Last Updated : 16 Oct, 2014 10:33 AM

 

Published : 16 Oct 2014 10:33 AM
Last Updated : 16 Oct 2014 10:33 AM

தொழில்களுக்கு உதவும் தகவல்

என்னத்த பிக்-டேட்டா? என்னத்த அனலிடிக்ஸ்! எல்லாம் ஒரு ஹைப். பாக்கெட்டுல எவ்வளவு பணம் இருக்குது, வர்ற மாசம் கட்டவேண்டிய இஎம்ஐ எவ்வளவு, கிரெடிட் கார்டு பில்லும், மொபைல் பில்லும் என்னைக்கு ட்யூன்னு தெரியாமலேயே பாதிப்பேர் பிசியாக சுத்திக்கிட்டிருக்கோம். அட, சம்பளம் எவ்வளவு கிரெடிட் ஆகுமுன்னு கூட கணக்கு வச்சுக்காத ஆளெல்லாம் என் சர்க்கிளில இருக்குதுங்க. இதுல என்னத்த டேட்டாவை கலெக்ட் பண்ணி என்னத்த அனலைஸ் பண்ணி என்று நம்முடைய கூட்டாளிகள் பலரும் சொல்லக் கேட்கின்றேன்.

இது தனிநபரின் டேட்டா. நீங்க தனியாக அதை சரிவர வைத்திருந்தால் உங்களுக்கு லாபம் எதுவும் புதியதாக இல்லாவிட்டாலும் நஷ்டம் இருக்காது. தனி நபர் டேட்டாவை தெளிவான ஒரு மனிதர் மனக்கணக்காகவே வைத்துக் கொள்ள முடியும். இதே ஒரு ஆபிஸில் வேலை பார்ப்ப வர்களின் ஒட்டு மொத்த டேட்டா, ஒரு ஷாப்பிங் மாலுக்கு வந்து போகின்றவர்களின் ஒட்டுமொத்த டேட்டா என்று சேரும்போது அது உபயோகமான டேட்டாவாக மாறிவிடுகின்றது.

சரி உபயோகப்படட்டும். இந்த டேட்டா இல்லாமல் இத்தனை நாள் தொழில் நடக்கவில்லையா? இல்லை நாங்கள்தான் லாபம் பார்க்கவில்லையா? இதெல் லாம் கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகள் செய்யும் விற்பனை வித்தைகள் என்று சொல்பவர்களையும் பார்க்கவே செய்கின்றோம். அனலிடிக்ஸ் இல்லாமல் எதிர் காலத்தில் எதுவுமே நடக்காதா? பிழைக்கவே முடியாதா?

பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட சொத்தா இல்லை சிறிய நிறுவனங்கள் எல்லாம் அதைப் பயன்படுத்த முடியுமா என்று ஆச்சரியத்துடன் கேட்பவர்களையும் பார்க்கின்றோம். சிறு நிறுவனமோ பெரிய நிறுவனமோ எதற்காக அனலிடிக்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கொஞ்சம் ஆராய்வோம்.

கேக் விற்பனை அமோகம்

ஒரு பேக்கரி ஒன்றில் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் திடீரென்று இரண்டு வகை கேக்குகளின் வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனது. வருகின்றவர் போகின்றவர் எல்லாம் அந்த கேக் இருக்குதா என்றுகேட்க கடைப்பையன்கள் ஆச்சரியப்பட்டனர். கடந்த மாதம் புதுசாய் வேலைக்கு சேர்ந்த மாஸ்டர் ஒருவர் ரொம்பவும் ஆசைப்பட்டாரே என்று முதலாளி அரை மனதுடன் பெர்மிஷன் கொடுக்க கடந்த ஒரு வாரமாய் கொஞ்சமாய் தயாரித்து விற்பனைக்கு வைத்த கேக் அது.

தினமும் பெரிய அளவில் வியாபாரம் இல்லை அந்த வகை கேக்கில். அடுத்த வாரத்தில் இருந்து அந்த வகை கேக் போடுவதை நிறுத்திவிடலாம் என்று முதலாளி நினைத்திருக்கும் போதுதான் எக்ஸ்கியூஸ் மீ. அந்த கேக் இருக்கா என்று பலரும் கேட்க ஆரம்பித்தனர்.

முதலாளி ராசியான ஆளா இருக்கிறாரே புது மாஸ்டர் என்று திகைத்திருந்தார். பேக்கரி முதலாளியின் மகன் பேக்கரியின் இணையதளத்தை ஹோஸ்ட் செய்யும் கம்பெனி மெயிலில் அனுப்பிய புள்ளி விவரங்களை எதேச்சையாக பார்த்தபோது, வழக்கமாக பார்ப்பதை விட 10 மடங்கு பேர்கள் அதில் உள்ள புதிய அறிமுகம் பக்கத்தில் இருக்கும் மிக்சட் புரூட் ஸ்பெசல் ப்ரூட் கேக் பக்கத்தையும், காபி சீஸ் கேக் பக்கத்தையும் அன்றைக்குப் பார்த்திருந்தார்கள்.

என்னடா இது கடையிலும் இதைத் தேடியே ஆள் வருகின்றது. வெப்சைட்டிலும் இந்தப் பக்கத்திற்கு அதிக விசிட்டர்கள். ரொம்ப பாப்புலரான கேக் வகையோ. நாமதான் இத்தனை நாள் போடாமல் இருந்துவிட்டோமோ என்று மகன் நினைத்திருந்தார்.

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள்

கடைக்கு வருபவர்களிடம் எங்கே இது பற்றி கேள்விப் பட்டீர்கள் என்று கேட்டால் நன்றாக இருக்காது. அட் லீஸ்ட் வெப்சைட்டில் அந்த கேக்குகளின் பேஜிற்கு வந்தவர்கள் எங்கி ருந்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்வோம் என நினைத்து ஆராய ஆரம்பித்தார். அந்த கேக்கின் பேஜிற்கு வந்தவர்கள் அனைவருமே பேஸ்புக்கிலிருந்து நேரடியாக தாவியிருந்தது தெரிய வந்தது.

பேஸ்புக் பக்கத்தை சிரத்தையுடன் ஆராய்ந்து பார்த்ததில், அவர்களுடைய ஒரு வாடிக்கையாளர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் வீட்டு பிறந்த நாள் விழாவிற்கு அந்த இரண்டு கேக்குகளையும் வாங்கியதையும் (அன்றைக்கு போட்டதே இரண்டே கேக்குகள்தான் என்பதுதான் நிஜம்), அவை இரண்டும் மிகப் பிரமாதம் என்று சிலாகித்து மிகவும் பாராட்டி எழுதி பேக்கரியின் நியூஅரைவல் பேஜ் லிங்க்கையும் சேர்த்திருந்தார்.

இரண்டுமே பிரமாதம் மிஸ் பண்ணிடாதீங்க, காபி சீஸ் கேக் கொஞ்சம் காஸ்ட்லி என்றும் போட்டிருந்தார். அதை பார்த்த அவருடைய பேஸ் புக் நண்பர்கள் கூட்டம்தான் ஆன்லைனிலும், நேரிலும் வியாபாரத்தை பெருக்கி யவர்கள். அவருடைய நண்பர்கள் வட்டத்தில் அவருடைய டேஸ்ட் பேர் போனது. அண்ணன் சொல்லீட்டா அரைக்கிலோவை அப்படியே சாப்பிடலாம் என்று அண்ணனின் வாக்குக்கு காத்தி ருக்கும் வகையில் அஃபீஷியல் டேஸ்ட்டர் என்ற ரகம் அவர். பேக்கரி ஓனரின் மகன் அந்த டேஸ்ட்டரின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான விஷயத்தையும் பார்த்தார். அண்ணே அந்தக் கடையில எப்பப் போனாலும் இல்லேன்னே சொல்றாங்கண்ணே! எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பேக்கரியில் பேரைச் சொல்லி செய்யச் சொல்லியிருக்கேன்னு அப்டேட் போட்டிருந்தார்கள் சிலர்.

கைக்கு எட்டியது…

அடடா! கைக்கு எட்டுனது அவுட் ஆப் ஸ்டாக்கால வாய்க்கு எட்டாமப் போயிடுச்சே என்று நினைத்தார் பேக்கரி ஓனரின் மகன். எதேச்சையாய் வெப்சைட் டீட்டெயிலைப் பார்க்கப் போனதால் கிடைத்த தகவல் இது. இதையேதான் அனலிடிக்ஸ் அன்றாடம் அட்வான்ஸாகச் அதுவாகச் செய்கின்றது.

எக்கச்சக்கமாக விசிட்டுகள் வரும்போது அந்த பேஜில் இருக்கும் இந்த இரண்டுவகை கேக்குகளுக்கு ஆர்டர் வர வாய்ப்பு இருக்கின்றது என அலர்ட் செய்திருக்கும் இல்லையா? வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு! போட்டிகளையும் தவிர்க் கலாம் இல்லையா?

யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

கடையில் நடந்த வியாபாரம், இணையதள தேடல்கள், சமூக ஊடக பதிப்புகள் இவைகள் அனைத்தும் அலசி ஆராய்வதுதான் பிக்டேட்டா அனலெடிக்ஸ். இதில் ஏதாவது ஒரு விஷயமாவது பெரிய நிறுவனம் மட்டுமே செய்ய முடியும் என்ற விஷயமா என்ன? சிறிய நிறுவனங்கள் வெப்சைட் வைக்க முடியாதா? இல்லை கம்ப்யூட்டர் உபயோகித்து பில்தான் போடுவதில்லையா? சிறியதோ, பெரியதோ யார் வேண்டுமானாலும் பிக்டேட் டாவை தங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக பயன் படுத்தலாம். சரி, இனி அடுத்த கட்டத்திற்கு செல்வோம்.

இப்படி அலசி ஆராய்ந்து உண்மையைக் கண்டு பிடிப் பதைத்தான் ‘இன்சைட்’ (Insight) என்று சொல்லுவார்கள். இந்த இன்சைட்டை வைத்து வியாபாரத்தை மேலும் பெருக்க என்ன செய்ய முடியும்? ஒன்று, வெப்சைட்டின் முதல் பக்கத்தில் மிக்சட் புரூட் ஸ்பெசல் கேக்கை பற்றி புதிய படங்களையோ, வாங்கியவர்களின் உயர்வான கருத்துக்களையோ பதித்து அதன் மேல் உள்ள கவர்ச்சியை மேலும் மேம்படுத்தலாம், வாடிக்கை யாளர்களுக்காக அதை எப்படி தயாரிப்பது என்ற குறிப்பை போடலாம்.

தள்ளுபடி தரலாம்

இரண்டு, காபி சீஸ் கேக் விலை அதிகம் என்று புறக்கணிப்பவர்களை கவர தொடர் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கூப்பன் கொடுக்கலாம். அல்லது சில நாட்களுக்கு மட்டும் அனைவருக்கும் சிறப்பு தள்ளுபடி தரலாம். அவ்வளவுதான் சார். வாடிக்கையாளர் சார்ந்த சிறு நிறுவனங்களும் பிக்டேட்டா வினால் நிச்சயம் பயன் பெற முடியும்.

சரி, இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? முக்கியமாக இரு வழி தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய இணையதளமும், சமூக வலைதளத்தில் உங்களுக் கென்று ஓர் இடமும் அவசியம் தேவை. இரண்டாவது இத்த கைய தளங்களில் உருவாகும் தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கி, தொகுத்து, சரியான தகவல்களை பிரித் தெடுத்து, அலசி ஆராயும் திறமை.

இதில் முக்கியமானது என்னவென்றால், அதிலிருந்து வருபவற்றில் தேவையில்லாத தகவல்களை களைந்தெடுத்து, வியாபார முன்னேற்றத்திற்கான தகவல்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியது மிகமிக முக்கியம். வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார், உங்கள் பொருட்களை பற்றி என்ன நினைக்கிறார், மற்றவர்களுடைய கருத்தை அவர்கள் எப்படி பார்க்கின்றார்கள் என்பது எல்லாமே மிக மிக முக்கியம் போட்டிகள் நிறைந்த இந்த உலகில். அதற்குத்தான் அனலி டிக்ஸ் உதவுகின்றது.

cravi@seyyone.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x