Published : 23 Nov 2014 12:31 PM
Last Updated : 23 Nov 2014 12:31 PM

இந்த நாள் மட்டுமே இனியநாள்!

இந்தப் புத்தகத்தைப் பற்றி நாம் பேசும்முன் இந்தப் புத்தகத்தின் ஆசிரியரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். முழுக்கமுழுக்க கண் பார்வையற்றவரான இவருடைய சாதனைகள் எண்ணிலடங்காதது ( >www.jimstovall.com). பொதுவாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமோ அல்லது அதற்குமேலோ நாம் நமது வேலைக்கோ அல்லது தொழிலுக்கோ செலவிடுகின்றோம் அல்லவா!

அதற்கான அத்தனை பலனும் முழுமையாக நமக்கு கிடைக்கின்றதா? “இல்லை” என்பதுதான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கக்கூடும். சரி, இதற்கான காரணம் மற்றும் தீர்வு என்ன? இவற்றுக்கு விடையாக கிடைத்திருப்பதுதான் ஜிம் ஸ்டோவல் (Jim Stovall) எழுதிய “வின்னர்ஸ் விஸ்டம் டு சக்சீட்” (Winners’ Wisdom to Succeed) என்னும் இந்த புத்தகம். மிகவும் பரபரப்பாக விற்பனையான‘த அல்டிமேட் கிஃப்ட்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் இவர்.

ஆக்டிவிட்டி மற்றும் ப்ரொடக்டிவிட்டி என்ற இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டினை புரிந்துகொள்ளா மலிருப்பதே இதற்கு காரணம் என்கிறார் ஜிம் ஸ்டோவல். மேலும், கன்னாபின்னாவென்று உழைக்கத் தயாராயிருக்கும் நாம், அதில் எந்த அளவுக்கு ப்ரொடக்டிவிட்டி இருக்கிறது என்பதைப்பற்றி ஆராய்ந்து பார்ப்பதில்லை என்கிறார்.

ஒரு சேல்ஸ் கம்பெனியின் ஊழியர் களுக்கு பயிற்சியளிக்க செல்கிறார் ஜிம் ஸ்டோவல், கம்பெனியின் செயல்பாடுகளையும், தயாரிப்புகளையும் பற்றி மணிக்கணக்காக வாடிக்கை யாளர்களிடம் பேசுவதே அவர்களின் பிரதான வேலை. அந்தப் பேச்சிலிருக்கும் உபயோகத்தன்மை (Productivity) பற்றி அவர்களுக்கு உணர்த்த விரும்பிய ஜிம் ஸ்டோவல், அவர்களிடம் ஒரு ஸ்டாப் வாட்ச்சினை அளித்து ப்ரொடக்ட்டிவாக பேசும்போதோ, செயல்படும்போதோ மட்டும் அதனை உபயோகப்படுத்துமாறு கூறுகிறார்.

பின்னர் அந்நாளின் இறுதியில் அதனை கணக்கிடும்போது மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே இருப்பதைக் காண்கிறார். பெரிய அளவில் வெற்றிபெற, நிறைய சம்பாதிக்க அல்லது விரைவாக உங்கள் லட்சியங்களை அடைய, நடவடிக்கை மற்றும் ப்ரொடக்ட்டிவிட்டி ஆகியவற்றை பிரித்துப்பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் தினமும் ஒரு அரை மணி நேரமாவது ப்ரொடக்ட்டிவ்வாக செயல்படுங்கள் என்பதே ஜிம் ஸ்டோவலின் அறிவுரையாக இருக்கின்றது.

தள்ளிப்போடாதீங்க

எல்லோருக்கும் சிறுவயது முதலே அவரவரின் வாழ்க்கைக்கேற்ப சிறந்த கனவுகளும், லட்சியங்களும், திட்டங் களும் இருந்திருக்கும். ஆனால், யதார்த்த வாழ்க்கையில் அவையெல்லாம் காலப்போக்கில் நிறைவேறாமல் நழுவிச் சென்று கொண்டிருப்பதை உணர்கிறோம். எனினும், ஒவ்வொருமுறை அந்த கனவுகள் மற்றும் திட்டங்களைப்பற்றி நினைக்கும்போதும், அதை “ஒரு நாள்” அடைந்தே தீருவேன் என்று நமக்குநாமே சொல்லிக்கொண்டிருப்போம். அந்த “ஒரு நாள்” என்பது ஒருநாளும் வரப்போவதில்லை என்கிறார் ஜிம் ஸ்டோவல்.

இன்று நம் கையிலிருக்கும் வெள்ளிக்காசு, நாளை கிடைக்கப் போகும் தங்கக்காசைவிட பலமடங்கு மதிப்புமிக்கது. நிகழ்காலத்தில் செயல்படுத்தப்படும் ஒரு நல்ல திட்டமானது, எதிர்காலத்தில் செயல்படுத்தப்போகும் மிகச்சிறந்த திட்டத்தைவிட பலமடங்கு சிறந்தது என்கிறார் ஆசிரியர். நமது கனவுகளை அடைவதற்கான ஏதோ ஒரு நாளை எதிர்பார்த்து, நமது திட்டங்களையும், செயல்களையும் தள்ளிப்போடாமல் இன்றைய தினமே, அந்த ஒரு நாள் என தீர்மானித்து செயல்படும்போது வெற்றிக்கனி நம் கையில். நேற்று என்பது காலாவதியான காசோலை, நாளை என்பது முன்தேதியிட்ட காசோலை, இன்று என்பதே கையிலிருக்கும் ரூபாய் நோட்டு என்பதை உணர்ந்து செயல்படும்போது நம்முடைய கனவுகள் நனவாகின்றன என்கிறார் ஜிம் ஸ்டோவல்.

நேற்றும் நாளையும் ஒன்றல்ல

தொடர்ச்சியான முயற்சியும், செயல்பாடுகளுமே எதிர்காலத்தில் நாம் யார் என்பதை தீர்மானிக்கின்றன. மாறாக நேற்று நாம் என்னவாக இருந்தோம் என்பது முக்கியமல்ல என்கிறார் ஜிம் ஸ்டோவல். இதனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வின்மூலம் விளக்குகிறார். 1848-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி போராடிக்கொண்டிருந்தது அயர்லாந்து. அந்த நாட்டைச்சேர்ந்த ஒன்பது இளம் போராளிகள் இங்கிலாந்து அரசால் கைது செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு, ராணி விக்டோரியாவால் ஆஸ்திரேலியாவிலுள்ள இங்கிலாந்து சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சுமாராக நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ராணி விக்டோரியா ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார், அந்நாட்டு பிரதமர் சார்ல்ஸ் டாஃபியைப் பற்றி தெரிந்துகொண்ட ராணி விக்டோரியா வியப்பும், அதிர்ச்சியும் அடைகிறார். காரணம், இவரால் நாற்பதாண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட ஒன்பது தண்டனை கைதிகளில் ஒருவர்தான் அவர். மேலும், மற்ற எட்டுபேரும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மிகப்பெரிய பதவிகளில் இருப்பதையும் அறிந்துகொள்கிறார். மோசமான கடந்த கால நிகழ்வுகளை நமது திடமான செயல்பாட்டால் சிறந்ததாக மாற்றியமைக்க முடியும் என்பதே இவர்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி.

ஓவ்வொன்றும் முக்கியம்

ஒரு செயலை செய்யத் தொடங்கி முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறோம், இடையில் பல திட்டங்களையும், வழிமுறைகளையும் உபயோகித்து இறுதியில் நமது இலக்கினை அடைந்துவிடுகிறோம். இந்த செயல்பாட்டில் முக்கியமான தருணம் அல்லது திருப்புமுனை எது என்பதை நம்மால் கண்டுப்பிடிக்க முடியுமா?

நூறாவது ரன்னை அடித்து செஞ்சுரி போட்ட ஒரு பேட்ஸ்மேனுக்கு, அவர் அந்த மேட்சில் எடுத்த முதல் ரன் அந்த நூறாவது ரன்னைவிட மதிப்பு குறைந்ததாகிவிடுமா? நிச்சயமாக இல்லை. நூறாவது ரன்னை எட்டிப்பிடிக்க எடுக்கின்ற ஒவ்வொரு ரன்னும் முக்கியமானதுதானே? எத்தனை பேர் அந்த ஒரு ரன் இல்லாமல் தொண்ணுற்றி ஒன்பதில் அவுட் ஆகின்றார்கள்.

ஏன் சிலசமயம் எத்தனையோ ஜாம்பவான்கள் கூட ரன் ஒன்றைக்கூட எடுக்காமல் பூஜ்ஜியத்துடன் திரும்புகின்றார்கள். ஒவ்வொரு செயலும் அந்தந்த சூழ்நிலையில் மிக முக்கியமானதே. வெற்றியாளராக மாற வேண்டுமானால், ஒவ்வொரு அடியையும் திறமையாக எடுத்துவைக்க வேண்டியது அவசியம். இதுவே பெரும்பான்மையான வெற்றியாளர்களால் பின்பற்றப்பட்டு, எல்லா நேரத்திலும் அவர்களை வெற்றியா ளர்களாகவே வைத்திருக்க உதவுகிறது.

அறிவுரையை ஆராய்ந்துப் பாருங்கள்

நமக்கு மற்றவர்களிடமிருந்து எளிதில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒன்று “அட்வைஸ்”. ஒருவரிடமிருந்து அட்வைஸ் பெற விரும்புகிறீர்கள், அதை எவ்வாறு அனலைஸ் செய்து பயன் பெறுவது என்பதற்கான சிம்பிள் ரூல்ஸ்களையும் தந்திருக்கிறார் ஜிம் ஸ்டோவல். முதலில் அட்வைஸ் தருபவரின் திறமை மற்றும் நம்பகத்தன்மை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு அந்த சூழ்நிலையில் என்ன தேவை என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், மேலும் உங்கள் பிரச்சினையைப் பற்றி முழுமையாக அவர் உங்களிடம் கேட்டு அறிந்திருக்கவேண்டும்.

முக்கியமாக அட்வைஸ் தருபவர் அவரது சொந்த கருத்துக்களை உங்கள் மீது திணிப்பவராக இருக்கக்கூடாது. யார் என்ன சொன்னால் என்ன? முக்கியமாக நாம் படிக்க வேண்டியது நம்முடைய அனுபவத்தில் இருந்து படிக்கவேண்டிய பாடத்தை மட்டுமே என்று சொல்லும் ஆசிரியர் நமது வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் அனுபவப் பாடமே சிறந்த அட்வைஸ் என்கிறார்.

பிரச்சினைகளை எதிர்கொண்ட வர்களை மட்டுமே உலகம் நினைவில் வைத்துக்கொள்கின்றது. ஒருவர் நல்லபடியாக பிறந்து, நல்லபடியாக வளர்ந்து, நல்லபடியாக வாழ்ந்து, நல்லபடியாக போய்ச்சேர்ந்தார் என்பது வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய நிகழ்வு இல்லை.

இத்தனை பிரச்சினைகளை சந்தித்தார். இப்படிப்பட்ட சொல்யூஷன்களை கொண்டுவந்தார் என்பதுதான் வரலாற்றில் இடம்பிடிக்கின்றது. பல்வேறு பிரச்சினையை எதிர்கொண்டு பல்பைக் கண்டுபிடித்த எடிசன் தான் வரலாற்றில் இருக்கின்றாரே தவிர அந்த பல்பை எரியவிட்டு உபயோகிக்கும் சாமான்யன் வரலாற்றில் இடம்பிடிப்பதில்லை. ஜிம் ஸ்டோவல் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி, இன்றே செயலாற்ற ஆரம்பித்தால் நாம் கனவுகாணும் வாழ்க்கை நிச்சயம் நம் வசமாகும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x