Published : 07 Mar 2017 10:36 AM
Last Updated : 07 Mar 2017 10:36 AM

தொழில் முன்னோடிகள் : எஸ்டி லொடர் (1908 2004)

பெண்கள் பிசினஸில் ஜெயிக்க என்ன தேவை? திறமை? அபாரத் திறமையில்லாமல் ஜெயித்த பலரை எனக்குத் தெரியும்; படிப்பறிவு? வெற்றிக்கு அறிவு உதவும். ஆனால், அது அத்தியாவசியமில்லை; அப்படியானால், ஜெயிக்கும் ரகசியம் எது? விடாமுயற்சி, பிடிவாதம். இவைதாம் உடல் தளரும்போது அடுத்த அடியை எடுத்துவைக்கச் செய்யும், கருங்கல் மதில்கள் வழி மறிக்கும்போது, தடைகளை உடைத்தெறிந்து புதுப்பாதை போட வைக்கும்.

- எஸ்டி லொடர்

இவை எஸ்டி லொடரின் வார்த்தைகள் மட்டுமல்ல, வாழ்க்கைச் சுருக்கமும்தான். இவர் எதிர்கொண்ட தடைகள் ஏராளம். ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து, ஒவ்வொரு தடையையும் வெற்றி மாளிகையின் படிக்கல்லாக மாற்றியது, இந்தப் பிசினஸ் பெண்மணியின் தனித்துவம், சாமர்த்தியம்.

பாரிஸ் மாநகரம் உலக ஃபாஷன் தலைநகரம். அங்கிருக்கும் கேலரீஸ் லாஃபெட்டே என்னும் கடை உலகப் பிரசித்தி பெற்றது. அந்தக் கடையில் ஒரு பொருள் விற்பனையானால், ஃபாஷன் உலகத்தின் அங்கீகாரமே கிடைத்தமாதிரி. எஸ்டி லொடர் அழகு சாதனங்கள் தயாரிக்கத் தொடங்கினார். கடை விரித்தார். வாங்குவாரில்லை. கேலரீஸ் லாஃபெட்டே கடையில் தன் தயாரிப்புப் பொருட்களுக்கு இடம் பிடித்துவிட்டால்......எஸ்டி லொடர் ஆசைப்பட்டார். அவர்களோ அவரைச் சந்திக்க நேரம் தரவே மறுத்தார்கள். கடைசியில், அவர் நச்சரிப்பால் சம்மதித்தார்கள். ஆனால், எஸ்டி லொடரின் அழகுப் பொருட்களின் சாம்பிள்களைப் பார்க்கவே அவர்கள் தயாராக இல்லை. தாங்க் யூ சொன்னார்கள். எஸ்டி லொடர் புறப்பட்டார். அப்போது.....`டமால்’ என, எஸ்டி லொடர் கையிலிருந்த சாம்பிள் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. தரையெல்லாம் வாசனைத் திரவம் ஓடியது. சந்திப்பாளர் அறை முழுக்க நறுமணம். கேலரீஸ் லாஃபெட்டே அதிகாரிகள் இத்தகைய நறுமணத்தை இதுவரை அனுபவித்ததேயில்லை. பிரமித்தார்கள். எஸ்டி லொடரை உட்காரச் சொன்னார்கள். கணிசமான ஆர்டர் தந்தார்கள். ஃபாஷன் உலகில் அட்டகாசமாக அரங்கேறிவிட்டது எஸ்டி லொடர் தயாரிப்பு. ஒரு சின்னப் பின் குறிப்பு சாம்பிள் பாட்டில் கீழே விழுந்ததும், உடைந்ததும் `விபத்து’ அல்ல. எஸ்டி லொடர் நடத்திய மார்க்கெட்டிங் நாடகம்.

****

ஜோஸஃபின் எஸ்தர் மெண்ட்ஸர் (இதுதான் எஸ்டி லொடரின் இயற்பெயர். எஸ்டி என்பது பெற்றோர் வைத்த செல்லப் பெயர். லொடர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டபின், பெயர் எஸ்டி லொடர் என மாறியது.) அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் இருக்கும் குயீன்ஸ் என்னும் ஊரில் பிறந்தார். குயீன்ஸ் என்றால் ராணிகள் என்று அர்த்தம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அழகுப்பொருட்களில் உலக ராணியாக ஜொலிக்கப்போகிறார் என்பதற்கு இயற்கை காட்டிய சூசகம்!

பெற்றோர் ஹங்கேரியிலிருந்து புலம் பெயர்ந்து வந்த யூதர்கள். அவர்களுக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். அப்பா ஹார்ட்வேர் கடை நடத்தினார். கடையின் மாடியிலேயே வீடு இருந்தது. எஸ்டி விளையாடும் இடம் கடைதான். இந்த பின்புலம் அனிச்சையாக பிசினஸ் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கலாம்,

குடும்பத்தில் அதிக வசதியில்லை. ஆனாலும், அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரசனை அதிகம். எண்ணிக்கை குறைவான உடைகளே வாங்குவார்கள். ஆனால், அவற்றை அழகுணர்ச்சியோடு வாங்குவார்கள். இந்த ரசனை ஜோஸஃபினிடம் இயற்கையாகவே இருந்தது. ஜோஸஃபினுக்குப் பதினொன்று வயது. மாமா வீட்டில் வாசனைத் திரவியங்கள் தயாரித்தார். சிறு வயதிலேயே இவற்றைச் சிறுமி அக்கம் பக்கத்து அழகு நிலையங்களுக்குப் போய் சப்ளை செய்தாள்.

1930. ஜோஸப் லொடரோடு திருமணம் நடந்தது. ஜோஸஃபின் தன் பெயரை எஸ்டி லொடர் என்று மாற்றிக்கொண்டார். ஒரு மகனும் பிறந்தான். ஆனால், எஸ்டி லொடரால் வீட்டு வாழ்க்கையோடு தனக்கு வேலி போட்டுக்கொள்ள முடியவில்லை. அவருக்குப் புகழ் வெளிச்சத்தில் மீது ஆர்வம் எழுந்தது. நடிகையாக ஆசைப்பட்டார். பயிற்சி எடுத்தார். சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தான் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், நம்பர் 1 ஆக வேண்டும் என்பது அவர் லட்சியம். நடிப்பில் அதைச் சாதிக்கமுடியாது என்று தெரிந்தது. வேறு என்ன செய்யலாம் என்று மனம் முழுக்கத் தேடல்கள். விடை தெரியாத வினாக்கள்.

பொழுதுபோக்குக்காக வீட்டில் அழகு கிரீம்கள் தயரிக்கத் தொடங்கினார். 1935-ம் ஆண்டு ஒரு நாள். எஸ்டி லொடர் சலூனுக்குப் போனார். அவருடைய தலைமுடியை வெட்டிக்கொண்டிருந்த கடை உரிமையாளர் கேட்டார், ‘உங்கள் சருமம் இத்தனை அழகாக இருக்கிறதே? அதைப் பாதுகாக்க என்ன செய்கிறீர்கள்?’

எஸ்டி லொடர் தன் கைப்பையைத் திறந்தார். ஒரு கிரீமை எடுத்தார். அந்தப் பெண்ணிடம் கேட்டார், ‘என் ரகசியம் இந்த க்ரீம்தான்.’

‘நான் இதை உபயோகித்துப் பார்க்கலாமா?’

அழகுக் கலைஞர் தன் முகத்தில் தடவிக்கொண்டார். அனுபவசாலியான அவருக்கு உடனேயே அதன் தரம் புரிந்தது. தொடர்ந்து சப்ளை செய்வதற்கான ஆர்டர் கொடுத்தார். விரைவில், ஏராளமான அழகு நிலையங்கள் எஸ்.டி. லொடரின் கிரீம்களை உபயோகிக்கத் தொடங்கின.

பொதுமக்கள் மனங்களில் ஒரு தனியிடத்தை உருவாக்கினால், பிசினஸ் அமோகமாக வளரும் என்று எஸ்டியும், அவர் கணவர் லொடரும் நினைத்தார்கள். இதற்கு நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக விளம்பரம் செய்யவேண்டும். மிகுந்த சிரமத்தோடு 50,000 டாலர் சேர்த்தார்கள். பல விளம்பர ஏஜென்சிகளை தொடர்பு கொண்டார்கள். பிரபல பத்திரிகைகளின் ஒரு முழுப்பக்கச் செலவே 50,000 டாலர்கள் ஆகும் என்று தெரிந்தது. அதிர்ச்சி அடைந்தார்கள். அத்தோடு, சின்னக் கம்பெனிக்கு விளம்பரம் செய்ய ஒரு ஏஜென்சியும் தயாராக இல்லை.

`ஐயோ, என் உதவிக்கு யாருமே வரவில்லையே?’ என்று எஸ்டி லொடர் கழிவிரக்கம் கொண்டாரா? இல்லை, இல்லவே இல்லை. இருக்கும் கதவுகள் மூடினால், தயக்கமே இல்லாமல், புதுக்கதவை உடைத்துத் திறப்பவர் அவர். ஏராளமான பெண்களை வேலைக்கு அமர்த்தினார். ஷாப்பிங் சென்டர்களில் தன் அழகுப் பொருட்களின் சாம்பிள்களை இலவசமாக விநியோகித்தார். அதுவரை யாருமே முயற்சித்திராத யுக்தி. சில நாட்களில், ஊடகங்களும், பொதுமக்களும் தன் தயாரிப்புகளைப் பற்றிப் பேச வைத்தார். கோடிக் கோடி டாலர்கள் செலவழித்திருந்தாலும் கிடைக்காத விளம்பர வெளிச்சம் மடியில் வந்து விழுந்தது.

அடுத்து, ‘இன்னொரு பெண்ணிடம் சொல்லுங்கள்’ என்னும் விளம்பர வியூகத்தை எஸ்டி லொடர் தொடங்கினார். கம்பெனியின் அழகுச் சாதனங்களை உபயோகித்துத் திருப்தியடைந்த பெண்கள் இன்னொரு பெண்ணிடம் தங்கள் சுகானுபவத்தைச் சொல்லவேண்டும். இது ஒரு விளையாட்டு மாதிரி. இந்த வாய்வழிக் கருத்துப் பரிமாற்றம் நம்பவே முடியாத பலன் தந்தது. அழகுநிலையம் போகும் பெண்கள், எஸ்டி லொடர் கிரீம் மட்டுமே வேண்டுமென்று வற்புறுத்தத் தொடங்கினார்கள்.

விரைவில், அமெரிக்காவின் எல்லா முக்கிய சூப்பர் ஸ்டோர்களிலும் எஸ்டி லொடர் தயாரிப்புகள் முக்கிய இடம் பெற்றன. அவர் புதிய க்ரீம்களை அறிமுகம் செய்தபோது, க்யூவில் ஆண்களும் பெண்களும் காத்திருந்து வாங்கிய வரலாறு காணாத சம்பவங்களும் அரங்கேறின. எஸ்டி லொடர், கடும் போட்டிகள் நிறைந்த அழகு உலக சாம்ராஜ்ஜியத்தின் நம்பர் 1 ஆனது.

எஸ்டி லொடர் தயாரிப்புகளின் வெற்றிக்கு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள் மார்க்கெட்டிங் மேதைகளும், மனோதத்துவ அறிஞர்களும். எஸ்டி லொடருக்கு அவருடைய அழகுத் தயாரிப்புகள் வெறும் விற்பனைப் பொருட்களல்ல, லாபம் பார்க்கும் சாதனங்களல்ல, அவர் ஊனோடும் உயிரோடும் ஒட்டிய படைப்புகள். இந்த வெறித்தனமான பாசத்தால்தான், உருவாக்கிய ஒவ்வொரு தயாரிப்பையும் அவர் ஜெயிக்க வைத்தார். ஆண்கள் மட்டுமே தனியாட்சி நடத்திக்கொண்டிருந்த பிசினஸ் உலகில் முத்திரை பதித்த பெண்கள் வரிசையில் எஸ்டி லொடர் முன்னணியில் நின்றது இதனால்தான்

1984. எஸ்டீ லொடருக்கு வயது 76. கணவர் லொடர் மறைந்தார். எஸ்டி லொடர் பிசினஸைத் தன் இரு மகன்களிடம் ஒப்படைத்தார். மகன்கள் அம்மாவிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். 97-வது வயதில் அம்மா மறைவதுவரை, அவரிடம் ஆலோசனைகள் கேட்டு வந்தார்கள். பிசினஸ் பெண்மணியாக மட்டுமல்ல, அம்மாவாகவும் எஸ்டி லொடர் வாழ்க்கை இறுதிவரை மகிழ்ச்சிகரமாகவே இருந்தது.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x