Published : 02 Sep 2014 10:25 AM
Last Updated : 02 Sep 2014 10:25 AM

தொழிலதிபர் சிவசங்கரன் திவால்: செஷல்ஸ் நீதிமன்றம்

வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் சி. சிவசங்கரன் திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் செல்போன் அலையை ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்கு வகித்த சிவசங்கரன், இப்போது திவாலானவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பை தனக்கு அளிக்குமாறு கோரியுள்ளார்.

செஷல்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள சிவசங்கரன், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்துள்ளார். ஆகஸ்ட் 26-ம் தேதி செஷல்ஸ் நீதிமன்றம் அவர் திவாலானதாக அறிவித்தது.

திவால் சட்டம் 2013 பிரிவு 14 (1)-ன் படி சி்ன்னக்கண்ணன் சிவசங்கரன் (வயது 58) திவாலானதாக அறிவிக்கப்படுகிறது. திவாலா னவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் செஷல்ஸ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. கருணாகரன் வெளியிட்ட தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தொழிலதிபர் சிவசங்கரன் தன் வசம் இருந்த ஏர்செல் பங்குகளை மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதேபோல பாரிஸ்டா காபி சங்கிலித் தொடர் நிறுவனங்களையும் விற்பனை செய்துள்ளார். இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்குகளை விற்பனை செய்ததில் பெரும் பிரச்சினை எழுந்தது. இதுபோன்று மிகப் பெரும் தொழில்களை வாங்குவது மற்றும் அவற்றை விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சிவசங்கரன் மீது திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது அவர் கிடைக்கவில்லை.

சிவசங்கரனின் சொத்து மற்றும் அவரது நிதி பரிவர்த்தனை குறித்த விவரங்களை ஆராய அதிகாரபூர்வ மேலாளராக பெர்னார்ட் பூல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூன்று மாதங்களில் இது குறித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.

2009-ம் ஆண்டு பஹ்ரைனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாடெல்கோ நிறுவனம் சிவசங்கரனுக்கு சொந்தமான எஸ்டெல் நிறுவனத்தின் 42.7 சதவீத பங்குகளை வாங்கியது.

2011-ம் ஆண்டு அக்டோபரில் எஸ்-டெல் நிறுவனத்தில் பாடெல்கோ நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்வதாக சிவசங்கரன் தெரிவித்தார். இதனிடையே 2012-ம் ஆண்டு அக்டோபரில் 7.90 கோடி டாடா டெலி நிறுவனப் பங்குகளை பஹ்ரைன் நிறுவனத்துக்கு மாற்றினார் சிவசங்கரன். இதற்கு பாடெல்கோ நிறுவனமும் ஒப்புக் கொண்டது. ஆனால் டாடா டெலி நிறுவன பங்குகளை மாற்றுவதற்கான ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கால தாமத காலத்தில் டாடா டெலி பங்குகள் கடுமையாக சரிந்தன. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை.

2-ஜி ஊழல் வழக்கு காரணமாக உச்ச நீதிமன்றம் 122 நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்தது. இதில் எஸ்டெல் நிறுவனமும் ஒன்றாகும்.

தங்களுக்கு ஒப்புக் கொண்டபடி பணத்தைத் திருப்பித் தராததால் பாடெல்கோ நிறுவனம் இது தொடர்பாக பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் சிவசங்கரன் மீது வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 21.20 கோடி டாலரை ஜூன் 26, 2014-க்குள் சிவசங்கரன் அளிக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. பணத்தை அளிக்க சிவசங்கரன் தவறியதால் அவரது சர்வதேச சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே ஆகஸ்ட் மாதம் தான் திவாலாகிவிட்டதாக செஷல்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சிவசங்கரன். நீதிமன்றத் தீர்ப்பால் தங்கள் நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய தொகை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று பாடெல்கோ தலைமை அதிகாரி ஆலன் வீலன் தெரிவித்துள்ளார்.

திவால் உத்தரவு இந்தியாவில் உள்ள சிவசங்கரனின் தொழில் செயல்பாடுகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று அவரது குழும நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் அனைத்துக்கும் அவர்தான் நிறுவனர். அவரது நிறுவனத்தில் வேறு எவரும் பங்குதாரர் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x