Published : 28 Mar 2017 10:28 AM
Last Updated : 28 Mar 2017 10:28 AM

தொழில் முன்னோடிகள்: மஸாரு இபுகா (1908 1997), அகியோ மொரிடா (1921 1999)

பிறரைப் பின்பற்றாமல் தனிப்பாதை போடுவதுதான், பிசினஸ், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வெற்றிக்குச் சாவி.

- மஸாரு இபுகா

கற்பனா சக்தியைக் கட்டவிழ்த்துவிட வேண்டுமா? இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.

- அகியோ மொரிடா.

1946 - டோக்கியோவில் அமெரிக்க விமானங்களின் தாக்குதலால் சேதமான ஒரு டப்பா கட்டிடம். மூன்றாவது மாடியில் எலிப் பொந்தாய்ச் சின்ன அறை. அங்கே டோக்கியோ துஷின் கோக்யோ என்னும் ரேடியோ ரிப்பேர் கடை. ஏழு ஊழியர்கள். மொத்த முதலீடு வெறும் 530 டாலர்கள். முதலாளிகள் இரண்டு நண்பர்கள் மஸாரு இபுகா, அகியோ மொரிடா. இருவரும் பணத்தில் குசேலர்கள், ஐடியாவில் குபேரர்கள். ரேடியோ கருவிகள் செய்யலாமா, ராடார் பாகங்கள் தயாரிக்கலாமா, அரிசி சமைக்கும் குக்கர் பண்ணலாமா என்று ஆயிரம் ஆயிரம் கனவுகள்.

2016 ஸோனி கம்பெனி, டிவி, டிஜிட்டல் கேமரா, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர்கள் தயாரிக்கிற கம்பெனி, உலகம் முழுக்கச் சின்னக் குழந்தைக்கும் தெரிந்த பிராண்ட். வருட விற்பனை 8 ட்ரில்லியன் டாலர்கள் (8 லட்சம் கோடி டாலர்கள். சுமாராக 53 லட்சம் கோடி ரூபாய். அம்மாடியோவ்!)

எலிப்பொந்து டோக்கியோ துஷின் கோக்யோ கடைக்கும், எலெக்ட்ரா னிக்ஸ் உலக மகாராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? டோக்கியோ துஷின் கோக்யோ தான் ஸோனி கார்ப்ப ரேஷன். 70 வருட வளர்ச்சி. சூத்திரதாரி கள், மஸாரு இபுகா, அகியோ மொரிடா.

****

இபுகா பட்டப் படிப்பை முடித்தபின் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டாம் உலகப் போரின்போது, தன் 36 ஆம் வயதில் ஜப்பான் கடற்படையில் சேர்ந்தார். அங்கே, பணியாற்ற வந்த 23 வயது இளைஞர் மொரிடாவைச் சந்தித்தார். வயது வித்தியாசம் இருந்தபோதிலும், நெருங்கிய நண்பர்களானார்கள்.

உலகப் போர் முடிந்தவுடன், இபுகா ரேடியோ ரிப்பேர் கடை தொடங்கினார்.

அப்போது சந்தித்த மொரிடாவும், அவரும் கை கோர்த்தார்கள். இபுகாவின் கண்டுபிடிப்புத் திறமையும், மொரிடா வின் மார்க்கெட்டிங் மாயாஜாலங்களும் பிசினஸை உச்சத்துக்குக் கொண்டு போயின.

இபுகா, மொரிடா இருவருமே ஸோனியின் வளர்ச்சிக்குச் சம பங்களித்தவர்கள். இபுகா 1950 முதல் 1976 வரை ஸோனி சேர்மனாக இருந்தார்; அவர் வலது கரம் மொரிடா 1976 முதல் 1994 வரை கம்பெனியை தலைமையேற்று நடத்தினார்.

இபுகா ஜப்பானிய மொழி மட்டுமே அறிந்தவர். எனக்கு ஜப்பானிய மொழி தெரியாததால், இங்கே மொரிடாவோடு ஒரு பேட்டி. ஒரு குரல், இரு பங்காளிகளின் ஒருமித்த கருத்துகளை ஒலிக்கிறது.

“மொரிடா சான்’’ தமிழ்நாட்டின் சார்பாக உங்களுக்கு என் வணக்கங்கள். உங்கள் கம்பெனியின் வெற்றி ரகசியம் என்ன?’

(சான் என்பது நம் ஊர் ஐயா என்பதைப் போன்ற ஜப்பானின் மரியாதை விளிச்சொல்)

``முதலில் ஒரு திருத்தம். எங்கள் கம்பெனியின் வெற்றிக்கு பின்னால் ரகசியங்களே கிடையாது. எல்லாமே காரணங்கள். அவை ஏன் ரகசியங்களில்லை தெரியுமா? நாங்கள் அவற்றை மறைப்பதில்லையே? நானே அந்தக் காரணங்களைப் பல அரங்குகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். “Made in Japan” என்ற நான் எழுதிய புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன்.’’

``நீங்களே சொல்லக் கேட்டால் அது ஒரு தனி சுகமல்லவா? சொல்லுங்கள்.’’

மொரிடாவின் முக்கிய கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

வளர்ச்சிக்கு முக்கியம் வாடிக்கையாளர் மட்டுமே

இபுகாவும் மொரிடாவும் மார்க் கெட்டில் இறக்கிய முதல் தயாரிப்பு டேப் ரெக்கார்டர். விற்பனைப் பொறுப்பு மொரிடா. டேப் ரெக்கார்டர்கள் யாருக்குத் தேவை என்ற ஆராய்ச்சியைத் தொடங்கினார். அப்போது ஜப்பானில் சுருக்கெழுத்தாளர்களுக்குத் தட்டுப் பாடு இருந்தது. நீதிமன்றங்களில் வக்கீல்களின் வாதங்களையும், நீதிபதி களின் தீர்ப்பையும் சுருக்கெழுத்தாளர் கள் குறிப்பெடுத்து, பிறகு அவற்றை டைப் செய்வார்கள். மொரிடா ஜப்பான் உயர் நீதிமன்றத்தில் டேப் ரெக்கார்டர்களை இயக்கிக் காட்டினார். நீதிபதிகள் மனமாரப் பாராட்டினார்கள்.

அப்போது பள்ளிக்கூடங்களில் அமெரிக்கக் கல்வி முறையும், ஆங்கிலக் கல்வியும் தொடங்கியிருந்தன. ஆங்கில ஆசிரியர்கள் குறைவு. ஆங்கில மொழிப் பாடங்களை டேப்பில் பதிவு செய்து மாணவர்களுக்குப் போட்டுக் காட்டினால் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்க முடியுமே என மொரிடா மூளையில் மின்னல் வெட்டியது. பல பள்ளிகளுக்குச் சென்றார். தன் டேப் ரெக்கார்டர்களை வெள்ளோட்டம் விட்டுக் காட்டினார். பள்ளிகள் அவர் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

நீதிமன்றங்களிலும், பள்ளிகளிலும் கிடைத்த பாராட்டுக்கள் ஆர்டர்களாக வில்லை. ஏன் என்று மொரிடா ஆராய்ந்தார். இரண்டு பிரச்சினைகள் - 35 கிலோ எடை, 360 டாலர் விலை. இபுகாவும், மொரிடாவும் பல இரவுகள் கண் விழித்தார்கள். சிறிய அளவில் அழகிய வடிவில், குறைந்த விலையில் டேப் ரெக்கார்டர் தயார். நீதிமன்றங்கள், பள்ளிக்கூடங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் டேப் ரெக்கார்டர் அத்தியாவசியப் பொருளானது.

இதேபோல், வாடிக்கையாளர்கள் விருப்பங்களை மையமாக்கி, பாக்கெட் சைஸ் டிரான்சிஸ்டர் ரேடியோ, வாக் மென், டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்தப் படும் டெலிவிஷன்கள், பாக்கெட் சைஸ் கலர் டெலிவிஷன்கள், ப்ளே ஸ்டெஷன் வீடியோ கேம்ஸ் போன்ற கண்டுபிடிப்பு களை இருவரும் உருவாக்கினார்கள். அத்தனையும் சூப்பர் ஹிட்.

ஸோனியைப் பொறுத்தவரை, தயாரிப்புப் பொருட்களுக்கு மட்டுமல்ல, கம்பெனியின் பெயருக்கே நேயர் விருப்பம்தான் அடிப்படை. டோக்கியோ துஷின் கோக்யோ என்ற பெயர் மிக நீளமாக, வாடிக்கையாளர்கள் வாயில் நுழையக் கஷ்டமானதாக இருப்பதை மொரிடா உணர்ந்தார். ஜப்பானியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் எளிதாக உச்சரிக்கும் பெயராக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டார்.

சோனஸ் என்ற லத்தீன் மொழி வார்த்தைக்கு ஓசை என்று பொருள். இந்த அடிப்படையில், 1955 முதல் எல்லாத் தயாரிப்புகளும் ஸோனி என்கிற பிராண்ட் பெயரில் வெளிவரத் தொடங்கின. 1956 இல் கம்பெனி பெயரும், ஸோனி கார்ப்பரேஷன் என்று மாறிற்று..

கம்பெனியில்லை, குடும்பம்

ஸோனி அலுவலகங்களில் உயர் அதிகாரிகளுக்குத் தனி அறைகள் கிடையாது. சக ஊழியர்களுடன் அமர்ந்துதான் அவர்கள் பணியாற்ற வேண்டும். எல்லோருக்கும் ஒரே யூனிஃபார்ம்தான்.

தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் வேலை தொடங்குமுன், தொழிலாளர்களின் மேலதிகாரியான ஃபோர்மென் முந்தைய நாளின் வேலை பற்றிய அறிக்கையை அவர்களுடன் விவாதிப்பார். அன்றைய வேலை என்னவென்று விளக்குவார். அவர்கள் கருத்துகளைக் கேட்பார்.

மொரிடா அமெரிக்க கம்பெனி அமைப்புகளைச் செங்கல் சுவருக்கும், ஜப்பானியக் கம்பெனி அமைப்புகளைக் கருங்கல் சுவருக்கும் ஒப்பிடுவார்.

அமெரிக்க நிர்வாக முறையில், ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் வேலைக்குப் பணியாளர்களைப் பொருத்துகிறார்கள். ஜப்பானிய கம்பெனிகளில், எந்தக் கல்லை எங்கே வைத்தால் சுவர் சீராக அமையும் என்னும் அடிப்படையில் பணியாளர்களின் தனித்துவத் திறமைகளுக்கு ஏற்ற வேலைகளைத் தருகிறார்கள். அமெரிக்காவில் வேலை முக்கியம்; ஜப்பானில் ஊழியர்கள் முக்கியம்.

தோழர்களே, தவறு செய்வீர்!

‘நீங்கள் சரி என்று நினைப்பதைச் செய்யுங்கள். தவறு செய்தால் அதிலிருந்து கற்றுக் கொள்வீர்கள். ஒரே தவறை இரண்டு முறை செய்யாதீர்கள்’

என்பது ஸோனியின் கொள்கை. இது வெறும் கொள்கை மட்டுமல்ல, நடைமுறை நிஜமாக இருந்தது. 1955. ஸோனி முதன் முறையாக டிரான்சிஸ்டர் ரேடியோ தயாரித்தார்கள். லட்ச லட்சமாக ஆர்டர்கள் குவிந்தன. அப்போது முளைத்தது ஒரு பிரச்சினை.

டிரான்சிஸ்டர்களில் ஆண்டி மனி என்னும் கெமிக்கல் பயன்படுத்தி னார்கள். இது டிரான்சிஸ்டர்களின் ஆயுள் காலத்தைக் குறைவாக்கியது. காஸுவோ இவாமி என்பவர் தொழில் நுட்ப இயக்குநராக இருந்தார். பாஸ்பரஸ் உபயோகித்தால் டிரான்சிஸ்டர்களின் ஆயுளை அதிகமாக்கலாம் என்று அறி வியல் சொன்னது. முழுத் தயாரிப்பையும் ஆண்டிமனியிலிருந்து பாஸ்பரஸுக்கு மாற்றினார். கைமேல் பலன்! தயாரித்த டிரான்சிஸ்டர் ரேடியோக்களில் ஒன்று கூட வேலை செய்யவில்லை. கோடிக் கோடியாய் நஷ்டம்.

இவாமியை ஸோனி என்ன செய்தார்கள்? அவரைத் தண்டிக்கவோ, வீட்டுக்கு அனுப்பவோ, ஸோனி என்ன சாதாரணக் கம்பெனியா? இவாமி தன் தவறிலிருந்து பல பாடங்கள் கற்றார். பல உயர்ந்த பதவிகள் அவரைத் தேடி வந்தன. 1976 முதல் 1982 - இல் தன் மறைவு வரை ஸோனியின் தலைவராக இருந்தார்.

**** மொரிடாவுக்கு அவசர வேலை இருக்கிறது. பிரிய மனமில்லாமல் விடை கொடுக்கிறேன்.

`சயனோரா மொரிடா சான்.’

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x