமாறு குரியனைக் கேட்டுக்கொண்டார். இதற்காக, 1965 இல் குரியன் தலைமையில் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் (National Dairy Development Board) என்னும் அமைப்பை மத்திய அரசாங்கம் உருவாக்கியது. Operation Flood என்னும் பெயரில் குரியன் பால் உற்பத்தியை உபரியாக்கும் கனவைத் தொடங்கினார். தன் செயல்பாடுகளை இந்தியா முழுக்க விரிவாக்கினார். 1997. உலகில் அதிகமான பால் உற்பத்தி செய்த நாடு இந்தியா!

வெற்றி எதிரிகளைக் கொண்டுவரும். பல சூழ்ச்சிகள். மத்திய அரசு குரியன் மேல் குற்றச்சாட்டுக்களைக் குவித்தது. 2006 இல் குரியன் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

குரியன்மீது வீசப்பட்ட குற்றங்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. 2012 இல் மறைவதுவரை அவர் மனதைச் சுயநலக்காரர்கள் காயப்படுத்தினார்கள். அவருக்கு இருந்த ஒரே ஆசுவாசம் ஏழை விவசாயிக்கும், பாலுக்காக அழும் குழந்தைக்கும் அவர் தெய்வம்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x