Published : 15 Aug 2014 10:00 AM
Last Updated : 15 Aug 2014 10:00 AM

இது `கார்’ காலம்!

ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருளாக, பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருந்த அனைத்துமே இன்று அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன. இந்த வரிசையில் இன்று நடுத்தர மக்களுக்கு கார் என்பது அத்தியாவசியமான போக்குவரத்து சாதனமாக மாறிவிட்டது.

1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் கார் என்றாலே அது அம்பாசிடர் கார்தான். அடுத்து சிறிய ரகக் காராக இந்திய வீதிகளில் வலம் வந்தது ஃபியட். சஞ்சய் காந்தியின் பெரு முயற்சியால் இந்தியாவில் அடியெடுத்து வைத்தது சுஸுகி. மத்திய அரசின் கூட்டு முயற் சியில் உருவான மாருதி சுஸுகி, இந்தியாவில் அதிக எண்ணிக் கையில் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இன்று வளர்ந்துள்ளது.

தாராளமயமாக்கலுக்குப் பிறகு ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட மிகப் பெரும் வளர்ச்சி, பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தடம் பதிக்க வழி வகுத்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர திட்டத்தில் போடப்பட்ட நெடுஞ்சாலை வசதி, போக்குவரத்தை எளிதாக்கியது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் தமிழகத்தில் தங்களது தொழிற்சாலைகளை அமைத்தன. அந்த வகையில் முதலில் வந்தது கொரியாவின் ஹூண்டாய். அடுத்தது அமெரிக்காவின் ஃபோர்டு. இதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் மோட்டார்ஸுடன் கைகோர்த்து உற்பத்தியைத் தொடங்கியது ஜப்பானின் மிட்ஸுபிஷி. 2000-வது ஆண்டுகளுக்குப் பிறகு நிசான், ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கார்களைத் தயாரித்தன.

இந்தியாவில் மட்டும் இப்போது 14 நிறுவனங்கள் கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் மஹிந்திரா, டாடா மோட் டார்ஸ் நிறுவனங்கள் மட்டும்தான் இந்திய நிறுவனங்கள். மற்றவை அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்கள்தான். வோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ, டொயோடா, மெர்சிடெஸ் பென்ஸ், ஆடி ஆகிய நிறுவனங்கள் தங்கள் நாட்டிலுள்ள ஆலையிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இங்கு அசெம்பிளி செய்து விற்பனை செய்கின்றன. இவற்றில் சில இங்கேயே ஆலையை அமைத்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 8.76 கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2.2 கோடி கார்களைத் தயாரித்து கார் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 38 லட்சம் கார்கள் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. உற்பத்தியில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் மே 27 முதல் ஆகஸ்ட் 12 வரையான காலத்தில் இந்தியாவில் 14 மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டாடா ஜெஸ்ட், ஹூண்டாய் எலைட் ஐ20, ஆடி ஏ3, ஃபியட் புன்டோ எவோ, ஹோண்டா மொபிலியோ, மெர்சிடெஸ் பென்ஸ் சிஎல்ஐ கிளாஸ், வோக்ஸ்வேகன் போலோ, ஃபோர்ட் ஃபியஸ்டா, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, டொயோடா கொரில்லா ஆல்டிஸ் ஆகிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் மிகக் குறைந்த காரின் விலை ரூ. 4.56 லட்சம் (ஃபியட் புன்டோ இவோ). அதிகபட்ச விலையுள்ள கார் மெர்சிடெஸ் பென்ஸ் சிஎல்ஏ கிளாஸ் (ரூ. 68.50 லட்சம்).

கார் வாங்குவதற்கு வங்கிகள் சுலபத் தவணையில் கடன் அளிக்கின்றன. சில கார் தயாரிப்பு நிறுவனங்களே நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளோடு கூட்டு வைத்து வாடிக்கையாளர்களுக்கு சுலப கடன் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன. இது கார் காலம் என்றால் அது சரிதானே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x