Published : 12 Jul 2016 10:03 AM
Last Updated : 12 Jul 2016 10:03 AM

தொழில் முன்னோடிகள்: பி.டி. பார்னம்- (1810 - 1891)

விளம்பரம் செய்வதில் கருமித்தனம் செய்வது நோயாளிக்கு அரை டோஸ் மருந்து தருவதைப்போல. நோய்தான் அதிகமாகும். முழு டோஸ் தாருங்கள். நிச்சயமாகப் பலன் கிடைக்கும். - பி.டி. பார்னம்

1861 மார்ச் 16 அமெரிக்க நியூயார்க் நகரத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது.

``லேடீஸ், ஜென்டில்மேன், குழந்தைகளே, நீங்கள் இதுவரை பார்த்திருக்கவே முடியாத பிரம்மாண்டமான, பிரமிக்கவைக்கும் பார்னம் சர்க்கஸ் உங்கள் ஊருக்கு வந்திருக்கிறது.”

ஊர்வலத்தில் கைகளில் தீப்பந்தங்கள் ஏந்திச் சுமார் 40 பேர். பொன், சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் எனப் ``பளிச்” நிறங்களில் 100 வண்டிகள். தும்பிக்கைகளைத் தூக்கி நடனமாடிவரும் 20 யானைகள். 338 அலங்காரக் குதிரைகள். 14 ஒட்டகங்கள். கண்ணாடிக் கூண்டுகளில் சிறுத்தைகள், கழுதைப் புலிகள், வகை வகையான பாம்புகள். இவற்றோடு மேஜிக் செய்வோர், நடுரோட்டில் குட்டிக் கரணம் அடித்துக்கொண்டு பொதுஜனங்களை சீண்டி சிரிப்பு மூட்டும் ஜோக்கர்கள்….. கூட்டம் கூட்டமாய் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

எல்லா பேப்பர்களிலும் தலைப்புச் செய்தி பார்னம் சர்க்கஸ்தான். 12,000 டிக்கெட்கள் ஓரிரு மணி நேரங்களில் விற்பனையானது. ஷோ தொடங்குகிறது. நெருப்பு வளையங்களுக்குள் ஒரு குதிரை லாவகமாகக் குதித்து ஓடுகிறது. பிரம்மாண்ட பீரங்கி காதைப் பிளக்கும் சப்தத்தோடு வெடிக்கிறது. ஆச்சரியம், வெளியே வருவது குண்டு அல்ல, அழகான பெண்! குழந்தைகளிலிருந்து குடுகுடு கிழவர்கள் வரை அத்தனை பேரும் பொழுதுபோக்கின் உச்சகட்டத்தில்.

சர்க்கஸ் கூடாரத்துக்கு வெளியே பல சின்னக் கூடாரங்கள். ஒவ்வொன்றிலும் அதிசயப் பிறவிகள் - ஒருவர் உயிருள்ள தவளைகளை விழுங்கி ஏப்பம் விடுகிறார். கைகள் இல்லாத ஒருவர் கால்களால் அழகான ஓவியம் தீட்டுகிறார், கவிதை எழுதுகிறார், கோப்பையில் டீ எடுத்துத் தருகிறார். ஏழு சகோதரிகள். அத்தனைபேருக்கு எழு அடி நீளத்துக்கும் அதிகமான கூந்தல். 20 அங்குல உயரம், 2 கிலோ எடையோடு, பொம்மைபோல் ஒரு நடுவயதுப் பெண். ஒவ்வொருவரையும் பார்க்க டிக்கெட்.

சர்க்கஸ் நியூயார்க்கிலும், அமெரிக்காவின் 32 இதர நகரங்களிலும் சக்சஸ், சக்சஸ். பிரம்மாண்டத் தயாரிப்பு, அட்டகாச விளம்பரம் இரண்டையும் கலந்தால், அதிரடி வெற்றி நிச்சயம் என்று பார்னம் நம்பினார். செயலாக்கினார்.

***

அமெரிக்காவின் கனட்டிக்கட் மாகாணத்தில் பெத்தெல் என்னும் குக்கிராமம். ஃபிலோ டெய்ல ரின் துக்குனூண்டு நிலத்தை நம்பி, அவர், மனைவி, ஆறு குழந்தைகள். குழந்தைகள் உட்பட எல்லோரும் கடுமையாக உழைத்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும். மகன் பார்னமுக்கு ஏழு வயதானவுடன் களத்துமேட்டுக்கு அனுப்பப்பட்டான். அவனுக்கு உடல் உழைப்பு பிடிக்காது. அடிக்கடி, ``கால் வலி’’, ``தலைவலி” என்று சாக்குப் போக்குச் சொல்லுவான். வேலைக்கு டிமிக்கி கொடுப்பான். அவனைத் திருத்த வழி தெரியாத அப்பா உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

மகனிடம் சொன்னார், ``நீ பெரிய கடை முதலாளி ஆவாய்.” அவன் பதில், “இல்லை, நான் பெரியவன் ஆனதும், யானைப் பாகனாவேன்.” இதற்குக் காரணம் இருந்தது. அந்த நாட்களில் அமெரிக்காவில் அதிக யானைகள் இல்லை. கோடை காலத்தில் ஒரு பாகன் கிராமங்களுக்கு யானையைக் கூட்டிக்கொண்டு வருவார். யானையைப் பார்க்க டிக்கெட், தொட்டுப் பார்க்க இன்னொரு டிக்கெட், அது தும்பிக்கையால் தொட்டு வாழ்த்த இன்னொரு டிக்கெட் என்று செம வசூல் பண்ணுவார்.

பார்னமின் கனவை அப்பா குழந்தைக் கனவாக நினைத்தார். பார்னம் மளிகைக் கடையில் வேலை பார்க்கத் தொடங்கினான். அவனுக்குப் பதினேழு வயது. ஒரு நாள். அவனைக் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு முதலாளி வெளியே போனார். ஒரு பாட்டில் கம்பெனி விற்பனைப் பிரதிநிதி 550 பாட்டில்களை பார்னமிடம் விற்றுவிட்டுப் போய்விட்டான். முதலாளி வந்தார். பார்னமின் முட்டாள்தனம் பார்த்துக் கோபத்தில் குதித்தார். ``எனக்கு 275 டாலர் நஷ்டம். உன் அப்பனிடம் போய் இந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வா.”

விஷயம் தெரிந்தால் அப்பா தோலை உரித்துவிடுவார். பார்னம் ராத்திரி முழுக்கத் தூங்கவில்லை. மனம் நிறைய ஐடியாக்கள். அதிகாலையில் எழுந்தான். கடைக்குப் போனான். முதலாளி வந்தார். கடை முன்னே பெரிய கூட்டம். திகைத்துப்போனார். அங்கே கொட்டை எழுத்துக்களில் ஒரு போர்டு;

மகத்தான லாட்டரி

550 - க்கும் அதிகமான பரிசுகள்

1000 டிக்கெட்கள் மட்டுமே!

ஒரு டிக்கெட் 50 சென்ட்.

பார்னமின் ஐடியா. ஆண்களும், பெண்களும் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கினார்கள். மாலை லாட்டரி குலுக்கல். 550 பேருக்குப் பரிசு. என்ன பரிசு தெரியுமா? எல்லோருக்கும் பாட்டில். சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போனார்கள். முதலாளிக்குச் சுளையாக 225 டாலர் லாபம். பார்னமுக்குப் புரிந்த பிசினஸ் ரகசியம், ``கஸ்டமர்களுக்கு ஜெயிப்பதுதான் முக்கியம். பரிசு எது என்பது முக்கியமில்லை.”

பார்னமுக்கு 24 வயதானது. திருமணம், ஒரு பெண் குழந்தை. கிராமத்தில் கிணற்றுத் தவளையாக இருக்க விரும்பவில்லை. நியூயார்க் புறப்பட்டார். என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாது. மில்லியன் மில்லியன்களாக டாலர்கள் குவிக்கவேண்டும் என்பதில் மட்டுமே தெளிவு. அப்போது நியூயார்க் செய்தித்தாள்களில் ஒரு விளம்பரம் வந்தது. ``161 வயதுப் பாட்டி விற்ப னைக்கு. 1732 முதல் 1799 வரை வாழ்ந்த அமெரிக் காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனைப் பாலூட்டி வளர்த்தவர்.” பார்னம் 1,000 டாலர் விலை கொடுத்துப் பாட்டியை விலைக்கு வாங்கினார். ஊர் முழுக்கப் போஸ்டர்கள் ஒட்டினார். நோட்டிஸ்கள் விநியோகித்தார். பத்திரிகைகளில் பாட்டியின் பேட்டிகள் வெளிவர ஏற்பாடுகள் செய்தார். ஊரெங்கும் பாட்டி என்பதே பேச்சு. அவரைப் பார்க்க டிக்கெட் வைத்தார். கூட்டம் குவிந்தது. ஒரே வாரத்தில் 1,500 டாலர் வசூல். இப்படிப் பல மாதங்கள்.

ஒரு நாள். பாட்டி மரணமடைந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயது 86 தான் என்று சொன்னார்கள். பார்னமும் ஆச்சரியம் காட்டினார். இந்த ஆச்சரியம் நிஜமா அல்லது ஊரை ஏமாற்றப் போட்ட நடிப்பா, யாருக்கும் தெரியாது. ஆனால், பார்னம் பல்லாயிரம் டாலர்கள் லாபம் பார்த்தது நிஜம்.

நியூயார்க்கில் அமெரிக்கன் மியூசியம் என்னும் அருங்காட்சியகம் இருந்தது. அரிய செடிகள், கற்கள், மிருக எலும்புக்கூடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. யாருமே வரவில்லை. மியூசியம் திவாலானது. பார்னம் அங்கே போனார். உடனேயே அவருக்கு நஷ்டத்தின் காரணம் புரிந்தது. மக்களை ஈர்க்கும் உயிர்த்துடிப்புள்ள இடமாக அதை மாற்றவேண்டும்.

அருங்காட்சியகத்தை வாடகைக்கு எடுத்தார். விநோதமான தோற்றம் கொண்டவர்களைப் பல்வேறு நாடுகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்து விலைக்கு வாங்கினார் - நீண்ட தாடி வளர்ந்திருந்த ஸ்விஸ் பெண்மணி, வயிறு ஒட்டிப் பிறந்து அப்படியே வாழ்ந்துகொண்டிருந்த தாய்லாந்து இரட்டையர்கள், ஐந்தரை அடி உயரத்தில் 21 கிலோ எடை மட்டுமே இருந்த அமெரிக்காவின் 24 வயது ஒல்லிப்பிச்சான், 20 அங்குல உயரமே இருந்த குட்டிச் சார்லி, இப்படிப் பல மனித அதிசயங்களை மியூசியத்தில் பார்வைக்கு வைத்தார். பணம் குவிந்தது.

இதை மூலதனமாக வைத்துத் தன் கனவுத் திட்டமான சர்க்கஸ் தொடங்கினார். அந்த நாட்களில் சர்க்கஸ் கூடாரம், கலைஞர்கள், மிருகங்களுக்கு எல்லாம் சாலை வழிதான் பயணம். பார்னம் மிகப் பெரிய முதலீட்டில் முழு ரெயிலை விலைக்கு வாங்கினார். ரயில் பயணத்தால் பயணநேரம் குறைந்தது. 3 மடங்கு அதிக ஷோக்கள், 3 மடங்கு அதிக வருமானம்.

பின்னாட்களில் அரசியல், சமூக சேவை எனப் பல துறைகளில் இறங்கினாலும், தன் 81- ஆம் வயதில் மரணம் வரும் வரை சர்க்கஸ் நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்தார். பார்னமின் முதல் காதல் எப்போதுமே சர்க்கஸ்தான்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x