Published : 13 Jun 2017 10:19 AM
Last Updated : 13 Jun 2017 10:19 AM

தொழில் முன்னோடிகள்: ஃபில் நைட் (1938)

இனியும் அடுத்தவர் ஷூக்களின் விற்பனையை வளர்க்க உயிரைக் கொடுத்து உழைத்து ஏமாந்துபோகும் கசப்பான அனுபவம் வேண்டாம், நம் சொந்த பிராண்டை உருவாக்கவேண்டும் என்று ஃபில், பெளவர்மேன் இருவரும் முடிவெடுத்தார்கள்.

சொந்த பிராண்டுக்கு என்ன பெயர் வைக்கலாம்? மூளை நியூரான்களுக்கு ஓவர்டைம் கொடுத்தார்கள். அப்போது உதித்த பெயர், ‘‘நைக்கி.’’ கிரேக்கர்களின் வெற்றி தேவதை.

மே 30, 1971. நைக்கி கம்பெனி பிறந்தது. ஃபில் ஜப்பான் போனார். ஒரு தொழிற்சாலையோடு ஒப்பந்தம் போட்டார். நைக்கி என்னும் பிராண்டில் அவர்கள் ஷூக்கள் தயாரித்துத் தரவேண்டும்.

கம்பெனி லோகோவை வடிவமைக்க வேண்டும். சாதாரணமாகக் கம்பெனிகள் பணத்தைக் கொட்டும் சமாச்சாரம். ஃபில், காரலின் டேவிட்சன் என்னும் ஓவிய மாணவியிடம் இந்தப் பணியை ஒப்படைத்தார். அவர் உருவாக்கிய லோகோ இதுதான்.

அசைவு, வேகம், நைக்கி தேவதையின் சிறகு ஆகிய பல அம்சங்களைக் குறிப்பிடும் இந்த வடிவமைப்பு 46 ஆண்டுகளாக வெற்றிகரமாகத் தொடர்கிறது. உலகத்தின் டாப் 20 லோகோக்களில் தவறாமல் இடம் பிடிக்கிறது. அன்றைய ஸ்போர்ட்ஸ் ஷுக்கள் உலகின் நம்பர் 1 அடிடாஸ். 1924 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரியப் பின்னணி, ஸ்போர்ட்ஸ் ஷூ என்றாலே அடிடாஸ் மட்டுமே என மக்கள் மனங்களில் இடம். இவர்களை எப்படி வீழ்த்துவது? அதற்கான ஸ்பெஷல் பலம் தனக்கு இருப்பதை ஃபில் உணரவில்லை. அந்த பலம் என்ன தெரியுமா?

இதற்கு, அடிடாஸ், ப்யூமா, நைக்கி ஆகிய மூன்று போட்டியாளர்களின் பின்னணியையும் பார்க்கவேண்டும்.

கிறிஸ்டாஃப் டாஸ்லர் என்பவர் ஜெர்மனியின் ஷூ தொழிற்சாலையில் தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள், அடால்ஃப், ருடால்ஃப். 1924 இல், அப்பாவின் துறையிலேயே, டாஸ்லர் பிரதர்ஸ் ஷூ ஃபாக்டரி தொடங்கினார்கள். 1948. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள். பிரிந்தார்கள். அடால்ஃப், ‘‘அடிடாஸ்” என்னும் பெயரிலும், ருடால்ஃப் ‘‘ப்யூமா” என்னும் பெயரிலும் கம்பெனி தொடங்கினார்கள். அடிடாஸ், ப்யூமா இருவருக்கும் ஸ்போர்ட்ஸ் ஷூ என்பது லாபம் பார்ப்பதற்கான பிசினஸ் மட்டுமே.

ஃபில் ஒரு விளையாட்டு வீரர். அவர் பிசினஸ் தொடங்கியதற்கு முக்கிய காரணம், கோடி கோடியாக லாபம் பார்க்க அல்ல; விளையாட்டின் த்ரில்லை அனுபவிக்க. அதாவது, டாஸ்லர் சகோதரர்களுக்கு ஷூ வெறும் விற்பனைப் பொருள்; ஃபில்லுக்கு ஷூதான் ஊன், உணர்வு, உயிர், பாசம், பந்தம். இந்த வெறித்தனமான உணர்வால், ஷுக்களை விளையாட்டு வீரர்களின் கண்ணோட்டத்திலிருந்து அவரால் பார்க்கமுடிந்தது. அவர்களின் வாழ்க்கையைத் தன் ஷூக்கள் எப்படி சுகானுபவமாக்கலாம் என்று சிந்திக்க முடிந்தது.

அடிடாஸ் அப்போது எல்லா விளையாட்டுக்களுக்கும் ஒரேவித ஷூதான் தயாரித்தார்கள். 7, 8, 9 என சைஸ் வித்தியாசம் மட்டுமே. ஒவ்வொரு விதமான விளையாட்டிலும், காலில் ஏற்படும் அழுத்தம், அசைவுகள் வேறு. இந்த அம்சத்தைக் கணக்கில் எடுக்காமல் ஒரேவித ஷூக்கள் தருவது அடிடாஸின் மிகப் பெரிய பலவீனம், இங்கே தட்டினால் அவர்களை எளிதில் வீழ்த்தலாம் என்று ஃபில் எடை போட்டார். மிகச் சரியான கணிப்பு.

இந்தத் திட்டத்தை நிஜமாக்கினார் பெளவர்மேன். அதற்கான எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருந்தன. அமெரிக்கா முழுக்க அறியப்பட்ட, மதிக்கப்பட்ட ஓட்டப் பந்தயப் பயிற்சியாளர், நிபுணர். ஓட்டம் மட்டுமே உடல் ஆரோக்கியத்துக்கு எல்லோரும் கடைப்பிடிக்கக்கூடிய சுலபமான உடற்பயிற்சி என்று நம்பினார். ஹாரிஸ் என்னும் இதய மருத்துவ வல்லுநரோடு சேர்ந்து, ‘‘ஜாகிங்” என்னும் தலைப்பில் புத்தகம் எழுதினார். நல்ல வரவேற்பு பெற்றது.

அதிர்ஷ்டம் எப்போதும் கடுமையாக உழைக்கும் திறமைசாலிகளுக்குத் துணை நிற்கும். ஃபில் பக்கம் நின்றது. 1972. ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. மாரத்தான் ஓட்டம். அமெரிக்காவின் ஃப்ராங்க் ஷார்ட்டர் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்கா இதுவரை மாரத்தானில் முதல் இடம் பிடித்ததே கிடையாது. இந்த வெற்றியால், பொதுமக்களிடையே ஓட்டப் பந்தய ஆர்வம் காட்டுத்தீயாகப் பரவியது . போட்டிக்காக, ஆரோக்கியத்துக்காக, காரணமே இல்லாமல் சும்மாவேனும், எல்லோரும் தினசரி ஓடத் தொடங்கினார்கள். பெளவர்மேன் ஒடுவதற்கான பிரத்யேக ஷூக்களை உருவாக்கினார். ஓடுவதைச் சுகானுபவமாக்கும் இப்படிப்பட்ட ஷூவை இதுவரை யாரும் பார்த்ததேயில்லை. கடைகளில் கூட்டம் அலை மோதியது. விற்பனை ஜிவ்வென்று உயர்ந்தது.

முதல் யுக்தியில் கண்ட வெற்றி ஃபில் மனதுக்கு உத்வேகம் தந்தது. கால்பந்து, பேஸ்பால், டென்னிஸ் என ஓவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியான காலணிகளை அறிமுகம் செய்தார். இதேபோல், பெண்கள், குழந்தைகள் உடல்வாகுக்குப் பொருத்தமான ஸ்பெஷல் ஷூக்கள். அடுத்த பத்து வருடங்களில் நைக்கியிடம் இருந்த தினுசுகள் 200! இதேபோல் ஸ்போர்ட்ஸ் உடைகள். அடிடாஸ் இதை உணர்வதற்கு முன், நைக்கி முன்னால், முன்னால் போய்க்கொண்டிருந்தது. முயல் ஆமை பந்தயத்தில் ஆமை ஜெயித்த கதைதான்.

1972. இன்னொரு ஏணிப்படி. இல்லி நஸ்டாஸே அன்றைய நாட்களின் நம்பர் 1 டென்னிஸ் வீரர். அடிடாஸ் கம்பெனியின் மாடலாக இருந்தார். அவருக்கும், அடிடாஸுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு. இந்த இடைவெளியில் நுழைந்தார் ஃபில். நஸ்டாஸே நைக்கி ஷூக்களை அணிந்து விளையாடிப் பார்த்தார். பூரண திருப்தி. பிராண்ட் தூதராக இருக்கச் சம்பளம் 10,000 டாலர்கள். புதிய கம்பெனிக்குப் பெரிய தொகை. ஆனால், பலன் உடனேயே தெரிந்தது. விற்பனை 19 லட்சம் டாலர்களைத் தொட்டது.

விற்பனை நாளுக்கு நாள் எகிறியது. ஆனால், பணத் தட்டுப்பாடு தொடர்ந்தது. சப்ளையர்களுக்கு வாய்தா சொல்வது வாடிக்கையாகிவிட்டது. 1976 ல், கணக்கில் பணம் இல்லாமையால் காசோலைகள் திருப்பி அனுப்பப்பட்டன. அவர் கணக்கு வைத்திருந்த பாங்க் ஆஃப் கலிபோர்னியா அவசரமாக அழைத்தார்கள். ‘‘உங்கள் அக்கவுன்ட் எங்களுக்கு வேண்டாம்” என்று உடனேயே மூட வைத்தார்கள். இத்தோடு நிறுத்தாமல், வங்கியையும், கடன்காரர்களையும் ஏமாற்றிய தாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் கள். எப்போதும் கைது செய்யப்படும் நிலை. நடுத்தெருவில் நிர்வாணமாக்கப்பட்டதுபோல் அவமானம். டைகரின் ஏமாற்றுதல் போல், வங்கியின் அடாவடித்தனம் ஃபில் ஜெயிக்கும் வெறியை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. பல நண்பர்கள் உதவியால் கடன்களைக் கட்டினார். போலீசும் விலகிப்போனது.

1980. தன் பணத் தட்டுப்பாட்டுக்கு ஒரே தீர்வு, பங்குகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதுதான் என்னும் முடிவுக்கு ஃபில் வந்தார். திறந்தது ஐபிஓ வந்தது பணம்.

காசுக்குத் தட்டுப்பாடு இல்லை. ஃபில் புயலாகச் செயல்பட்டார். ரத்தத்தில் ஊறிய விளையாட்டுக் காதலால், சூப்பர் ஸ்டாராக வருபவர்களை அவர்களின் ஆரம்ப நாட்களி லேயே அடையாளம் காணும் உள்ளுணர்வு அவருக்கு இருந்தது. இவர்களை நைக்கியின் நல்லெண்ணத் தூதர்களாக நியமித்தார்.

1996 முதல் 2016 வரை நடந்திருக்கும் 6 ஒலிம்பிக் போட்டிகளில், அமெரிக்கா 200 மெடல்கள் வென்றிருக்கிறது. இதில் 119 மெடல்கள் நைக்கி வீரர்களால் வெல்லப்பட்டவை. அடுத்த இடத்தில் அடிடாஸ் வெறும் 23 மெடல்கள்.

ஃபில் கை கோர்த்த பிரபலங்களில் சிலர்;

ஒலிம்பிக் சாம்பியன்கள் கார்ல் லூயிஸ், ஜாக்கி ஜாய்னர் கெர்ஸி.

டென்னிஸ் வீரர்கள் இல்லி நஸ்டாஸே, ஜான் மெக்கென்ரோ, ஆந்த்ரே அகஸ்ஸி, பீட் சாம்ப்ராஸ், ரோஜர் ஃபெடரர், ரபேல் நடால், மரியா ஷரபோவா, செரினா வில்லியம்ஸ்.

கால்பந்து ரொனால்டினோ, ரொனல்டோ

கால்ஃப் டைகர் உட்ஸ், ரோரி மெகெல்ராய்

கூடைப் பந்து மைக்கேல் ஜோர்டன், லெப்ரான் ஜேம்ஸ்

இவர்கள் அனைவரிலும் விலாங்கு மீன் மைக்கேல் ஜோர்டன். 1984 ல், தன் 21 ஆம் வயதில் வடக்குக் கரோலினா பல்கலைக் கழக டீமில் விளையாடிக்கொண்டிருந்தார். தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனேயே அவரை ஃபில் நைக்கி வசம் இழுத்துக்கொண்டார். மைதானத்தில் காற்றாய்ப் பறப்பார். இதனால் Air Jordan என்றே அவருக்குப் பெயர். இதைப் பயன்படுத்தி 1985 இல் ஏர் ஜோர்டன் பிராண்டில் நைக்கி பாஸ்கெட்பால் ஷூக்களை அறிமுகம் செய்தது. இன்றும் இந்த பிராண்ட் ஸூப்பர் ஹிட்.

இன்று நைக்கி 170 நாடுகளில் விற்பனையாகிறது. வருட விற்பனை 30 பில்லியன் டாலர்கள். விளையாட்டுப் பொருள்கள் உலகின் நம்பர் 1. ஃபில் உலகின் 28 வது பெரும் பணக்காரர். 1971 இல் போட்ட சபதத்தை நிறைவேற்றிவிட்டார்.

தொடர்புக்கு: Slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x