Published : 09 Apr 2016 10:35 AM
Last Updated : 09 Apr 2016 10:35 AM

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.10,000: தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரை

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாயை சம்பளமாக நிர்ணயம் செய்ய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்த பரிந்துரைக்கு தொழில் துறையிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்திருக்கிறது.

இந்த நடவடிக்கையால் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் சராசரியாக ரூ.6,000 என்ற நிலையில் இருந்து 10,000 ரூபாயாக உயரும். குறைந்தபட்ச சம்பள சட்டம் 1948 கீழ் 45 விதமான பணிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றன. இந்த சட்டத்தில் தொழிலாளர் துறை அமைச்சகம் திருத்தம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.

இந்த பரிந்துரை தீர யோசித்து எடுக்கப்பட்ட முடிவாக தெரியவில்லை. இது சாதகமான முடிவுகளை விட பாதகமான விளை வையே ஏற்படுத்தும். இதனால் வேலை வாய்ப்புகள் பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும். இந்த ஒரு நடவடிக்கையால் முறை சாரா பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்திய பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி தெரிவித்தார்.

அரசின் ஆய்வின்படி இந்தியாவில் 3.6 கோடி ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். ஆனால் இதில் 60 லட்சம் பணியாளர்கள் மட்டுமே ஒப்பந்த பணியாளர் சட்டத்தின் படி ஊதியம் பெறுகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களில் 30 சதவீதம் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், பொதுத்துறை நிறுவனங்களில் 32 சதவீதத்தினர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

வழக்கமான பணியாளர்களை விட ஒப்பந்த பணியாளர்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால் இந்த முடிவு வரவேற்கத்தகுந்தது. அதே சமயத்தில் சிறு நிறுவனங்கள் இந்த பரிந்துரையால் பாதிப்படையும். சிறிய நிறுவனங்கள் மிகவும் குறைந்த லாபத்தில் இயங்குபவை என்பதால் அவர்களால் இந்த சம்பளத்தை கொடுக்க முடியாது என்று டெல்லியை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு துறை பேராசிரியரான அமிதாப் குந்த் தெரிவித்தார்.

அதே சமயத்தில் ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்) அரசின் இந்த பரிந்துரையை வரவேற் றுள்ளது. தற்போது பல மாநிலங் களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் 10,000 ரூபாயை விட மிக குறைவாக சம்பளம் பெறுகின்றனர் என்பதால் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பிஎம்எஸ் பொதுச்செயலாளர் விர்ஜேஸ் உபாத்தியாய தெரிவித்தார். ஆனால் இடதுசாரி தொழில்சங்கங்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்திர பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x