Last Updated : 22 Nov, 2015 12:51 PM

 

Published : 22 Nov 2015 12:51 PM
Last Updated : 22 Nov 2015 12:51 PM

சீனப் பொருளாதார மந்தம் இந்தியாவைப் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கணிப்பு

சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் `சீனா மார்னிங் போஸ்ட்’ என்னும் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சீன பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு கூறிவந்திருந்த நிலையில், அதற்கு மாறாக ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் அவர் கூறியதாவது.

சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலை என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடும். நேரடியாக மட்டுமல்லாமல் மறைமுகமாகவும் இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும். பல நாடுகள் சீனாவுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதில்லை. இந்தியாவில் இருந்து வாங்கி, அதன் பிறகு சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த ஏற்றுமதியும் பாதிக்கும்.

ஆனால் இந்தியா கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கிய பொருள்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடு என்பதால், குறைவான விலை காரணமாக பாதிப்பு குறைவாக இருக்கும். இருந்தாலும் சீனாவில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக உலகம் முழுவதிலும் வளர்ச்சி குறையும். இந்திய பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்திலிருந்து பிரிக்க முடியாது. அதனால் இந்தியாவிலும் பாதிப்பு இருக்கும்.

கடந்த காலங்களில் சீனா அடைந்த வளர்ச்சி விகிதத்தை இந்தியாவும் அடையும். சீனா செய்த சரியான நடவடிக்கைகளில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ளும். சீனாவின் உற்பத்தி துறையை பற்றி நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். அதேபோல அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதிலும் சீனா முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து செல்லும் தொழிலதிபர்கள் சீனாவில் வெற்றி எப்படி சாத்தியமானது என்பது குறித்து தெரிவிக்கின்றனர்.

அதற்காக சீனாவின் பாதையை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற முடியாது. அந்த பாதையில் மாற்றங் கள் ஏற்பட்டுவிட்டது. எங்களுடைய பாதையை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் இருவருக் குமே பயனுள்ளதாக இருக்கும்.

சீனாவின் கரன்ஸி மதிப்பை குறைத் தது குறித்த கேள்விக்கு, சர்வதேச செலாவணி மையம் சீனாவிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. ஆனால் முக்கியமான நாடுகளின் நாணயங்கள் சர்வதேச வர்த்தகத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று ஐஎம்எப் எதிர்பார்க்கிறது. அதை நோக்கி சீனா நகர்ந்துகொண்டிருக்கிறது என்றார்.

சீனா கரன்ஸியான யுவானுக்கு சிறப்பு அந்தஸ்து (எஸ்டிஆர்) கிடைக் குமா என்று கேட்டதற்கு, இது குறித்து இந்த மாதத்தில் ஐஎம்எப் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில் அது பெய்ஜிங்குக்கு சாதகமாக இருக்கும் என்றார். உலகள வில் முக்கியமான நாணயங்களின் மதிப்பு சரிந்து வருகிறது. சிறிய அள வில் சீனா தன்னுடைய கரன்ஸி மதிப்பு குறைப்பினை கரன்ஸி போர் என்று வர்ணிப்பது அர்த்தமற்றது என்றார்.

நேற்று முன்தினம் ஹாங்காங் பல்கலைக்கழகம் ரகுராம் ராஜனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலை இந்தியாவை பாதிக்காது, சர்வதேச வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x