Published : 06 Jun 2016 12:28 PM
Last Updated : 06 Jun 2016 12:28 PM

கூவமாக மாறும் மதுரை வைகை ஆறு

உலக சுற்றுச்சூழல் தினத்தில் அவலம்

மதுரை நகர் பகுதி வழியாக சுமார் 8 கி.மீ. பயணிக்கும் வைகை ஆற்றில், ஒரு நாளைக்கு 98 லட்சம் லிட்டர் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால், படிப்படியாக வைகை கூவமாக மாறி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி, இந்த மாவட்டங்களின் குடிநீர், விவசாயப் பாசனங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. குறிப்பாக, மதுரை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக வைகை ஆறு இருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு, தூர்வாருதல், கண்காணிப்பு இல் லாமல் வைகை ஆறு மாச டைந்து வருகிறது.

வைகை ஆற்றில் கரையோரப் பகுதிகளில் மது அருந்துவோர் பாட்டில்களை உடைத்து போடு வதுடன், வீடுகளில் சேகரமாகும் கழிவுகளையும் மக்கள் கொட்டு கின்றனர். காலாவதியான ஊசி, மாத்திரைகளை ஆற்றில் கொட்டுகின்றனர். நள்ளிரவில் வாகனங்களில் கொண்டு வரப்படும் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், உணவுக் கழிவுகள் தின ந்தோறும் கொட்டப்படுகிறது. இதுதவிர கரையோர மக்கள் ஆற்றிலேயே மலம் கழிப்பது, செப்டிக் டேங்க் கழிவுநீரை கலக்க விடுவது, சாக்கடைநீர், தொழிற்சாலைகளின் கழிவுநீர் பகிரங்கமாகக் கலக்கிறது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது: தினமும் 98 லட்சம் லிட்டர் சாக்கடை நீர் கலப்பதால், மதுரையில் ஒட்டுமொத்த வைகை ஆறும் தற்போது கூவம் போல மாறி வருகிறது. அதனால், வைகை ஆற்றங் கரையோர குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் தண்ணீர் மாசு அடைந்துள்ளது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வயிற்றுப்போக்கு, மலேரியா உட்பட பல விதமான தொற்றுநோய்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற கடந்த 2014-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதில் நீதிமன்ற உத்தரவுப்படி 34 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள கருவேல மரங்களை அகற்றினர். ஆனால், அந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளாததால் தற்போது மீண்டும் வைகை ஆற்றில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.

கடந்த காலத்தில் வைகை யாற்றின் கரையில் பல இடங்களில் படித்துறைகள் இருந்தன. மரங்கள் நிறைந்த சோலையாக இருந்த அந்த படித்துறைகளில், மக்கள் நீராடி வந்துள்ளனர். தற்போது அந்த படித்துறைகள் மண் மூடி இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. ஆற்றில் சிறிய ஓடைப்போல சாக்கடை நீர் மட்டுமே ஓடுகிறது. பருவமழை காலங்களில் மட்டுமே வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற நாட்களில் பெரும்பாலும் வைகை வறண்டு காணப்படுகிறது. மதுரையில் ஆண்டு சராசரி மழையளவு 844 மி.மீ. தற்போது இந்த அளவுக்கு மழை பெய்வதில்லை. தமிழகத்தில் தற்போது கிடைக்கும் மொத்த நீர்வளத்தில் வைகையின் பங்கு வெறும் 6.7 சதவீதம் மட்டுமே.

வைகை ஆறு மாசுபடுவதை தடுக்காவிட்டால், 2020-ம் ஆண்டில் மதுரையில் நிலத்தடி நீர்மட்டம் வறண்டு, கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒட்டுமொத்த மக்களும் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் வைகை ஆற்றின் வரலாறு, பெருமைகளை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி பாதுகாக்க மாநகராட்சியும், தன்னார் வலர்களும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x