Published : 17 Mar 2017 10:18 AM
Last Updated : 17 Mar 2017 10:18 AM

உலக மசாலா: டிஸ்னி திரைப்படத்தில் வரும் மந்திர ரோஜா போலிருக்கிறதே!

லண்டனைச் சேர்ந்த ஆடம்பர மலர்கள் தயாரிக்கும் நிறுவனம், 3 ஆண்டுகள் வாடாத ரோஜா மலர்களை உருவாக்கியிருக்கிறது. 100% இயற்கையான ரோஜா மலர்கள் இவை. இந்த ரோஜா செடிக்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை. ஆனா லும் 3 ஆண்டுகள் வாடாமல் ஒரு கண்ணாடிக் குடுவைக் குள் அப்படியே இருக்கும். எப்பொழுதாவது கண் ணாடிக் குடுவையை எடுக்க நேர்ந்தாலும் ரோஜாக்கள் அப்படியேதான் இருக்கின்றன. 30 கண்கவர் நிறங்களில் ரோஜாக்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த வாடாத ரோஜாக்களின் விலை மிகவும் அதிகம். 13 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை ரோஜாக்களின் வகைகளுக்கு ஏற்ப விற்பனை செய்து வருகிறார்கள். இயற்கை மலர்கள் வாடாமல் இருப்பதற்கான காரணம், கனிம வளம் நிறைந்த எரிமலை மண் என்கிறார்கள். ஈக்வடாரில் உள்ள எரிமலை மண் ரோஜா இதழ்களை, மிக உறுதியாக மாற்றி விடுகின்றன. சாதாரண ரோஜா இதழ்களைவிட 10 மடங்கு தடிமனாகவும் 5 மடங்கு பெரிதாகவும் பூக்க வைக்கின்றன. Forever Rose என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோஜாக்களில் கருஞ்சிவப்பு ஒற்றை ரோஜா அதிகமாக விற்பனையாகி வருகிறது.

டிஸ்னி திரைப்படத்தில் வரும் மந்திர ரோஜா போலிருக்கிறதே!

உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட தீவு மிகிங்கோ. கென்யாவின் லேக் விக்டோரியாவில் உள்ள சின்னஞ்சிறு தீவு. 0.49 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் இந்தத் தீவில் 131 வீடுகள் இருக்கின்றன. சுமார் 1000 மனிதர்கள் வசிக்கின்றனர். கென்யாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் இருப்பதால் இரு நாடுகளும் இந்தத் தீவுக்குச் சொந்தம் கொண்டாடி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக கென்யா வரைபடத்தில் மிகிங்கோ இடம்பெற்றுள்ளது. 1991-ம் ஆண்டு கென்யாவைச் சேர்த டால்மாஸ் டெம்போ, ஜார்ஜ் கிபேப் என்ற இரு மீனவர்கள் இந்தத் தீவுக்கு வந்து இறங்கினார்கள் என்கிறார்கள் கென்யர்கள். உகாண்டாவைச் சேர்ந்த ஜோசப் உன்சுபுகா என்ற மீனவர் தன் நண்பர்களுடன் இந்தத் தீவில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்கிறார்கள் உகாண்டா மக்கள். ஆனால் இன்று இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர். இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தீவுக்குள் பல விஷயங்களைக் கொண்டுவந்துள்ளன. 2008-ம் ஆண்டு உகாண்டா ராணுவத்தை அனுப்பி, தீவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இரு நாடுகளுக்கான போட்டியில் தீவு எப்பொழுதும் பதற்றமாகவே இருந்துவந்தது. 2016-ம் ஆண்டு இரு ஆப்பிரிக்க நாடுகளும் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தனர். இரு நாடுகளும் மீனவர்களிடமிருந்து வரி வசூலிக்க வேண்டும், இரு நாடுகளும் காவலர்களை அனுப்பி கடல் கொள்ளையர்களிடமிருந்து தீவைக் காப்பாற்ற வேண்டும் என்று பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இன்று இந்தத் தீவில் கென்ய மீனவர்களும் உகாண்டா மீனவர்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்துவருகின்றனர். இந்தத் தீவைச் சுற்றிலும் உள்ள நீரில் மீன்கள் அளவுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. மிகிங்கோவுக்கு அருகிலேயே யுசிங்கோ என்ற சற்றுப் பெரிய தீவு இருக்கிறது. ஆனால் பேய் பயம் காரணமாக ஒருவரும் அங்கே குடியேறவில்லை.

ஒருவேளை ராபின்சன் க்ரூசோ இறங்கிய தீவாக இருக்குமோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x