Published : 07 Feb 2017 10:36 AM
Last Updated : 07 Feb 2017 10:36 AM

தொழில் முன்னோடிகள்: எஸ். அனந்தராமகிருஷ்ணன் (1905 - 1964)

முடிவெடுக்கும் பொறுப்பு ஊழியர்களுக்கு இருந்தால், சில தவறுகள் செய்யும் சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவேண்டும்.

-எஸ். அனந்தராமகிருஷ்ணன்.

‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி. கேள்விகள் அரவிந்த் சுவாமி. பதில்கள் நான். ஆறாவது சுற்று ஜெயித்துவிட்டேன். ஏழாம் சுற்று. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டால் 3,20,000 ரூபாய் என் பையில். இல்லையோ, வெறும் பத்தாயிரம்தான். டென்ஷன், டென்ஷன். நாக்கில் வறட்சி. கையில் நடுக்கம். உடல் முழுக்கப் பரபரப்பு.

என்னை நோக்கிப் பாய்ந்துவருகிறது கேள்வி 1840 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, போக்குவரத்துத் துறையில் இன்றும் வெற்றிநடை போடும் இந்தியாவின் பழம்பெரும் நிறுவனம் எது?

பதில் தெரியவில்லை. ஆடியன்ஸ், லைஃப்லைன் இரண்டும் உதவ முடியவில்லை. அரவிந்த் சுவாமி க்ளூ தருகிறார்.

இந்த கம்பெனி சென்னையில் தொடங்கப் பட்டது. இன்று மாபெரும் குழுமமாக வளர்ந்திருக்கிறது. கம்பெனி பெயரும், தொடங்கியவர் பெயரும் ஒன்றுதான்.

எனக்கு இப்போதும் விடை தெரியவில்லை. அரவிந்த் சுவாமியே சொல்கிறார் `ஸிம்ஸன்ஸ்.’

வெட்கமாக இருக்கிறது. நம்ம சென்னையில், நம் எல்லோருக்கும் பெருமை தேடித்தரும் வரலாற்றுச் சிறப்புமிக்க கம்பெனியை எனக்குத் தெரியவில்லையே?

********

1840. ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து ஸிம்ஸன் என்பவர் சென்னை வந்தார். அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துக்கு பல்லக்குகள், மாட்டுவண்டிகள், குதிரைவண்டிகள், கை ரிக்‌ஷாக்கள் ஆகியவை பயன்பட்டன. இவற்றைத் தயாரிக்கத் தொடங்கினார். அவருக்குச் செய்யும் தொழிலே தெய்வம். ஒவ்வொரு தயாரிப்பிலும் நுணுக்கம், நேர்த்தி தெரியும். மைசூர், திருவிதாங்கூர், கொச்சி, விஜயநகரம், உதய்ப்பூர் ஆகிய சமஸ்தான ராஜாக்களின் சாரட் வண்டிகள், கோச்சுகள் முதல் சாமானியர் பயன்படுத்திய கை ரிக்‌ஷாக்கள் வரை அத்தனையிலும் ஸிம்ஸன் கொடிகட்டிப் பறந்தார்.

ஸிம்ஸன் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இங்கிலாந்தில் ரயில் போக்குவரத்து சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. இந்தியாவில் முதன் முறையாக, சென்னையில் ரயில் கோச்சுகள் தயாரிக்கத் தொடங்கினார். 1856 - ஆம் ஆண்டு, சென்னையிலிருந்து ஆற்காடுவரை முதல் ரயில் ஓடியது. அதில் எட்டு பெட்டிகள் இருந்தன. அத்தனையும் ஸிம்ஸன் தயாரித்தவை.

காலச்சக்கரம் சுழல்கிறது. ஸிம்ஸனின் புதுமை வேகம் தொடர்கிறது. கார்கள், லாரிகளுக்கான டீசல் இன்ஜின்களை இந்தியாவில் முதன்முதலாக, 1951 - இல் தயாரித்தவர்கள் ஸிம்ஸன்ஸ்தான். இன்று ஸிம்ஸன்ஸ் டீசல் இன்ஜின்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது.

ஸிம்ஸன்ஸ் கம்பெனி அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் முக்கிய அங்கம். இந்தக் குழுமம், டீ முதல் டிராக்டர் வரை நமக்குத் தேவையான பல நூறு பொருட்களைத் தயாரிக்கிறார்கள். ஸ்டேன்ஸ் (காபி, தேயிலைத் தோட்டங்கள், இயற்கை உரங்கள் தயாரிப்பு), அடிசன் அண்ட் கம்பெனி (தொழிற்கருவிகள் தயாரிப்பு), அடிசன் பெயிண்ட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ், அசோசியேட்டட் பிரிண்டர்ஸ் (அச்சகம்), அசோசியேட்டட் பப்ளிஷர்ஸ் (புத்தக வெளியீடு), ஆம்கோ பாட்டரீஸ், பைமெட்டல் பெயரிங்ஸ் (ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு), ஜார்ஜ் ஓக்ஸ் (ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை), ஹிக்கின்பாதம்ஸ் (புத்தக விற்பனை), இந்தியா பிஸ்டன்ஸ் (ஆட்டோமொபைல் பிஸ்டன்கள் தயாரிப்பு), மெட்ராஸ் அட்வர்ட்டைசிங் கம்பெனி (விளம்பரச் சேவைகள்), எஸ்.ஆர்.வி.எஸ் (சரக்குப் போக்குவரத்து, பஸ்கள் கட்டமைப்பு), ஷார்ட்லோ இந்தியா (ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு), ஸிம்ஸன் அன்ட் ஜெனரல் ஃபைனான்ஸ் கம்பெனி (கார், பஸ், லாரி, டூ வீலர் கடன்வசதி), வான் மோப்ஸ் டைமண்ட் டூல்ஸ் (வைரத் தொழிற்கருவிகள் தயாரிப்பு), டாஃபே (டிராக்டர்கள் தயாரிப்பு) போன்ற 48 கம்பெனிகள், 50 தொழிற்சாலைகள், 12,000 ஊழியர்கள், குழும ஆண்டு விற்பனை ரூ. 12,800 கோடிகள். தனிமரமாகத் தொடங்கிய ஸிம்ஸன் கம்பெனியை அமால்கமேஷன்ஸ் குழுமம் ஆக்கியவர் - அனந்தராமகிருஷ்ணன். கார் பாகங்கள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகளைத் தொடங்கி, இந்திய ஆட்டொமொபைல் தொழிலின் தலைநகரம் என்னும் பெருமையைச் சென்னைக்கு வாங்கித் தந்தவர் இவர்தான்.

********

திருநெல்வேலி மாவட்டம். குற்றாலத்திலிருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சி கிராமம். சிவசைலம் - கல்யாணி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக, 1905 - ஆம் ஆண்டில் அனந்தராமகிருஷ்ணன் பிறந்தார். ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள். குடும்பத்துக்கு இருந்த ஒரே சொத்து, சில ஏக்கர் நிலம். அங்கே வயல், சில தென்னை மரங்கள், வாழைகள். வானம் பார்த்த பூமி. ஆகவே, வசதிகள் குறைவான வாழ்க்கை.

அனந்தராமகிருஷ்ணன் ஆழ்வார்குறிச்சியில் ஆரம்பப் பள்ளி முடித்தார். அடுத்து , அம்பாசமுத்திரத்தில் இருக்கும் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் கல்வி. மகன்கள் தன்னைப்போல் நிலத்தை நம்பி வாழக்கூடாது, உயர்கல்வி பெற்று வேலைக்குப் போய் நிலையான வருமானத்தோடு வாழவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். இன்ஜினீயரிங், டாக்டர் படிப்புகளுக்குச் செலவு அதிகம். அவரால் முடியாது. ஆகவே, மகன்களை அக்கவுண்டன்ஸி படிக்கவைக்க முடிவு செய்தார். அப்போது, இந்தியாவில் சி.ஏ. படிப்பு இருக்கவில்லை. சென்னை சட்டக் கல்லூரியில் இருந்த Govt. Diploma in Accountancy (GDA) தான் அக்கவுண்டன்ஸியில் உயர்ந்த படிப்பு. அண்ணன் நாராயணன் முதலில் சென்னை வந்தார். GDA படித்து முடித்தார். காரைக்குடியில் வேலை கிடைத்தது. அனந்தராமகிருஷ்ணனும் அண்ணன் காட்டிய வழியில் GDA படித்தார்.

அனந்தராமகிருஷ்ணன் பிரபல ஃப்ரேசர் அண்ட் ராஸ் கம்பெனியில் சேர்ந்து ஆர்ட்டிக்கிள்ஷிப் பயிற்சி முடித்தார். சென்னை பெரியமேட்டில் இருந்த பிரிட்டீஷ் தோல் ஏற்றுமதி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அவர்கள் தங்கள் ஏற்றுமதிப் பொருட்களை இன்ஷூர் செய்துகொண்டிருக்கவில்லை. இதன் அவசியத்தை அனந்தராமகிருஷ்ணன் பலமுறை வலியுறுத்தினார். முதலாளிகள் கேட்கவில்லை. அவர்களின் ஏற்றுமதிப் பொருட்களோடு பயணித்த கப்பல் மூழ்கியது. மூழ்கியது கப்பல் மட்டுமல்ல, கம்பெனியும் திவாலானது.

கம்பெனிக்கு, நேஷனல் பேங்க் என்னும் ஆங்கிலேய வங்கி கடன் தந்திருந்தார்கள். வங்கிக் கடன் வசூலை ஸிம்ஸன் கம்பெனி முதலாளி கவனித்துக்கொண்டிருந்தார். அவருக்குக் கணக்கு விவரங்கள் தரும் பொறுப்பு அனந்தராமகிருஷ்ணனுக்கு. இளைஞரின் அறிவுக்கூர்மை, வேலை நேர்த்தி, கட்டுப்பாடு ஆகியவை அவரை மிகவும் கவர்ந்தன. தன் கம்பெனியில் சேருமாறு அழைத்தார். தன் 25 ஆம் வயதில், அனந்தராமகிருஷ்ணன் ஸிம்ஸன் கம்பெனியில் அக்கவுண்டன்ட்.

அனந்தராமகிருஷ்ணனுக்குச் செய்யும் வேலை கனகச்சிதமாக இருக்கவேண்டும். தான் செய்வது சரியென்று தோன்றினால், யார் எதிர்த்து நின்றாலும் கவலைப்படமாட்டார். கம்பெனியின் நிதி நிர்வாகத்தில் பல ஓட்டைகள் - பொருட்கள் உள்ளே வருவதற்கான நுழைவுச் சீட்டு, வெளியே போவதற்கான அனுமதி, விற்பனைக்கான பில்கள் தயாரித்தல், வாங்கும் பணத்துக்கு ரசீது - ஒன்றுமே ஒழுங்காக இல்லை. அனந்தராமகிருஷ்ணன் அத்தனையிலும் ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்டுவந்தார். இதுவரை குளிர் காய்ந்தவர்கள் குறை சொன்னார்கள். நம் அக்கவுண்டன்ட் கண்டுகொள்ளவேயில்லை.

கம்பெனியின் முக்கிய கஸ்டமர்கள் ராஜாக் கள், பெரும் பணக்காரர்கள். கோச்சுகள், கார்கள் வாங்கிவிட்டுப் பணம் தராமல் இழுத் தடித்தார்கள். இந்த அதிகார மையங்களிடம் கடனை வசூலிக்க எல்லோரும் பயந்தார்கள். அனந்தராமகிருஷ்ணன் பயமறியாத இளங் கன்று. விற்ற பொருளுக்குப் பணம் கேட்பது நம் உரிமை என்னும் தார்மீகக் கோபத்தோடு அவர்களைத் துரத்தித் துரத்திக் கடன்களை வசூலித்தார்.

ஸிம்ஸன்ஸ் கம்பெனியின் அப்போதைய முதலாளிகளான மக்டகல், லாடென் இருவரும், மாநிலத்தின் தென்கோடிக் கிராமத்திலிருந்து வந்த இளைஞரிடம் இத்தனை திறமையையும், துணிச்சலையும் எதிர்பார்க்கவேயில்லை. பிரமித்தார்கள். மூன்றே மாதங்களில், கம்பெனி செக்ரட்டரி என்னும் பதவி உயர்வு தந்தார்கள்.

இந்தியப் பெயர்களை உச்சரிக்க ஆங்கிலேயர் கள் சிரமப்படுவார்கள். ஆகவே, முக்கிய அதிகாரிகளுக்கு, A, B, C, D என்று ஆங்கில அகர வரிசையில் சுருக்கப் பெயர் வைப்பார்கள். அதன்படி, அனந்தராமகிருஷ்ணன், பத்தாவது மூத்த இந்திய அதிகாரி. ஆகவே, அவர் பெயர் ``J (ஜே)” என்று ஆயிற்று. அவர் வருங்காலம் ஜே ஜே என்று கொடிகட்டிப் பறக்கப்போகிறது என்று கட்டியம் கூறும் மகத்தான ஆரம்பம்!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x