Published : 03 Jan 2017 10:13 AM
Last Updated : 03 Jan 2017 10:13 AM

தொழில் முன்னோடிகள்: மோகன் சிங் ஒபராய் (1898 - 2002)

எந்த வேலையும் இழிவானதல்ல: எந்த ஆசையும் பேராசையல்ல. - மோகன் சிங் ஒபராய்

சென்னை, ஆக்ரா, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், உதய்ப்பூர், சிம்லா, குர்காவ்ன், சண்டீகர், ரந்தம்போர் (ராஜஸ்தான்), கேரள படகு விடுதி என இந்தியாவிலும், இந்தோனேஷியா, சவுதி அரேபியா, துபாய், மொராக்கோ, எமிரேட்கள், எகிப்து, மொரீஷியஸ் ஆகிய வெளிநாடுகளிலும் மொத்தம் 35 சொகுசு ஹோட்டல்கள் நடத்தும் ஒபராய் குழுமம். வருட வருமானம் ரூ. 1,832 கோடி. ஆடம்பரத்துக்கே இலக்கணம் வகுக்கும் ஒபராய் ஹோட்டல்களைத் தொடங்கியவர் மாடமாளிகையில் பிறந்து, தங்கத் தொட்டிலில் வளர்ந்து, நூற்றுக்கணக்கான செவிலியரும், சேடியரும் சீராட்டிப் பாராட்டி வளர்த்த ராஜா வீட்டுப் பிள்ளை என்று நினைக்கிறீர்களா?

இல்லை, அவன் ஏழ்மையில் பிறந்தவன், வறுமையில் வளர்ந்தவன். ஒபராய் ஹோட்டலின் ஒவ்வொரு செங்கல்லைத் தட்டிப் பார்த்தாலும், அங்கே, அவன் உழைப்பும், வியர்வையும், சோகங்களும், தியாகங்களும் தெரியும். அந்த அவன், நான்தான். என் பெயர் மோகன் சிங் ஒபராய்.

1898 ஆம் ஆண்டு. 47 வருடங்களுக்குப் பின்னால், பாரதம் தன் அடிமை விலங்குகளை உடைத்து, விடுதலை பெற்ற மகத்தான நாள், ஆகஸ்ட் 15. அதே தினத்தில் பிறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இப்போது பாகிஸ்தானில் இருக்கும் பான் (Baun) என்னும் கிராமத்தில் பிறந்தேன். என் அப்பா சிறிய காண்ட்ராக்ட் வேலைகள் எடுத்துச் செய்துவந்தார். என் ஆறாம் மாதத்திலேயே, அவர் மரணம் அடைந்துவிட்டார். அவர் முகம்கூட எனக்கு நினைவில்லை. வறுமைக்குத் தள்ளப்பட்ட அம்மா மிக்க சிரமத்தோடு என்னை வளர்த்தார். மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்துக் கல்லூரியில் இன்றைய ப்ளஸ் டூ-வுக்குச் சமமான இன்டர்மீடியட் படித்தேன். பட்டம் வாங்க ஆசை. ஆனால், வசதி இல்லாமல் படிப்பை நிறுத்தினேன். வேலை தேடத் தொடங்கினேன். தட்டிய இடமெல்லாம் கதவை மூடினார்கள். டைப்ரைட்டிங், ஷார்ட்ஹாண்ட் படித்தால், வேலை கிடைப்பது சுலபம் என்று பலர் ஆலோசனை சொன்னார்கள். படித்தேன். ஆனால், மறுபடியும் பழைய கதைதான்.

1918. என் மாமா லாகூரில் இருந்த ஒரு செருப்புக் கம்பெனியில் வேலை வாங்கித் தந்தார். உற்பத்தியையும், விற்பனையையும் மேற்பார்வை செய்யவேண்டும்.

(துர்) அதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்தது. செருப்புக் கம்பெனியில் ஏகப்பட்ட நஷ்டம். மூடினார்கள். வேலை போனது. வெறும் கையோடு கிராமத்துக்குத் திரும்பினேன்.

வயது 22. உடைந்த இதயத்தோடு அம்மா. கையில் சல்லிக் காசில்லை, வேலையில்லை. கல்யாணம் செய்துகொள்ள இதெல்லாம் வேண்டாம் போலிருக்கிறது. என்னிடம் என்ன கண்டாரோ, உஷ்னக் ராய் என்னும் பெரியவர், தன் மகள் 15 வயது இஷ்ரான் தேவியை எனக்கு மனைவியாக்க விரும்பினார். திருமணம் நடந்து முடிந்தது. எத்தனை முயற்சி செய்தும், வேலை கிடைக்கவில்லை. நான் பிறப்பால் சர்தார்ஜி. தாடி வளர்ப்பது எங்களுக்குப் புனிதமானது. வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், தாடியை எடுத்தேன். சர்தார்ஜி சமூகத்திலிருந்து எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவைத்தார்கள். உறவுகள் இல்லை, நண்பர்கள் இல்லை. தனிமரமானேன்.

அப்போது, பயங்கர உயிர்க்கொல்லி நோயாக இருந்த பிளேக் கிராமத்தில் பரவத் தொடங்கியது. பயந்த அம்மா, என்னையும், மனைவியையும், மாமனார் வீட்டுக்குப் போகச் சொன்னார். போனோம்.

மாமனார் வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடக் கஷ்டமாக இருந்தது. வேலை தேடி, பக்கத்து ஊரான சிம்லா போனேன். தெருத் தெருவாகச் சுற்றினேன். ஆங்கிலேயர்கள் தங்கும் ஹோட்டல் செசில் கண்களில் பட்டது. ``இங்கே வேலை கிடைக்குமா பார்” என்று மனதுக்குள் ஒரு குறளி சொன்னது. உள்ளே போனேன். நுழைவு அறையில் கோட், சூட் போட்ட பிரிட்டிஷ்காரர் உட்கார்ந்திருந்தார். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. தண்ணீரில் மூழ்குகிறவன், நாணலைக்கூடப் பற்றுக்கோடாக நினைப்பான். அப்படித்தான், அவரிடம் வேலை கேட்டேன். அவர் ஹோட்டல் மேனேஜர். என்னை என்னால் நம்ப முடியவில்லை. மாதம் 40 ரூபாய் சம்பளத்தில், உடனேயே கிளார்க் வேலையில் நியமித்தார். அப்பாடா, 24 வயதில், வாழ்க்கையில் ஒரு ஆரம்பம்!

நான் எப்போதுமே வெறும் சம்பளத்துக்காக வேலை பார்ப்பவனல்ல. புதுப் புது விஷயங் களைக் கற்றுக்கொள்ளத் துடிப்பவன். கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்பவன். வெந்நீர் சுட வைக்கும் பாய்லர் போடுவதுமுதல் ரெஸ்ட்டாரன்ட் சாப்பாட்டு வேளை சர்வீஸ்வரை ஹோட்டலின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் கற்றுக்கொண்டேன். இரவு பகல் பாராமல் உழைத்தேன். அனைத்து அம்சங்களிலும் சகலகலா வல்லவன் ஆகி விட்டேன். இப்படியே ஏழு வருடங்கள் ஓடின.

1929. ஹோட்டல் சிசில் அதிபர் கிளார்க், சிம்லாவில் கார்ல்ட்டன் ஹோட்டல் வாங்கினார். என்னை நிர்வகிக்கச் சொன்னார். ஐந்தே வருடங்களில் லாபம் காட்டினேன். அதே சமயம், சில தவறான முடிவுகளால் கிளார்க் கடனில் மாட்டிக்கொண்டார். இந்தச் சுமை அவர் உயிரையும் வாங்கியது, ஹோட்டல் விற்பனைக்கு வந்தது. விலை இருபதாயிரம் ரூபாய். ஹோட்டலை வாங்கவேண்டும் என்று எனக்குக் கொள்ளை ஆசை. ஆனால், 20,000 ரூபாய் எனக்கு மிகப் பெரிய தொகை. ரிஸ்க் எடுக்க முடிவெடுத்தேன், தயக்கமே இல்லாமல், மனைவி, தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றித் தந்தார். ஹோட்டல் கார்ல்ட்டன் என் கையில். கற்ற வித்தை அத்தனையையும் காட்டினேன். ஹோட்டல் உலகில் என்னை எல்லோரும் கவனிக்கத் தொடங்கினார்கள்.

இப்போது வந்தது இன்னொரு வாய்ப்பு. 1934 - இல் கொல்கத்தா நகரில் காலரா நோய் பரவியது. ஊரை விட்டு மக்கள் ஓடினார்கள். மிகப் பெரிய ஹோட்டல்கள் மூடப்பட்டன. கொல்கத்தாவில் கிராண்ட் ஹோட்டல் பாரம்பரியமும் புகழும் கொண்டது. வியாபாரம் படுத்துவிட்டதால் ஹோட்டலை வாடகைக்கு விட உரிமையாளர்கள் முடிவெடுத்தார்கள். மாத வாடகை ஏழாயிரம் ரூபாய்.

நான்தான் வருகின்ற வாய்ப்பை விடுபவன் இல்லையே? எடுத்தேன் அடுத்த ரிஸ்க். கிராண்ட் ஹோட்டல் என் வசம். அகலக் கால் வைப்பதாக என் நண்பர்கள் எச்சரித்தார்கள், மற்றவர்கள் கேலி செய்தார்கள். முடிவெடுத்த பின், நான் தயங்குவது கிடையாது. ஆனால், அந்த நாட்களில் எனக்கு எக்கச்சக்கத் துணிச்சல் தேவைப்பட்டது.

காலரா இருந்த கொல்கத்தாவுக்குச் சுற்றுலாப் பயணிகள் வரத்து நின்றுபோனது. விற்பனைப் பிரதிநிதிகள், வியாபாரிகள் போன்றோர் மட்டுமே வந்தார்கள். அவர்களுக்கு ராஜமரியாதை தந்தேன். அவர்கள் கொல்கத்தா வரும்போதெல்லாம், கிராண்ட் ஹோட்டலில் மட்டுமே தங்கினார்கள். தங்களின் உற்றம், சுற்றங்களுக்குச் சிபாரிசு செய்தார்கள்.

சோதனைமேல் சோதனை, போதுமடா சாமி என அடுத்து வந்தது இரண்டாம் உலகப் போர். வியாபாரிகளும் பயணங்களை நிறுத்தினார்கள். மாத வாடகை ஏழாயிரம் ரூபாய், இதரச் செலவுகள் என என் வியர்வையிலும், ரத்தத்திலும் சேர்த்த பணம் தண்ணீராய் ஓடிக்கொண்டிருந்தது. உட னடியாக ஏதாவது செய்யாவிட்டால் நடுத் தெரு வுக்கு வந்துவிடுவேன். என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று மூளையைக் குழப்பிக் கொண்டேன். திடீரென ஒரு மின்வெட்டல்.

உலகப் போருக்காக ஏராளமான பிரிட்டிஷ் படையினர் கொல்கத்தா உட்படப் பல இந்திய நகரங்களுக்கு வந்துகொண்டிருந்தார்கள். இவர்கள் தங்குவதற்கு அறைகள் வேண்டுமே? சல்லிசான வாடகைக்குக் கிராண்ட் ஹோட்டல் அறைகளை அவர்களுக்குக் கொடுத்தேன். சில்லறைக்குச் சில்லறை, அரசாங்கத்தோடு தொடர்பு, செல்வாக்கு.

இந்தியா சுதந்திரம் பெற்றபின் எங்கள் குழுமம் அமோக வளர்ச்சி கண்டது. 1969 முதல் வெளிநாடுகளில் ஒபராய் ஹோட்டல்கள் திறந்தேன். நம் விருந்தோம்பல் பாரம்பரியத்தை உலகறிய வைத்தேன்.

நான் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன். 104 வயது வரை அமோக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். ஏழ்மையில் பிறந்து வளர்ந்த சாதாரண மனிதன் நான் முன்னேறியது என் உழைப்பால், ரிஸ்க் எடுக்கும் துணிச்சலால், கிடைத்த சின்ன வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்தியதால். என் வாழ்க்கை உங்களுக்கும் ஓரளவு வழி காட்டினால், உங்களைவிட அதிக மகிழ்ச்சி எனக்கு. வாழ்த்துக்கள்.

* ஓபராய் ஹோட்டல் சென்னையில் டிரைடென்ட் என்னும் பெயரில் இயங்குகிறது.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x